Saturday, February 24, 2024
Home » சினைப்பை நீர்க்கட்டி… ஆயுர்வேதத் தீர்வு!

சினைப்பை நீர்க்கட்டி… ஆயுர்வேதத் தீர்வு!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

அன்றைய காலத்தில் ஊருக்கு ஒரு மருத்துவமனை இருப்பதே அரிதாக இருந்தது. ஆனால் இன்றோ வீதிக்கு ஒரு மருத்துவமனை வந்து கொண்டேதானிருக்கின்றது. அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பேறின்மை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் இன்ஃபர்டிலிடி கிளினிக், ஃப்ர்டிலிடி ஹாஸ்பிடல் போன்றவை இப்பொழுது பெருநகரங்களில் மட்டுமில்லாமல் சிறு நகரங்களிலும் கூட காளான்கள் போலப் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன.

இதற்கு நாம் பல்வேறு காரணங்களை ஆராய்ந்து பார்த்தாலும் முக்கியமான காரணமாக பெண்களுக்கு வரும் சினைப்பை நீர்க்கட்டிகளும் அதனால் வரக்கூடிய குழந்தைப்பேறின்மை பிரச்னையும் முதல்காரணமாக நமக்குப் புலப்படுகிறது. அண்மையில் இந்தியாவிலே நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் ஏறக்குறைய 30 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களில் 50% பேருக்கு இந்த சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு குடும்பம் தழைக்கவும் அந்த வம்சம் விருத்தி அடையவும் முக்கியமாக கருதப்படுவது திருமணமும் அதைத் தொடர்ந்து வருகிற கர்ப்பம் தரித்தலும் ஆரோக்கியமான குழந்தையுமே ஆகும். ஆனால் இதற்கு முதற்கட்ட பிரச்சனையாக அமைவது இந்த சினைப்பை நீர்க்கட்டிகளே.பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸ்ஆர்டர்(பிசிஓடி) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களினால் வரும் ஒரு நோயாகும். இதன் அறிகுறிகள் மெல்லமெல்லதான் தெரிய ஆரம்பிக்கும்.

பெண்கள் பருவமடைந்தபிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பு தற்போதுள்ள மாறிவரும் வாழ்க்கைமுறை, உடல் உழைப்பின்மை, மிகுதியான கொழுப்புள்ள துரித மற்றும் தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம் போன்ற காரணங்களினால் குறைவதாலும், அதேபோன்று ஆண்களுக்கு (ஒரு ஆரோக்கியமான ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் ஓரளவு ஆண் ஹார்மோன்கள் உருவாகின்றன) சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் பெண்களுக்கு அதிகமாக சுரப்பதாலும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாகின்றன. இது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. பிசிஓடி என்பது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) யின் முந்தைய நிலைதான்.

பொதுவாகக் கர்ப்பப்பையில் இருபுறமும் சினைப்பைகள் இருக்கும், இந்த சினைப்பையில் (ஓவரி) நிறைய சினைமுட்டைகள் இருக்கும். இந்த சினைமுட்டைகள் ஒவ்வொன்றாக மாதம்தோறும் முதிர்ச்சி அடைந்து மாத விடாய் ஆரம்பித்த 14ஆவது அல்லது 15 ஆவது நாட்களில் வெடித்து அதிலிருந்து கருமுட்டைகள் வெளியில் வந்து சினைக்குழாய் மூலமாக கர்ப்பப்பையை சென்றடைந்து அங்கு ஆண்விந்து வருமேயானால் அதனுடன் சேர்ந்து கர்ப்பமாக மாறி பின் மாதந்தோறும் வளர்ச்சி அடையும்.

அதே ஆண்விந்து வராத பட்சத்தில் அந்த மாதக்கடைசியில் அது மாதவிடாய் ஆக மாறி மாதவிலக்கு ஏற்படுவது என்பது இயல்பு. இந்த சினைமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் போகும்பொழுது பெரிய நீர்க்கட்டிகளாக வளரும். இந்த நிலையைத்தான் பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் என்கிறோம்.

தற்போது, இளம்பெண்கள் பலருக்கும் முகத்தில், உடல், வயிற்றுப்பகுதிகளில் வளரும் தேவையற்ற முடிகள் இதன் காரணமாகவே உண்டாகின்றன. இதை சரிசெய்யாவிட்டால், சீரற்ற மாதவிடாய் தொடங்கி உடல் பருமன், முடி உதிர்வு என்று படிப்படியாக குறைபாடுகளை உண்டாக்கி, இறுதியில் கருத்தரிப்பதிலும் பிரச்னை உண்டாகும்.பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் அறிகுறிகளை விளக்கமாக பார்க்கலாம்.

கண்ணால் பார்க்கக்கூடிய அறிகுறிகள்

*உடல் எடை அதிகரிப்பு முகப்பரு

*வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல்

*முகத்தில் ரோம வளர்ச்சி, கரும்புள்ளி

*மார்பகங்கள் குழாய்போல் சுருங்குதல்

*சருமத்தில் மறுக்கள்

*உடலுக்குள் ஏற்படும் அறிகுறிகள்

*ஓவரியில் கட்டிகள்

*இன்சுலின் செயல்திறன் பாதிப்பு

*குழந்தையின்மை

*ஒழுங்கற்ற மாதவிலக்கு

*ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு

இந்த சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றிய புரிதலும் விளக்கங்களும் மக்களிடையே இன்றைய மின்னணு உலகம் எளிதாக கொண்டு சேர்த்துவிட்டாலும், இந்த நோயைப் பற்றிய குழப்பங்களும் பயமும் அதைப் பின்தொடர்ந்து வருகின்ற மருத்துவம் என்ற பேரிலான வணிகமும் வியாபாரமும் இந்த கார்ப்பரேட் உலகில் நாம் அறிந்தும் நம் கண் முன்னரே மிகவும் சிறப்பாக நடந்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.

அதற்காக இதை அவசியமற்றது என்றும், அலட்சியப் படுத்த வேண்டியது என்றும், சாதாரணமான ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு, சிகிச்சையளிக்காமல் இருந்தால் அதுவும் தவறு, இது வேறு சில உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பும் உண்டு. அவை

இதயநோய்

நீரிழிவுநோய்

உடற்பருமன்

கருப்பை உள்வரிச் சவ்வுப் புற்றுநோய்

மலட்டுத்தன்மை (கர்ப்பமாவதில் பிரச்னை)

ஆக, இதுவரை பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசார்டர் என்றால் என்ன என்பதை விரிவாக பார்த்தோம். இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.பிசிஓடியின் அறிகுறிகளை நம் ஆயுர்வேத கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமேயானால், அவை குன்மம் என்னும் அத்தியாயத்தில் அடிவயிற்றில் வரக்கூடிய கபஜ குன்மத்தின் அறிகுறிகளாக எடுத்துக் கொண்டு பஞ்சகர்ம தேகசுத்தி முறைகள் மற்றும் க்சார ஆசவஅரிஷ்ட பிரயோகம் மற்றும் உஷ்ணம் அனுலோ மனம் என்ற தத்துவங்களின் அடிப்படையில் பிசிஓடிக்கு மருந்து கொடுக்கிறோம்.

நாளடைவில் மாதவிடாய் சீரடையும்போது, ஸ்கேன் செய்து பார்த்தால், பிசிஓடி நோய் குணமாவதை காணமுடியும். இவை இப்பொழுது பல ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆயுர்வேதத்தில் பிசிஓடிக்கு சிறப்பான சிகிச்சையும் அதற்கான அணுகுமுறையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

பொதுவாகவே பிசிஓடிக்கு காரணங்களாக கூறப்படுகின்ற உடல் உழைப்பின்மை, வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது. அதிகமான கொழுப்புகளை உட்கொள்வது போன்றவற்றைத் தவிர்த்து, உடல் எடையை குறைத்து, தினந்தோறும் சிறிது உடற் பயிற்சி, பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி, சீரான உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகமான நார்ச்சத்துள்ள உணவுகள், உடம்பில் செரிமானத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகள் மற்றும் மருந்துகள், மனதில் தெளிவு இவற்றை ஒன்றாக கடைப்பிடிக்கச் சொல்லி நோயாளிகளை அறிவுறுத்தும்போது, இந்த பிசிஓடி இரண்டு முதல் அதிகப்படியாக ஆறு மாதங்களுக்குள் முற்றிலுமாக குணமடைவார்கள். மேலும், திருமணமான பெண்கள் பிசிஓடியால் கருத்தரிக்காமல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 6 மாதக் காலத்திற்குள் கருத்தரிப்பதையும் நான் பல பெண்மணிகளுக்கு பார்த்திருக்கிறேன்.

உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளையும் மருந்துகளையும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் நாம் அறிவுறுத்திக் கொண்டேதான் இருக்க வேண்டும்.உடம்பில் இருக்கும் கெட்டநீர் நம் சிகிச்சையின் மூலம் வெளியேற்றுவதால் சிறிது உடல் உஷ்ணம் அதிகமாக வாய்ப்புகள் உண்டு. அத்தகைய நபர்கள் தினந்தோறும் தேவையை விட சிறிது அதிகமாக காய்ச்சியநீரை பருகியும் குறிப்பாக சீரகம், சோம்பு, ஓமம், பெருங்காயம், சுக்கு போன்ற மூலிகைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் விட்டுக் கொதிக்கவிட்டு அந்த நீரையே பருகி அதற்கு சமஅளவில் வெந்நீரையும் பருகிவர உடம்பில் சேரும் கெட்டநீரையும் தேவையில்லாமல் படிந்திருக்கும் கொழுப்புகளையும் படிப்படியாக நீக்கிவிடலாம்.

கொள்ளு, இந்த நீர்க்கட்டிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. 30 கிராம் வறுத்த கொள்ளை 200மி.லி. தண்ணீரில் விட்டு சூடாக்கி 50மி.லி. ஆகக் குறுக்கி வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும்போது காலையில் வெறும் வயிற்றில் குடிக்கச் சொல்லி வர பிசிஓடி சீராவதை காணலாம். நம் மளிகைப் பொருட்களில் பெருங்காயம் மிக முக்கியமான மருந்தாக இந்த நீர்க்கட்டிக்கு பார்க்கப்படுகிறது. ஆகவே முன்னரே கூறியது போல் பெருங்காய நீரையும் உணவில் அதிகமாக பெருங்காயத்தை சேர்த்து எடுத்துக் கொள்வதும் பிசிஓடி எளிதாக குணமடைவதற்கு உதவி செய்கிறது. இப்படி நம் சமையலறையிலேயே தீர்வு இருக்கும்போது நாம்தான் தேவையில்லாமல் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறோம்.

ஒருவேளை இந்த பிசிஓடியுடன் சர்க்கரை வியாதி இருக்கும் பட்சத்தில் அந்த சர்க்கரை அளவை குறைப்பதற்கான மருந்துகளையும் சேர்த்து கொடுக்கின்ற பொழுது இந்த பிசிஓடி மிக விரைவில் குணமாவதை காணலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் குலத்தாதி கசாயம், சப்தசார கசாயம் ரஜபிரவர்தனிவாடி, காஞ்சனார குக்குலு, நஷ்டபுஷ்பாந்தக மாத்திரை, அசோகாதி வடி, காசிச பஸ்மம் இங்குவசாதி சூரணம், வயிஸ்வாணர சூரணம், சுத்திகரித்த சேராங்கொட்டையினால் செய்யப்பட்ட மருந்துகளான வாரணாதி கசாயம் மற்றும் நெய், பல்லாதக நெய் ஆகியவை சிறந்த பலன் அளிப்பதை நான் அன்றாடம் கண்டிருக்கிறேன்.

ஆயுர்வேத சுத்தி முறையான வமனம் என்னும் வாந்தி எடுக்கவைத்தல் விரேசனம் என்னும் பேதிக்குக் கொடுத்தல் அதுவும் குறிப்பாக மாதவிடாய் காலத்தில் கொடுத்தல் மற்றும் வஸ்தி எனும் ஆசனவாய் வழியாக கொடுக்கக்கூடிய பீச்சு வைத்தியமுறை போன்றவை இந்த வியாதியால் மிகவும் சிரமப்படும் பெண்மணிகளுக்கு முதலில் கொடுத்து பின்னர் உள் மருந்துகளைக் கொடுக்கும்போது நல்ல பலனைத் தந்துள்ளது.

ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரைக்கும் நம் உணவு, காய்கறிகள் நீர், காற்று ஆகியவை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனாலும் கூட நாம் அடிக்கடி வேப்பங்கொழுந்தைச் சாப்பிட்டோ அல்லது விளக்கெண்ணெயை குடித்தோ ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது நம் உடலைச் சுத்தி செய்து கொண்டிருந்தோம். ஆனால் இன்றோ நாம் சாப்பிடும் உணவும் நீரும் காற்றும் மாசுபட்டுகிடக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நாம் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை முற்றிலுமாக கையாளத் தவறவிட்டதேதான் நீர்க்கட்டி மட்டுமில்லாமல் புற்றுநோய் வரை பல நோய்கள் புதுசு புதுசாக நம்மை நெருங்கிக் கொண்டிருக்கக் காரணமாக அமைகிறது.

ஆகவே இத்தகைய சோதனை முறைகளை 16 வயது முதல் 60 வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது எடுத்துக் கொண்டு நம் உடம்பில் சேரும் நச்சுப் பொருட்களை அவ்வப்போது நீக்கிக் கொண்டே இருந்தோமேயானால் பிசிஓடி மட்டுமில்லாமல் பெரும்பாலான வியாதிகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: உஷாநாராயணன்

You may also like

Leave a Comment

sixteen + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi