நெய்வேலி: இரண்டாம் கட்ட சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்புமணி கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, போலீசார் மீது பாமகவினர் கல்வீசி தாக்கினர். இதில் போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. போலீஸ் வாகனங்கள் உடைக்கப்பட்டது. ஒன்றிய அரசு நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், இரண்டாம் கட்ட சுரங்க பணிக்காக கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் வயல்வெளியில் பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டி பைப்களை புதைத்து வாய்க்கால் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் பஸ்கள் மீது கல்வீச்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக பாமக நிர்வாகி அறிவழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், என்என்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று பாமகவினர் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அன்புமணி தலைமையில் கட்சியினர் என்எல்சியை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது பாமகவினரை போலீசார் தடுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு நடந்தது. அப்போது பாமகவை சேர்ந்த ஒருவர் திடீரென போலீஸ் வாகனம் மீது கல்வீசினார்.
அவர்களை போலீசார் கலைத்தனர். ஆத்திரமடைந்த பாமகவினர் அங்கிருந்த கல், கட்டை உள்ளிட்ட பொருட்களை எடுத்து போலீசார் மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் 10 காவலர்கள், மூதாட்டி ஒருவர் காயமடைந்தனர். சில போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்கள் மீட்கப்பட்டு என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அன்புமணி எம்பி, மாநில நிர்வாகிகள், கட்சியினர் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதை கண்டித்து அங்கிருந்த போலீஸ் வாகனங்கள் மீது பாமகவினர் கல்வீச்சி தாக்கினர். இதில் 3 போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
கூட்டத்தை கலைக்க வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர்- நெய்வேலிக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அன்புமணி மற்றும் கட்சியினர் நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவர்கள் மற்றும் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கல்வீச்சில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
* பணியை நிறுத்திய என்எல்சி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் நேற்று திடீரென வாய்க்கால் வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.
* என்எல்சி தேவை இல்லை: அன்புமணி
கைதான அன்புமணி நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘என்எல்சி நிர்வாகத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. அதனை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பாமக தொடர்ந்து விவசாயிகளுக்காக, விவசாயத்திற்காக, விளை நிலங்களுக்காக, சுற்றுச்சூழலுக்காக, இயற்கைக்காக, நீர் நிலைகளுக்காக, மக்களின் உரிமைகளுக்காக போராடும். எந்த வகை போராட்டம் ஆனாலும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்பது தான் எங்களது அன்பான வேண்டுகோளாகும்’ என்றார்.
* பாமகவினர் கைது: ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருப்பது என்.எல்.சி என்ற ஒற்றை நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும்; புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி கிடைக்கும் வரை பாமகவின் போராட்டம் தொடரும். பாமகா அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது. வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும்.
* சட்டப்படி நடவடிக்கை: வடக்கு மண்டல ஐஜி
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவியில் கடந்த 2 நாட்களாக என்எல்சி பரவனாறு தோண்டும் பணி நடந்தது. அதற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று (நேற்று) பாமக சார்பில் நடந்த போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமகவினர் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக கைது செய்தபோது கல்வீச்சு நடந்தது. இதில் காவல்துறை வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. சரியான நடவடிக்கை மேற்கொண்டதால் என்எல்சி நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் நுழையாமல் தடுக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 800க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். போராட்டங்கள் அறவழியில் நடத்தப்பட வேண்டும். அப்படி அறவழியில் இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.