Saturday, May 18, 2024
Home » பால காண்டம் படித்தால் இத்தனை நன்மையா?

பால காண்டம் படித்தால் இத்தனை நன்மையா?

by Kalaivani Saravanan

சென்ற இதழில் பெரியவாச்சான் பிள்ளை, ஆழ்வார்கள் பாசுரங்களிலிருந்து தொகுத்த பாசுரப்படி ராமாயணத்தின் பால காண்டத்தை கொடுத்திருந்தோம். இந்தியாவில் ராமாயணத்தை நல்ல ஆன்மிக உணவு பெறுவதற்காகவும் மனசாந்திக்காகவும் வாசிக்கிறோம். ஆனாலும், அதிலே உலகியல் நன்மைகளும் அடங்கி இருக்கின்றன. நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விதமான கஷ்டங்களுக்கு ராமாயண பாராயணம் செய்வது பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சீதா கல்யாணப் பகுதியை மட்டும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பாராயணம் செய்தால் திருமணத்தடைகள் விலகும். நல்ல சம்பந்தம் அமையும்.

திருமணமாகி வெகு காலம் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர காமேஷ்டி யாகம் என்கின்ற பகுதியை காலை வேளை பூஜை அறையில் தொடர்ந்து வாசித்தால் சிறந்த பரிகாரமாக இருக்கும். இது தவிர சகோதர உறவுகள் மேம்படவும், தந்தை பிள்ளை அன்பு அதிகரிக்கவும், வீட்டில் பிரச்னையில்லாமல் குடும்ப ஒற்றுமை திகழவும், மக்களிடம் அன்பு தழைக்கவும், ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு நன்றாக இருக்கவும், மனதில் தைரியம் பிறக்கவும், பிறரிடத்தில் அன்பு பிறக்கவும், பாலகாண்ட பாராயணம் சிறந்தது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் பால காண்டத்தின் மூல பாடத்தை முறையாகப் பாராயணம் செய்வது கஷ்டம். எல்லோராலும் முடியாது. ஆனால் சென்ற இதழில் நாம் கொடுத்துள்ள பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி பாலகாண்ட ராமாயணப்பகுதியின் 25 சிறிய வரிகளை பாராயணம் செய்தால் அது பாலகாண்ட பாராயணம் செய்வதற்கு சமமானது. மேலே கண்ட பலன்கள் கட்டாயம் கிடைக்கும். இந்த பாலகண்டத்தில் ராமன் யார்? அவன் எதற்காக ராமனாக அவதாரம் எடுத்தான்? யாருக்குப் பிள்ளையாகப் பிறந்தான்? என்கிற விவரத்தை கூறி, அவன் விஸ்வாமித்திரரோடு யாகத்தை காக்கச் சென்றதும், தாடகையை அழித்ததும், அகலிகைக்கு சாபவிமோசனம் தந்ததும், மிதிலையில் வில் முறித்து சீதையை மணந்ததும், திரும்பும்போது பரசுராமனை வெற்றி கொண்டதும், திரும்ப அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகத்துக்கு தயாரானதும் என்று வரிசையாக நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்.

எல்லாமே ஒரு வரியில். இந்த வரிகளை நாம் பாராயணம் செய்கின்ற பொழுது அத்தனை சுகமாக இருக்கும். அந்தக் காட்சிகள் நம்முடைய மனதிலே விரியும். பாசுரப்படி ராமாயணத்தைத் தொடங்கும் பொழுதே சாட்சாத் வைகுந்தத்தில் இருக்கும் மகாவிஷ்ணு தான் ராமனாக அவதாரம் செய்தார் என்பதை ‘‘திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ’’ என்கின்ற வரிகளாலே தெரியப்படுத்துகின்றார். இந்த வரிகள் திருமங்கை ஆழ்வார் திருநாங்கூர் அரிமேய விண்ணகர பாசுரத்தின் வரிகளாகும். (திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம்)

இதில் இன்னொரு சுவாரசியம் என்ன என்று சொன்னால் பரமபதத்தில் இருந்தபடி எப்படி ஏழு உலகையும் தனிக்கோல் செலுத்தி ஆட்சி செய்தாரோ, அதைப்போலவே இராமன் பட்டா பிஷேகம் செய்து கொண்டு ‘‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வாழ்வித் தருளினார்’’ என்று முடிக்கிறார். தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் என்கின்ற வரிகளில் மூலமாக பரமபதத்தில் இருக்கும் பரவாசுதேவன் குறிப்பிடப்படுகிறார். காரணம் பரமபதத்தில் மட்டும் பெருமாள் அமர்ந்த நிலையில் இருப்பார. பாற்கடலில் துயில் கொள்ளும் நிலையில் இருப்பார். இந்த வேறுபாட்டை மிக நுட்பமாக ஆழ்வார்கள் கையாண்டு இருக்கிறார்கள்.

அடுத்து பகவானுடைய ஆணையானது இணையில்லாதது. அதற்கு எதிரான சர்வலோகத்திலும் இருக்க முடியாது. அதனால், அது தனிக் கோல் என்று சொல்லப்படுகிறது.
உலகமே அந்த ஆணைக்கு கட்டுப்பட்டுதான் இயங்குகிறது. தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் என்கின்ற வரிகளாலே அவன் பரமபதத்தில் இருந்தாலும்கூட அவருடைய ஆணையானது தங்கு தடை இன்றி சர்வ உலகங்களிலும் வியாபித்து வழி நடத்தும் என்பது விளங்குகிறது. அதனால், இறைவன் நேரே வந்துதான் காக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அவன் மனதின் எண்ணங்கள் (சங்கல்பம்) ஆணையாக உருவெடுக்கும்.

அவன் தேவாதி தேவனாக விளங்கக் கூடியவன். இதை அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கிற வார்த்தையாலே விளக்குகிறார் பெரியவாச்சான் பிள்ளை. அயர்வரும் அமரர்கள் அதிபதி என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி முதல் பாசுர வரி. எனவே இந்த வரியை பாராயணம் செய்தால், நம்மாழ்வார் திருவாய்மொழியை பாராயணம் செய்த பலன் நமக்குக் கிடைத்துவிடும்.

அடுத்து வைகுந்தம் எப்படிப்பட்ட பெருமை உடையது என்பதை நலம் அந்தம் இல்லதோர் நாடு என்று வர்ணிக்கிறார். நலம் என்றால் எல்லாவிதமான இன்பங்களும் என்று பொருள். அந்தம் என்றால் முடிவு. உலகத்திலே எந்த இன்பத்தை அனுபவித்தாலும் அதற்கு ஒரு முடிவு இருக்கும். பரமபதத்தில் இன்பத்திற்கு எல்லை இல்லை.

அப்படி இருந்தால்தானே அது பரமபதமாக முடியும்? ஆனால் பரமபதத்துக்குச் சென்று அதனை தரிசனம் செய்ய முடியுமா? இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரைக்கும் தரிசனம் செய்ய முடியாது. பொதுவாகவே வைணவ திருத்தலங்கள் 108 என்று சொல்லுவார்கள். அதிலே 106 திருத்தலங்கள் இந்த நிலவுலகத்தில் இருக்கின்றன. இரண்டு திருத்தலங்கள் மட்டும் இந்த நிலவுலகத்தில் இல்லை. அத்தலங்களை நாம் மனித உருவில் பார்க்க முடியாது. ஒன்று திருப்பாற்கடல் இன்னொன்று திருப்பரமபதம்.

ஆனாலும் நாம் இதை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருக்கிறோம் அல்லவா! அதற்காக பகவான் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறான். அவன் அந்த இரண்டு இடத்திலும் தான் எந்த நிலையில் இருப்பான் என்பதை நமக்கெல்லாம் காட்டிக் கொடுப்பதற்காக திருவரங்கம் திருக்கோயிலில் வந்து சேவை தருகின்றார். திருவரங்கம் என்பது 108 திருத்தலங்களின் தலையாய கோயில். பரமபதத்தினுடைய பிரதிபிம்பம். பாற்கடலில் எந்த நிலையில் அவன் கண் துயல்கிறானோ அதைப் போலவே ஸ்ரீரங்கத்தில் அரவணையில் துயில்கின்ற காட்சியை நாம் தரிசிக்க முடியும். அதனால்தான் திருவரங்கத்தைப் பற்றிய ஒரு ஸ்லோகத்தில் இப்படிச் சொன்னார்கள்.

“காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேசய பிரத்யட்சம் பரமம் பதம்’’

திருவரங்கம் என்பது பரமபதம். அங்கே ஓடுகின்ற காவேரி நதிதான் பரமபதத்திற்கு முன்னால் ஓடுகின்ற விரஜா நதி. அந்த பரமபதத்தில் நித்தியசூரியனுக்கு காட்சி தருகின்ற பரவாசுதேவன்தான் இங்கே ரங்கநாதன். எனவே, ராமன் அவதாரம் செய்வதற்கு முன்னாலேயே பரமபதநாதன் அயோத்திக்கு வந்து சேர்ந்து விட்டாராம். தானே விரைவில் அயோத்தியில் தசரதனுக்கு பிள்ளையாக, இந்த உலகம் உய்வடைவதற்காக அவதரிக்க போகிறேன் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு பரவாசுதேவன் அயோத்திக்கு வந்து சேர்ந்துவிட்டான். அதுதான் பிராணவகார விமானத்தோடு கூடிய ஸ்ரீரெங்கநாதப் பெருமாள். அவரை பெரிய பெருமாள் என்று அழைக்கிறோம். அப்போது பெருமாள் யார்?

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi