Wednesday, April 17, 2024
Home » குறட்டை வராமல் தடுக்க…

குறட்டை வராமல் தடுக்க…

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகின்றது. குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் பலரும் அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கின்றோம். எனவே, மூக்கின் மூலம் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல், அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாது அலட்சியப்படுத்தப்படும் பட்சத்தில் ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்து விடுகின்றது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கின்றனர்.சமீபத்திய ஆய்வு ஒன்றில் உடல் பருமன் மற்றும் குண்டான குறட்டைவிடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பெண்களில் ஏராளமானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிறுவர், சிறுமியர்கள், இளம்தலைமுறையினர் பலரும் மைதானங்களுக்குச் சென்று விளையாடுவதில்லை. பள்ளி சென்று வந்தவுடன் வீட்டிலேயே அடைந்து கிடப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது-வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

பொதுவாக, குறட்டை என்பது ஒரு கோளாறு. இது தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் அடினாய்ட் தசையும், தொண்டைக்குள் டான்சிலும் இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும்.

அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது. குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரோக்கியமான ஒரு மனிதர் 8 மணி நேரம் தூங்குகின்றார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்து விடும். இது இயற்கையான நிகழ்வு.

ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ, இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலேயே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உங்கள் பாசமான உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே, அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒரு சில எளிய வழிகளை பின்பற்றி குறட்டையை தவிர்த்திடுங்கள்.ஒரு சில எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி குறட்டையை தவிர்க்கலாம்.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான குடி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியைப் போட்டுக் கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். (மஞ்சள் தூள் கலப்படமின்றி சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லது).காலையிலும் இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூட்டுடனுள்ள பசு நெய்யை விட்டுக்கொள்ளலாம். நெய்யுக்குப் பதில் பிராமி எண்ணெய் கிடைத்தால் உபயோகிக்கலாம்.மேலும், படுக்கும்போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்குப் பதிலாக, சற்று அதிக அளவில் தலையணைகளைப் பயன்படுத்தி தூங்கினால் குறட்டையை தவிர்க்கலாம்.

மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து தூங்கலாம். இடது பக்கவாட்டிலேயே திரும்பி அதிக நேரம் உறங்குவது நல்லது. இரவு முழுவதும் இடதுவாக்கில் படுப்பது சாத்தியமில்லைதான். இருப்பினும் பக்கவாட்டில் படுத்து உறங்கினால், அது குறட்டையை தடுக்கும்.சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியான சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். நீராவி பிடித்தாலும் குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

இரவில் தூங்கச் செல்லும் முன் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் குறட்டைவிடுவதும் ஒன்றுதான். ஏனெனில் புகைபிடிக்கும்போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குகிறது. இது மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி விடும். மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, மூச்சுக்காற்று எளிதாக செல்ல உதவும்.

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாதபடிக்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு-வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக ‘‘சி.பி.ஏ.பி.” என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக் கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது. குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொகுப்பு: லயா

You may also like

Leave a Comment

20 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi