Wednesday, May 29, 2024
Home » காலம் கடந்து கலக்கும் பென்சில் ஸ்கர்ட்!

காலம் கடந்து கலக்கும் பென்சில் ஸ்கர்ட்!

by Porselvi

1940 – 50களிலேயே இந்த பென்சில் ஸ்கர்ட் மாபெரும் ட்ரெண்ட். இவ்வளவு பழமையான ஸ்கர்ட் எப்படி இத்தனை வருடங்கள் கழித்தும் கூட இதன் டிரெண்ட் மாறவில்லை. மேலும் நாளுக்கு நாள் இதன் பயன்பாடும், தேவையும் அதிகரிப்பது ஏன். இதற்கு ஏன் பென்சில் ஸ்கர்ட் எனப் பெயர் வந்தது எப்படி அணியலாம் யாருக்கெல்லாம் பொருத்தமாக இருக்கும் விவரங்களை அடுக்கினார் ஃபேஷன் ஆய்வாளர் மற்றும் விரிவுரையாளர் நந்தா.‘ஸ்லிம் ஃபிட் என்பதாலேயே இதற்கான மவுசு இன்னும் குறையவில்லை. இது முதல் உலகப்போர் காலத்தில் வந்த ஹாப்பிள் ஸ்கர்ட் மிகப் பிரபலம். அந்த ஸ்கர்ட்டில் இருந்து கிளையாக உருவானதுதான் இந்த பென்சில் ஸ்கர்ட். ஹாப்பிள் ஸ்கர்ட் பலூன் போல கீழே குறுகியும் மேலே பந்து போலவும் இருக்கும். பலருக்கும் அந்த ஸ்டைல் அவ்வளவு வசதியாக இருக்கவில்லை. எனவேதான் அதனைத் தொடர்ந்து வந்த பென்சில் ஸ்கர்ட் பலரையும் கவர்ந்தது. மேலிருந்து அகலமாகவும் கீழே வரவர குறுகியும் செல்வதால் இதற்கு பென்சில் ஸ்கர்ட் என பெயர். 1954 குளிர்கால ஃபேஷன் கலெக்ஷனின் அங்கமாக இந்த பென்சில் ஸ்கர்ட்களை டிசைன் செய்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பிரஞ்சு ஃபேஷன் டிசைனர் கிறிஸ்டியன் டயர். இதனுடன் மினி ஸ்கர்ட்டுகளும் பிரபலமாகின.

குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் சமூகத்தில் அந்தஸ்தான குடும்பத்தை சேர்ந்த பெண்களும் இந்த பென்சில் ஸ்கர்ட்களை விரும்பி அணியத் துவங்கினர். இரண்டாம் உலகப் போரின் தருணத்தில் பென்சில் ஸ்கர்ட்டுகள் கிட்டத்தட்ட தனக்கென தனி இடத்தைப் பிடித்து பெண்கள் ஃபேஷன் உலகில் புது அங்கீகாரம் வகித்தது. இந்த ஸ்கர்ட்களை உருவாக்க அதிக துணிகள் தேவைப்படாது என்பதால் யுத்தக் காலகட்டங்களில் அதிக வறுமை மற்றும் பணத்தட்டுப்பாடு இவைகளை சமாளிக்கவும் பெண்கள் இந்த பென்சில் ஸ்கர்ட்களை தாங்களே வீட்டிற்குள் டிசைன் செய்துகொண்டனர். வெறும் ஒரு மீட்டர் துணி இருந்தாலும் இந்த ஸ்கர்ட்டை உருவாக்கிவிடலாம் என்பது இந்த பென்சில் ஸ்கர்ட்களின் சிறப்பு அம்சம். பென்சில் ஸ்கர்ட்டுகளில் என்னென்ன வகைகள் உள்ளன மேலும் தொடர்ந்தார் நந்தா.

பட்டன்ட் பென்சில் ஸ்கர்ட்

இந்தப் பென்சில் ஸ்கர்ட்களின் நடுவிலோ, பக்கவாட்டிலோ டெகரேஷன் செய்த விதமான பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

கிளாசிக் பென்சில் ஸ்கர்ட்

வழக்கமான மேலை நாட்டுப் பெண் களின் ஆபீஸ் ஸ்கர்ட், அல்லது விமானப் பணிபெண்களின் ஸ்டைல். தற்போது ஆசிய நாடுகளிலும் இந்த ஸ்கர்ட் பெண்களின் அலுவலக உடையாக மாறிக் கொண்டிருக்கிறது.

டெனிம் பென்சில் ஸ்கர்ட்

ஜீன்ஸ் பேன்ட்கள் தைக்கப் பயன்படுத்தும் டெனிம் மெட்டிரியல்களில் உருவாக்கப்படும் ஸ்கர்ட்கள். இப்போது வரை இந்த ஸ்கர்ட்களுக்கு மாஸ் டிரெண்ட் உள்ளது.

மீன்வால் பென்சில் ஸ்கர்ட் (fishtail)

மீன் உடலின் கீழ் பகுதி எப்படி மேலே அகன்று கீழே விரியுமோ அப்படியான தோற்றம் கொடுக்கும் வகை.

ட்வீட் பென்சில் ஸ்கர்ட்

உல்லன், கம்பளி போன்ற மெட்டிரியல்களில் குளிர்காலத்திற்கேற்ப உருவாக்கப்படும் ஸ்கர்ட்கள்.

ருசெட் பென்சில் ஸ்கர்ட்

திரைச்சீலைகள் மடித்து வரி வரியாக தொங்க விட்டது போன்ற அமைப்பைக் கொடுக்கும் ஸ்கர்ட்கள். இவை பெரும்பாலும், சாட்டின், லேசான வெல்வெட், ஜார்ஜெட் போன்ற மெட்டீரியல்களில் உருவாக்கப்படும்.

பெல்டட் பென்சில் ஸ்கர்ட்

எந்த மெட்டீரியலில் ஸ்கர்ட் டிசைன் செய்கிறார்களோ அதே மெட்டீரியலில் அல்லது கலரில் உடன் பெல்ட் இணைக்கப்பட்டு வரும் ஸ்கர்ட்கள்.

ஹை வெயிஸ்ட் பென்சில் ஸ்கர்ட்

இடைப்பகுதி முழுவதும் மறைத்து கிட்டத்தட்ட மார்புக்குக் கீழிருந்து ஆரம்பிக்கும் ஸ்கர்ட்கள். இவை உடலை இறுக்கி, கச்சிதமாகக் காட்டும்.

ராப் பென்சில் ஸ்கர்ட்

அப்படியே சுற்றிக் கொண்டு கட்டிக்கொள்ளும் வகையான, அல்லது முடிச்சுகள் போட்டுக் கொள்ளும் வகையான பென்சில் ஸ்கர்ட்கள். இவை தவிர மெட்டீரியல்கள் அடிப்படையில், சாட்டின், செக்கர்ட் எனப்படும் கட்டம் போட்ட ஸ்கர்ட்கள், லேஸ், லெதர், ரிப்ட், உள்ளிட்ட ஸ்கர்ட்களும் உள்ளன. எப்படி அணியலாம், என்ன டிரெண்ட் மேலும் தொடர்ந்தார் நந்தா. ‘ பென்சில் ஸ்கர்ட்கள் பொருத்தவரை பிரத்யேக ஸ்டைல்தான் முக்கியம். அலுவலக பயன்பாடு எனில் ஸ்கர்ட்டுடன் ஒரு லூஸ் ஃபிட் ஷர்ட் , இன்னும் கொஞ்சம் மேலதிகாரி, சி.இ.ஓ போன்ற பதவிகள் எனில் உடன் மேலே ஒரு கோட் , என அணியலாம். அதே ஸ்கர்ட்டுடன் மேலே ஒரு டேன்க் டாப், கிராப் டாப், கோல்ட் ஷோல்டர், அல்லது ஒன் ஷோல்டர் டாப்கள் என மேட்ச் செய்தால் கேஷுவல் வேராக மாறிவிடும். இன்னும் அதே ஸ்கர்ட்டுகளுடன் மினுமினு டாப்கள், சீக்வின் எனப்படும் ஜமிக்கிகள் பொருத்தப்பட்ட டாப்கள் என மேட்ச் செய்துகொண்டால் பார்டி வேர், அதே ஸ்கர்ட்டுடன் ஒரு கிராப்ட் பிகினி டாப், அல்லது லூஸ் காட்டர் ஃபுளோரல் டாப்கள் மேட்ச் செய்தால் பீச் வேர் , என இந்த ஸ்கர்ட்கள் எந்த காலநிலைக்கும், எந்த விசேஷங்களுக்கும் , எங்கேயும் பொருந்தும். சில பெண்கள் ஷார்ட் இந்திய குர்தாக்களுடன் டெனிம் ஸ்கர்ட் மேட்ச் செய்து கொள்ளும் இந்தோ- வெஸ்டர்ன் கலவையாகவும் இந்த ஸ்கர்ட்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஒல்லி, பருமன் என எப்படிப்பட்ட உடல்வாகு கொண்ட பெண்களையும் கச்சிதமாகவும், டிரெண்டியாகவும் காட்டுவதில் சிறப்பானவை இந்த பென்சில் ஸ்கர்ட்கள்‘ ஏன் இத்தனைக் காலமும் இந்த பென்சில் ஸ்கர்ட்கள் தனக்கான தனித்துவத்துடன் காலம் தாண்டி
நிற்கின்றன.

பயன்படுத்த எளிமையான, அதே சமயம் உடலை பெரும்பாலும் உறுத்தாத, முகம் சுளிக்க வைக்காமல் மாடர்ன் ஸ்டைல் கொடுக்கும் உடைகள் இவை. எல்லாவற்றிற்கும் மேல் வெறும் ஒரு மீட்டரை விடவும் குறைவான துணி இருந்தாலும் கூட இந்த ஸ்கர்ட்களை டிசைன் செய்துகொள்ள முடியும். பலரும் பழைய ஜீன்ஸ் பாட்டம்களைக் கூட மாற்றியமைக்க அல்லது மீண்டும் பயன்படுத்த இந்த ஸ்கர்ட்களைத்தான் டிசைன் செய்துகொள்வர். ஆப்பிரிக்கா போன்ற வறட்சி மிகு நிலங்களில் பொருளாதார நிலையை சீர் செய்ய இப்படியான குறைவான துணிகளில் டிரெண்டியான ஸ்டைல் காட்டும் கிராப்ட் பேன்ட்கள் போல் பென்சில் ஸ்கர்ட்கள் பெண்கள் மத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால் இந்த பென்சில் ஸ்கர்ட்களுக்கான தேவை இன்னும் அதிகமாகத்தான் மாறும். தையல் கலையே தெரியாத நபர்களும் கூட டிசைன் செய்துகொள்ளும் வகை உடை எனில் அது பென்சில் ஸ்கர்ட்கள்தான். அதனாலேயே இந்த உடைகளுக்கு இன்றும் தேவை குறையவில்லை. குறிப்பாக இன்றைய ஆன்லைன் உலகம் இந்த ஸ்கர்ட்கள் ரூ.150 முதல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன. என்பதாலேயே இந்த ஸ்கர்ட்களின் பயன்பாடு எதிர்பாரா விதமான டிரெண்டை அடைந்துவிட்டது. முன்பெல்லாம் பெரும் பிராண்ட்களில் மட்டுமே கிடைக்கும் உடைகளில் இந்த பென்சில் ஸ்கர்ட்கள் இடம் பிடித்தன. மேலும் சாதாரண ஜவுளிக் கடைகளில் இவைக் கிடைக்காது என்பதாலேயே மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் பெண்களுக்கு இந்த பென்சில் ஸ்கர்ட்கள் எட்டாக் கனியாக இருந்தன. ஆன்லைன் ஷாப்பிங் அந்த தூரத்தை சமன் செய்ததன் விளைவு யாருக்கும் கிடைக்கும் உடையாக மாறிவிட்டது.
– ஷாலினி நியூட்டன்.

You may also like

Leave a Comment

thirteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi