
புதுச்சேரி: புதுச்சேரியில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிறந்து 29 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்து கொலை செய்த தாயை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் சென்னை மற்றும் புதுச்சேரி சாலையோரங்களில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் 2-வதாக சங்கீதாவை திருமணம் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமான நிலையில் குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம் பாக்கத்துக்கு வந்தார். இருவரும் அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் வசித்து வந்தனர். பின்னர் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர்.
இன்று காலை கண்விழித்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை தேடினர். இந்நிலையில் மனப்பட்டு சுடுகாட்டில் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்டு நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை தோண்டியெடுத்து விசாரித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த குமரேசன், சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர்.
அப்போது மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தை தான் என்பது தெரிந்தது. இதற்கிடையே போலீசார் இருவரிடம் விசாரணையில் ஈடுபட்ட போது சங்கீதாவே தனது குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்தது தெரியவந்தது. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நள்ளிரவில் குழந்தையை தூக்கி சென்று உயிருடன் மண்ணில் புதைத்ததாக சங்கீதா தெரிவித்தார். குழந்தையை மண்ணில் புதைத்து விட்டு காணாமல் போனதாக நாடகம் ஆடிய சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.