மதுரை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கும்’என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் பரவனாறு பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கக்கூடிய பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்காக என்எல்சி 6 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை செய்து வருகிறது. இப்பணிகளுக்கு ஏற்கனவே 304 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டர் நிலங்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் 30 ஹெக்டர் மட்டும்தான் நில உரிமையாளர்கள் இன்னும் என்எல்சி நிறுவனத்திற்கு ஒப்படைக்கவில்லை.
தற்போது என்எல்சியின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு, இந்த பரவனாறு மாற்றுப்பாதை மூலமாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதைச்செய்தால்தான், சுரங்கத்திற்கு மற்ற பணிகள் செய்ய முடியும். அதன்மூலம் மின்சார உற்பத்தி பாதிக்காமல், உரிய மின்சாரம் நமக்கு கிடைக்கும். எனவே தொடர்ச்சியாக பல்வேறு கால கட்டங்களில் நில எடுப்பு பணிகள் குறித்து உள்ளூரில் உள்ள விவசாயிகளுக்கு என்எல்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பேசி வருகின்றனர். இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் நடத்தியபோது அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக் களமாக வெடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
விவசாயிகள் அங்கு உள்ள நில உரிமையாளர்கள் இந்த விவகாரத்தை அமைதியாக கையாண்டாலும், வெளியிலிருந்து வரக்கூடிய வெளியூர் நபர்கள் இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட தூண்டுதலாலே இந்த வன்முறை அரங்கேறி உள்ளது. இந்த வன்முறை காரணமாக 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே ஒரு பிரச்னையை பேசி தீர்வு காண முடியாமல், இதுபோன்று வன்முறையை கொண்டு போவதன் மூலமாக அரசியல் லாபத்திற்காக விவசாயிகளை பலவீனமாக சித்தரித்து அவர்கள் முன் விவசாயிகளை கேடயமாக வைத்து இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வன்முறையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. வன்முறையை போர்வையாக போர்த்திக் கொண்டு வந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதமே பயிரிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் பயிரிடக்கூடிய பயிர்களை அந்த பகுதி விவசாயிகள் பயிரிட்டு வருவதால் தொடர்ச்சியாக விவசாயப் பணிகள் நடைபெறுவதால் பணி பாதிக்கப்பட்டது. சுரங்கப்பாதை பணிகள் பாதிக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் தடை ஆகும் என்பதால் அந்தப் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு தெரிவித்தார்.