Monday, April 29, 2024
Home » செம்மையான வாழ்வருளும் மகாசக்தி

செம்மையான வாழ்வருளும் மகாசக்தி

by Lavanya

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ

இதற்கு முன்பு முக வர்ணனையை பார்க்கும்போது வாக்பவ கூடம், கழுத்திலிருந்து இடுப்பு வரையிலும் இருக்கும் நாமங்களை மத்யம கூட வர்ணனை என்று பார்த்தோம். இந்த மத்யம கூடத்தைத்தான் காமராஜ கூடம் என்றும் பார்த்தோம். இந்த நாமத்திலிருந்து ஆரம்பிக்கப்போகும் வர்ணனை சக்தி கூடத்திற்கான வர்ணனை. மூன்றாவது கூடம் தொடங்குகின்றது. அதாவது இடைப்பகுதிக்கு கீழே இருக்கக்கூடிய பகுதிகள் அனைத்தும் சத்திய கூடமாகும். அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ என்கிற இந்த நாமம் இருக்கின்றது. இதில் பின்னால் உள்ள கடீதடீ என்கிற வார்த்தைகளை பார்க்கிறோம். இதை விளக்குவதற்கு முன்பு சிறிய உதாரணம் பார்ப்போம்.

நதி, தடம் என்கிற வார்த்தை என்று வைத்துக் கொள்ளுங்கள். நதிக் கரையைச் சொல்லும்போது அதை நதி தடம் என்று சொல்வார்கள். நதி முடிவடைந்து கரை எங்கிருந்து தொடங்குகிறதோ அதற்கு நதி தடம் என்று பெயர். நதியினுடைய முடிவுகரையினுடைய தொடக்கம். இந்த இடுப்பு எந்த இடத்தில் முடிகின்றதோ அந்த இடத்திற்கு கடீதடீ என்று பெயர். அந்த கடீதடீ என்கிற இடத்தில் அம்பிகைவஸ்திரத்தை சாற்றிக் கொண்டிருக்கிறாள். அந்த வஸ்திரத்தினால் அந்த கடீதடீ எப்படி இருக்கிறதெனில், ஒளி பொருந்தியதாக இருக்கிறது. பாஸ்வத் கடீதடீ… அதாவது ஒளி மிகுந்த என்று பொருள். இது எதனால் பிரகாசமாக இருக்கிறதெனில், வஸ்திர பாஸ்வத் கடீதடீ… அந்த இடைப்பகுதியில் அவள் கட்டியிருக்கின்ற வஸ்திரத்தினால் அது பிரகாசமாக இருக்கின்றது.

ஏனெனில், கௌஸும்ப வஸ்திரத்தை அதாவது செம்மையான வஸ்திரத்தை அணிந்திருக்கிறாள். செம்மையான வஸ்திரத்தை அணிந்து ஒளிரக்கூடிய இடைப்பகுதியை உடையவள். இதே நாமத்தில் முதல் வார்த்தையை கவனியுங்கள். அருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ… என்று வருகின்றது. ஏற்கனவே கௌஸும்ப வஸ்திரம் என்பது சிவப்பு நிறம் என்று சொல்லி விட்டோம். இதற்கு முன்னால் நாம் அருண என்கிற வார்த்தையை வசின்யாதி வாக் தேவதைகள் சேர்க்கிறார்கள். அதிலேயும் அருண கௌஸும்பம் என்றால், அந்த சிவப்பிலேயும் இன்னும் சிவப்பு. சரி இதோடு வாக் தேவதைகள் வர்ணிப்பதை நிறுத்தி விட்டார்களா எனில் நிறுத்தவில்லை. அதற்கு முன்பு இன்னும் ஒரு வார்த்தையை சேர்க்கிறார்கள். அதாவது அருணாருண கௌஸும்ப… செம்மையிலும் செம்மையான வஸ்திரம் என்கிறார்கள். அப்படியிருந்தும் வசின்யாதி வாக் தேவதைகளுக்கு திருப்தி ஆகவில்லை.

அதனால் அருணாருண… கௌஸும்ப… கௌஸும்பம் என்று சொன்னாலே சிவப்பு வஸ்திரம்தான். ஆனால், இந்த வார்த்தைக்கு முன்பு ஒரு அருண… இன்னொரு அருணா என்பதாக அருணாருண என்று வருகின்றது. நாம் பேச்சு வழக்கில் மிகுந்த சிவப்பு நிறமாக இருப்பதை செக்கச் செவேல்னு செவந்த வஸ்திரம் கட்டியிருக்கிறாள் என்று சொல்வோம். இங்கு செக்க அதற்கு அடுத்து செவேலென்று அதற்கு அடுத்து சிவந்த வஸ்திரம். அந்தச் சிவப்பானது அப்படிப்பட்ட சிவந்த நிறமாக இருக்கின்றது. இதை ஒரேயொரு சிவப்பு என்று நிறுத்திவிட முடியாது என்பதால் சிவப்புலேயும் சிவப்புலேயும் சிவப்பான வஸ்திரம். அத்தனை சிவப்பான வஸ்திரத்தை தன்னுடைய இடைக்குக்கீழே இருக்கிற பகுதியில் அணிந்திருக்கிறாள் என்பது இந்த நாமாவினுடைய அர்த்தம்.

இந்த நாமாவினுடைய சூட்சுமமான அர்த்தத்தை பார்ப்போம் வாருங்கள். ஏற்கனவே நாம் உதடு பற்றிய வர்ணனையில் அம்பிகையின் உதடானது சிவப்பு வர்ணம் என்று பார்த்தோம். அம்பிகையினுடைய சிவப்பு வர்ணம் எங்கெல்லாம் வருகின்றதோ அங்கெல்லாம் நாம் வித்யாவைச் சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஞானியான சிதானந்தர் கொடுக்கின்ற விளக்கத்தை பார்க்க வேண்டும். சிதானந்தரின் விளக்கத்தின்படி இந்த சிவப்பு என்பது சமாதி நிலையை அல்லது சமாதி அவஸ்தையை குறிக்கக் கூடிய வார்த்தையாகும். இப்போது இந்த நாமத்தில் மூன்று முறை சிவந்தது என்று வருகின்றது.
சிவப்பு… செக்கச் செவேலென்ற சிவப்பு என்றுதானே வருகின்றது. அதாவது அருண அருண கௌஸும்ப என்று மூன்று முறை வருவதை கவனியுங்கள். இப்போது இந்த மூன்று முறை சிவப்பு சொல்வதினால், சிவப்பு நிறம் சமாதி அவஸ்தை என்று பார்த்ததினால், இந்த மூன்று முறை சொல்லக்கூடிய சிவப்பு எதைக் குறிக்கிறது என்பதை கொஞ்சம் கவனமாக பார்த்து புரிந்த கொள்வோம்.

ஒரு சாதகன் சமாதி அவஸ்தையை அனுபவிக்கத் தொடங்கும்போது முதல் நிலையில் அவன் எப்படி அனுபவிப்பான் எனில், சவிகல்ப சமாதியை அனுபவிக்கிறான். இரண்டாவது நிலையில் நிர்விகல்ப சமாதியை அனுபவிப்பான். மூன்றாவது நிலைக்குப்போகும்போது இந்த இரண்டையும் தாண்டிய சகஜ சமாதியை அனுபவிப்பான். இப்போது இந்த மூன்று சிவப்பை ஏன் சொல்கிறார்கள் எனில், முதலில் சொல்லக் கூடிய அருணம் என்பது சவிகல்ப சமாதி, இரண்டாவது சொல்லக் கூடிய அருணம் என்கிற சிவப்பு நிர்விகல்ப சமாதி, கௌஸும்பம் என்கிற மூன்றாவது சொல்லக் கூடிய சிவப்பு சகஜ சமாதி. இப்போது அம்பிகையினுடைய வஸ்திரம் என்பது நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறதெனில், ஒரு சாதகனுக்கு சவிகல்ப நிர்விகல்ப சகஜ சமாதியை யார் பிரசாதிக்கிறாளோ அவள்தான் இந்த அருணாருண கௌஸும்ப வஸ்திரத்தை அணிந்திருக்கிறாள்.

மூன்று முறை சிவப்பு, சிவப்பு, சிவப்பு… என்று சொல்வதற்கு காரணமே இந்த மூன்று விதமான சமாதி அவஸ்தையை காட்டத்தான். இந்த மூன்று நிலைகளை யார் நமக்கு தரக்கூடியவளோ அவள்தான் இந்த சிவப்பு வர்ணத்திற்கு உரியவள். அவளுடைய வஸ்திரம்தான் நமக்கு சமாதி அவஸ்தை. இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். மகான்களுடைய கௌபீணம் என்று சொல்லப்படக் கூடிய வஸ்திரம்கூட அவர்கள் சமாதிஅவஸ்தையில் இருப்பதை காட்டுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். பழனி முருகனை கோவணாண்டியாக காட்டியிருப்பதை பாருங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் பக்தர்களுக்கு அந்த கௌபீணத்தையே பிரசாதமாக இன்றும் பழனி முருகனிடமிருந்து பெற்றுக் கொள்வதையும் ஆழமாக போய் அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது முற்றிலும் சமாதியையே தன்னுடைய கௌபீணமாக அணிந்திருக்கின்றான் என்பதை காட்டுவதற்காகவே இந்த விஷயம். இந்தக் கௌபீணத்திற்கு தாய்ச்சீலை என்று பெயர். அதாவது தாயினுடைய வஸ்திரம், அதாவது எல்லாவற்றிற்கும் மூலம் என்பது பெயர். இங்கு எது மூலம். சமாதி அவஸ்தையே மூலமாகும். இங்கும் நாம் தாயினுடைய வஸ்திரத்தைத்தானே நாமாவில் பேசுகின்றோம். எத்தனை ஒற்றுமை பாருங்கள். அமர்நீதி நாயனார் கதையில் சிவபெருமான் அடியாராக வருகின்றார். அமர்நீதியாரிடம் கௌபீணத்தை அளித்து பத்திரமாக வைத்துக்கொள். என்னிடம் இரண்டுதான் உள்ளது என்கிறார். ஆனால், காலப்போக்கில் கௌபீணம் கிழிந்து போய் விட்டது. மீண்டும் சிவபெருமான் அடியார் வேஷத்தில் வந்து கௌபீணத்தை கேட்கிறார். அமர்நீதியாரால் அளிக்க முடியவில்லை. ஆனால், சிவனடியாரோ எனக்கு இந்த கௌபீணம்தான் வேண்டும் என்கிறார், எனவே, ஈசன் தன்னுடைய இன்னொரு கௌபீணத்தை எடுத்து தராசுத் தட்டில் வைத்து எடைக்கு எடை அளிக்கச் சொல்கிறார்.

அமர்நீதியாரோ தன்னுடைய சொத்து முழுவதையும் வைக்கிறார். கடைசியில் தன் மனைவி மக்கள் என்று எல்லாவற்றையும் வைக்கிறார். ஒன்றும் மாற்றம் இல்லை. இறுதியாக தானே ஏறி அமர்நீதியார் அமர்ந்து விடுகின்றார். அப்போதும் தராசுத் தட்டு அப்படியே இருந்து விடுகின்றது. அப்போதுதான் அமர்நீதி நாயனாருக்கு இது கௌபீணம் மட்டுமல்ல. ஈஸ்வரனால் அளிக்கப்படும் சகஜ சமாதி என்கிற உயர்ந்த நிலை என்பதை அறிந்து மெய்சிலிர்த்து அழுகின்றார். ஈசனும் காட்சி தந்தருளினார். எனவே, அம்பிகையின் இடையில் கட்டியிருக்கும் வஸ்திரமானது சமாதி அவஸ்தையை குறிப்பதாகும். இந்த விஷயங்கள் அனைத்தையும் வெறுமே பார்த்து விட்டு நகர முடியாது. இந்த நாமத்திற்கான தெய்வம் தில்லை காளி. இவ்வாலயத்தினுள் நுழைய மென்மையாய் ஒரு தணல் நம்மை சூழ்ந்து கொள்ளும். காளியின் உக்கிரமும், பிரம்மசாமுண்டியின் சாந்தமும் அதில் ஒரு சேரக் கலந்திருக்கும்.

ஒரு மாபெரும் நிகழ்வின் தாக்கம் சந்நதிகளில் அதிர்வுகளாய்விரவியிருக்கும். கோயிலின் முகப்பிலிருந்து நேர் சந்நதியில் பிரம்மசாமுண்டி நான்கு முகங்களோடு மலர்ச்சியாய் காட்சி கொடுப்பதை பார்க்க மேனி சிலிர்த்துப்போடும். எல்லா அபிஷேகங்களும் தில்லை அம்மனுக்கு செய்யப்படுகிறது. தேன் அபிஷேகம் தில்லை அம்மனுக்கு மிகவும் உகந்ததாகும்.தில்லை காளி தனியே உக்கிரமாய் அமர்ந்திருக்கிறாள். ஆனால், நெருங்கி வருவோரை கருணை மழையால் நனைக்கிறாள். முகத்தில் பொங்கி வழியும் கோபத்தின் நடுவே, மெல்லிய புன்னகையில் அருள் மழைப் பொழிகிறாள். தில்லை காளியன்னைக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வெறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.

காளியன்னையை குங்குமம் கொண்டு சிவக்கச் செய்திருக்கிறார்கள். அன்னையை வெண் உடையில் அலங்கரித்திருக்கிறார்கள். குங்குமமும், வெண்மையும் கலந்த காளியன்னை வெண்சிவப்பாய் ஒளிர்கிறாள். அருகில் வருவோரின் வாழ்வில் ஒளியூட்டுகிறாள். அவளின் சந்நதியில் சிறிது நேரம் நிற்க ஜென்மங்களாய் வந்த தீவினைகளை தன் அருட்பார்வை கொண்டு கணநேரத்தில் களைகிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து காளியின் முன்பு அமர பாதிப்புகள் பஞ்சாய் பறந்து போகும். கைகூப்பி வேண்டியதைக் கேட்போருக்கு இக்கோயில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். சாக்தம் எனும் சக்தி உபாசகர்களுக்கு இக்கோயில் ஒரு தவக்குகை.

இக்கோயில் மிகத்தொன்மையானது. தில்லை அம்மனின் கருவறையைச் சுற்றி காணப்படும் கோஷ்ட மூர்த்திகள் அம்பிகையின் பல்வேறு சக்தி அம்சங்களைத் தாங்கி அழகிய சிலையாக, அருள் பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கின்றனர். தெற்குப் பிராகாரத்தில் வினாயகப் பெருமான் ஏழு திருக்கரங்களுடன் அருளும் கோலம் பார்க்க அரிதாகும். நின்ற நிலையில் வீணை வாசிக்கும் கலைமகளின் சிற்பம் இத்தலத்து அற்புதம். வடக்குப் பிராகாரத்தில் துர்கையும், சண்டிகேஸ்வரியும் அருள்சுரக்கும் கண்களாய் காட்சி தருகிறார்கள். தில்லை எனும் சிதம்பரத்திற்கு செல்லுங்கள். அம்பலக்கூத்தனையும், தில்லை காளியையும் தரிசித்திடுங்கள். வாழ்வில் வளம் பல பெற்றிடுங்கள். தீவினைகளை களைந்திடுங்கள்.

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

You may also like

Leave a Comment

seventeen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi