திருமலை: ஆந்திராவில் நேற்று சோதனை முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முதல் சோதனை முறையில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அதில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 3 கிராம செயலகங்கள் மற்றும் 2 வார்டு செயலகங்களில் இருந்து முதற்கட்டமாக அந்தந்த பகுதி செயலகத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் சோதனை முறையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பின்போது ஏற்படும் சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிக்கல்களை தீர்த்து மாநிலம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு டிசம்பர் 10ம் தேதிக்குள் முடிக்கப்படும்.