சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜ அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜ ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், ‘400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று பிரதமர் மோடியும், பாஜவினரும் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.
பாஜவின் இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.