ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர்-கமுதி புறவழிச்சாலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் எல்லை பகுதியில் உள்ள பார்த்திபனூரை சுற்றியுள்ள 54-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, தொழில், வியாபாரத்திற்காக தினமும் பார்த்திபனூர் வந்து செல்கின்றனர். தினசரி காலை, மாலை நேரங்களில் அதிகளவில் வாகனம் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் காலவிரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ.31.47 கோடி செலவில் 3.6 கிலோ மீட்டர் தொலைவிற்கு பார்த்திபனூர்-கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. பாலங்கள் கட்டப்பட்டு ஜல்லி போடப்பட்டு 90% பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளதால் அவதிக்கு ஆளாகி வருவதாக பார்த்திபனூர் மக்கள் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.