Friday, May 17, 2024
Home » ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் திணறல்

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் திணறல்

by Karthik Yash

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் ஷர்மா களமிறங்கினர். டிரென்ட் போல்ட்டின் துல்லியமான வேகப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரோகித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் பிரெவிஸ் மூவரும் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, மும்பை அணி 2.2 ஓவரில் 14 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இஷான் கிஷன் 16 ரன் எடுத்து பர்கர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சன் வசம் பிடிபட்டார். மும்பை அணி 3.3 ஓவரில் 20/4 என மேலும் சரிவை சந்தித்த நிலையில், திலக் வர்மா – கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து 5வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். ஹர்திக் 34 ரன் (21 பந்து, 6 பவுண்டரி) விளாசி சாஹல் சுழலில் மாற்று வீரர் ரோவ்மன் பாவெல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பியுஷ் சாவ்லா 3 ரன், திலக் வர்மா 32 ரன் (29 பந்து, 2 சிக்சர்), ஜெரால்ட் கோட்ஸீ 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தப் போராடிய டிம் டேவிட் 17 ரன் எடுத்து பர்கர் வேகத்தில் போல்ட் வசம் பிடிபட்டார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. ஜஸ்பிரித் பும்ரா 8 ரன், ஆகாஷ் மத்வால் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட், பர்கர் 2, ஆவேஷ் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

* 3 கோல்டன் டக் அவுட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் வேகம் டிரென்ட் போல்ட் நேற்று 3 மும்பை பேட்ஸ்மேன்களை கோல்டன் டக் அவுட்டாகி அசத்தினார். ரோகித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு பெவிலியன் திரும்பினர். ரோகித்தை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் போல்ட்.

You may also like

Leave a Comment

nine + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi