சேலம்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்படவுள்ள பள்ளிகள் உள்பட, 38 மாவட்ட மாதிரி பள்ளிகளிலும் முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் ஆர்வமும், திறமையும் மிக்க மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் வகையில், 25 மாவட்டங்களில் மாதிரிப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேம்படுத்தப்பட்ட கற்றல், கற்பித்தல் பணிகளால் சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளிகளை, விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஏற்கனவே உள்ள 25 மாவட்டங்களுடன், கூடுதலாக 13 மாவட்டங்களில் தலா ஒரு மாதிரிப்பள்ளி என விரிவுபடுத்தப்படும் என தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். மேலும், இத்திட்டத்திற்கென வரும் நிதி ஆண்டில் ₹250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அதன்ஒருபகுதியாக, அனைத்து மாதிரி பள்ளிகளிலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்படவுள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2021-2022 மற்றும் 2022-2023ம் கல்வியாண்டுகளில் மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன. தற்போது கூடுதலாக 13 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் 2023-2024ம் கல்வி ஆண்டில் தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்த 38 மாவட்டங்களில் உள்ள மாதிரி பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்கப்படுகிறது. அதன்படி மாற்றுப்பணி பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, பணியில் சேர ஏதுவாக உடன் பள்ளிப் பணியிலிருந்து பணிவிடுவிப்பு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களின் நலனை கருதி, கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.