Sunday, May 26, 2024
Home » ராமனின் திருமணத்தை நிச்சயித்து நடத்தியது யார்?

ராமனின் திருமணத்தை நிச்சயித்து நடத்தியது யார்?

by Kalaivani Saravanan

அந்தக் காலத்தில் குரு சீடர்களுக்கு கல்வியை மட்டும் தரவில்லை. அவர்களுடைய வாழ்க்கைக்கு தகுந்த துணையையும் தேடித் தந்தார்கள். பெரும்பாலும் தங்கள் சீடர்களுக்கு ஏற்ற துணையை ஆசிரியர்களே தேர்ந்தெடுத்த காலம் உண்டு. குரு நிச்சயித்த திருமணத்திற்கு, வேறு தோஷங்கள் கிடையாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. விஸ்வாமித்திர மகரிஷியினுடைய முக்கிய நோக்கமே, ராமனையும் சீதையையும் இணைத்து வைப்பதுதான்.

ராமாயணக் கதைக்கு அடிப்படையாக விளங்கும் விஷயம், சீதாகல்யாண வைபவம்தான். இந்தத் திருமணம் நடைபெறுவதால் மட்டுமே ராமாயணத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்று, ராவணவதம் நிகழும். அதற்காகவே, லோக மாதாவான சீதை, சிறை இருந்தாள். அசோகவனத்தில் கடும் தவம் இருந்தாள். ஆழ்வார்கள், ராமனுடைய பெருமையைவிட சீதையினுடைய தியாகத்தைக் காட்டுகின்றது `ராமாயணம்’ என்பதை பின்வரும் பாசுரத்தால் சொன்னார்கள்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத
அறிவினால் குறையிலமே.

– (திருவாய்மொழி)

பாலகாண்டம் பல நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தாலும், பிரதானமானது “சீதாகல்யாணம்” தான். ஏழு காண்டங்கள் கொண்ட ராமாயணத்தின் அஸ்திவாரம், பாலகாண்டம். இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியைப் பார்க்கிறோம். ராமன், வில் ஒடிக்கிறான். சீதைக்கும் ராமனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஜனகனுக்கு பெரும் மகிழ்ச்சி. மிதிலை மக்களுக்கும் கொண்டாட்டமான உணர்வு. ஜனகன், விஸ்வாமித்திரரிடம் ஒரு கேள்வியைக் கேட்கின்றார்.

‘‘முனிவரே! உம்முடைய ஞானப் புதல்வனான ராமனின் திருமணமாகிய கேள்வியை உடனடியாக நீரே முன் நின்று நடத்துவதை விரும்புகின்றீரா? அல்லது இந்த செய்தியை எல்லோருக்கும் தெரிவித்து, தசரதன் தன்னுடைய உற்றார் உறவினர்களுடன் இங்கே வந்த பிறகு, திருமணம் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றீரா? அற்புதமான பாட்டு,

உரைசெய் எம்பெருமான் உன்
புதல்வன் வேள்விதான்
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானைஅவ் வரசரை
இவ்வழி அழைத்தல் வேட்கையோ?
இங்கே இரண்டு முக்கியமான குறிப்புகள் இருக்கின்றன.

1. விஸ்வாமித்திர மகரிஷியை ராமருடைய தந்தையாக ஜனகன், கருதுவதை இப்பாடல் தெரிவிக்கின்றது. (எம்பெருமான் உன் புதல்வன்).

2. திருமணம் என்பது ஏதோ ஆணும் பெண்ணும் வாழ்கின்ற ஒரு ஒப்பந்தம் அல்ல. “ஏதோ வாழ்ந்தோம்; இரண்டு குழந்தைகளை பெற்றோம்” என்பது மட்டுமே நோக்கமல்ல. அது ஒரு அறம்.

அறத்தின்படி வாழ்ந்து அனைவருக்கும் உபயோகமாக இருக்க வேண்டும். ஆன்மிக வாழ்வுக்கு துறவறத்தைவிட, இல்லறம் சாலச் சிறந்தது என்பதால் திருமணத்தை வேள்வி என்று ஜனகன், குறிப்பிடுகின்றார். குரு தன்னுடைய சீடனுக்குத் திருமணத்தை நிச்சயித்துவிட்டால் அதை சீடனின் தந்தை நிராகரிப்பதில்லை. ஆத்மாவுக்கு வேண்டியதைச் செய்யும் குருவானவர், வாழ்க்கைக்கும் வேண்டியதைச் செய்வார் என்கின்ற நம்பிக்கை அன்றைக்கு இருந்தது.

ஆயினும், விஸ்வாமித்திர மகரிஷி, “பெற்ற தந்தைக்கு தெரியாமல் திருமணம் நடத்துவது முறையல்ல; ஆகையினால் இங்கே நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம், நீ தசரதனுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று சொல்ல, ஜனகன், தசரதனுக்கு ஓலை அனுப்பி வரவழைக்கின்றார். சரி, ஜனகன் அரண்மனையில் இருந்த சிவதனுசுவை (வில்) உடைத்த செய்தி தசரதனுக்கு தெரிந்ததா என்று ஒரு கேள்வி உண்டு. ஜனகனிடம் இருந்து வந்திருந்த தூதுவர்கள், தசரதனிடம் ‘‘சிவதனுசுவை தங்கள் திருமகன் ராமன் ஒடித்துவிட்டான்’’ என்று சொன்னவுடனே, ராமனைப் பெற்ற தசரதனுடைய தோள்கள் பூரித்ததாம். அப்பொழுது ஒரு வார்த்தை அவன் சொல்லுகின்றான்.

‘‘சில நாட்கள் முன்னால் வானமே இடிந்தது போல ஒரு ஓசை கேட்டதே. அந்த வில் முறிந்த பொழுது ஏற்பட்ட ஒலிதானா? நாங்கள் என்னவோ என்று நினைத்துவிட்டோம்’’ என்கின்றான். அதைவிட மிக முக்கியமான இன்னொரு செய்தியும் ராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ளுகின்றோம். தன்னை கலக்காமல் விஸ்வாமித்திர மகரிஷியால் நிச்சயிக்கப்பட்ட, தன்னுடைய மகனின் திருமணச் செய்தியைக் கேட்டவுடன், ‘‘என்னைக் கேட்காமல் எப்படி என்னுடைய மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யலாம்?’’ என்று தசரதன் கோபப்படவில்லை.

செய்தியைக் கொண்டு வந்த தூதுவர்களுக்கு பொன்னையும், பொருளையும் வாரிவாரி வழங்குகின்றான். பிறகு விரைவாகத் தன்னுடைய குலகுரு வசிஷ்டருடன், படைகள் புடைசூழ மிதிலைக்குப் புறப்படுகிறான். தசரதன், தன்னுடைய படைகளுடன் மிதிலை வந்த உடனே, ஜனகன் அவரை எதிர்கொள்கிறான். பிள்ளையைப் பெற்ற தசரதனும் மகளைப் பெற்ற சனகனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். இப்பொழுதும் திருமணத்திற்கு முன், மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்கு முன், பெற்றவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பு பாராட்டி மகிழும் சம்பந்தி வரவேற்பு நிகழ்ச்சி ஒரு பகுதியாக இருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு மண்டபத்தில் சீதையை அழைத்து வரச் செய்து, தன்னுடைய உற்றார் உறவினர்களிடம் முறையாக தசரதன் பெண் பார்க்கும் படலமும் (formal) நடக்கிறது. அப்பொழுது ஊரார் முன்னிலையில் இருவரின் குடும்பச் சிறப்பு பற்றிய செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அதாவது, குலமுறை சொல்லுதல் (கோத்திரப் பிரவரம்) என்பார்கள். இன்றும் இது நடைமுறையில் உண்டு. அதற்குப் பிறகு மணநாள் நிச்சயிக்கிறார்கள். இங்கேயும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. தசரதன் தன்னுடைய குல குருவாகிய வசிட்டரிடம் நாள் பார்க்கச் சொல்லவில்லை.

விஸ்வாமித்திரர் தானே ராமனுக்குச் சீதையைத் தேடித் தந்தவர். அதனால், அவரையே தன்னுடைய இன்னொரு குருவாக கருதிப் பணிந்து, ராமருக்கும் சீதைக்கும் திருமண நாளைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறான்.

“கொல் உயர் களிற்று அரசர்
கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி,
கௌசிகனை, ‘மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை
மடந்தை மண நாளாம்
எல்லையில் நலத்த பகல் என்று?
உரை செய்க’ என்றான்.
– என்பது கம்பன் காட்டும் சித்திரம்.

விஸ்வாமித்திரர் குறித்த நாள் எது தெரியுமா?

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi