புதுக்கோட்டை: பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வேலைக்கார பெண்ணை நேற்று கைது செய்தனர். கடலூரை சேர்ந்தவர் வீராசாமி (எ) டேனியல் (62). மதபோதகரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தார். இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த மாத்தூரை சேர்ந்த செல்வி (எ) பிரின்சி (46) என்பவருக்கு டேனியல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும் டேனியல், மீண்டும் பிரின்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த பிரின்சி, டூவீலரில் உள்ள இரும்பு கம்பியை எடுத்து டேனியலை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று காலை அங்கு வந்த மண்டையூர் போலீசார் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பிரின்சியை கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதமாக வேலைக்கார பெண் பிரின்சிக்கு, மதபோதகர் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதவிர மதபோதகரிடம், பிரின்சி பணம் கேட்டு கடந்த 3 தினங்களாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு டேனியல், அடிக்கடி பணம் தரமுடியாது. கொடுக்கும் போது வாங்கி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் பிரின்சி, இரும்பு கம்பியால் டேனியலை தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது. பாலியல் தொந்தரவால் டேனியலை அடித்து கொன்று விட்டு பணத்துக்காக கொன்றதாக பிரின்சி நாடகமாடுகிறாரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,’ என்றனர்.