Saturday, July 27, 2024
Home » சிகரம் தொடுவோம்

சிகரம் தொடுவோம்

by Porselvi

ஒரு பலூன் வியாபாரி தினமும் சாலையோரத்தில் நின்று பல வகையான வண்ண பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.வியாபாரம் கொஞ்சம் குறைந்தால் அவர் ஒரு உத்தியினைக் கையாளுவார். ஹீலியம் நிரப்பிய ஒரு பெரிய வண்ணப் பலூனைப் பறக்க விடுவார், அவ்வளவுதான்! அதை வானத்தில் பார்த்ததும் குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே கும்மாளம், குதூகலம்தான்.அடுத்த வினாடி அனைத்துக் குழந்தைகளும் பலூன் வியாபாரியிடம் வந்துவிடுவார்கள்.இதை தினமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு சந்தேகம் தோன்றியது.நேராக அந்தச் சிறுவன் வியாபாரியை நோக்கி வந்து அவரது சட்டையைப் பின்னால் இழுத்தான்.என்னப்பா? என்ன வேண்டும் என்றார்.

நீங்கள் ஒரே ஒரு கலர் பலூனை மட்டும் பறக்க விட்டீர்கள். ஆனால் மற்ற கலர் பலூன்களை மட்டும் நீங்கள் உயரமாக பறக்க விடவில்லை. அப்படி என்றால் மற்ற கலர் பலூன் மட்டும் உயரமாகப் பறக்கமுடியாதா?என்றான் அந்தக் குழந்தை. அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எல்லா கலர் பலூன்களும் உயரமாகப் பறக்கும்.பலூன் உயர உயரப் பறப்பது அதன் வண்ணத்தை பொறுத்தது இல்லை. அதற்குள்ளே இருக்கிற காற்றைப் பொறுத்தது என்றார் அந்த பலூன் வியாபாரி. நான் மேலே சொன்ன கதையில் பலூன் பறப்பது எப்படி? அது வண்ணத்தை பொறுத்தது இல்லையோ, அப்படித்தான் நம்முடைய உயர்வும். அதாவது நம்முள் இருக்கிற உயர்ந்த குறிக்கோளையும், எண்ணத்தையும் பொறுத்தே நமது வெற்றி அமைகிறது. பிற தகுதி எல்லாம் அதற்குப் பிறகுதான் அதைத் தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.அப்படி உயர்ந்த குறிக்கோளைத் தீர்மானித்து சாதித்த பெண்தான் பிரதிக்‌ஷா.

கணவனை இழந்ததால் குடும்பத்தை நடத்துவதற்காகவும், மகனைப் படிக்க வைப்பதற்காகவும் துப்புரவுத் தொழிலாளியாக பணியைத் தொடங்கிய பிரதிக்‌ஷா.இன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உயர் அதிகாரியாக உயர்ந்துள்ளார். இந்தியாவில் ஆணாதிக்கம் மிக்க துறைகளில் வங்கியும் ஒன்று, இங்கு பியூன் தொடங்கி வங்கி மேலாளர் வரை ஆண் பணியாளர்களையே அதிகமாக காணமுடியும். பொதுத்துறை வங்கியில், பெண் ஒருவர் அடிமட்டத்தில் இருந்து உச்சம் தொடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அப்படி உச்சம் தொட்டவர்தான் பிரதிக்‌ஷா.

பிரதிக்‌ஷா புனேவை சேர்ந்தவர். குடும்பத்தை சூழ்ந்த வறுமை காரணமாக,10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பிரதிக்‌ஷாவின் படிப்பு பறிபோனது. ஆண்டு இறுதிப் பொதுத்தேர்வை கூட எழுதவிடாமல் 16 வயதிலேயே அவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். அவரது கணவர் எஸ்பிஐ வங்கியில் புத்தக பைண்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு,குழந்தை பெற்றுக் கொண்டார்.ஆனால், அந்த மகிழ்ச்சியான பயணத்தில் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போடக் கூடிய சம்பவம் நடக்கும் என பிரதிக்‌ஷா அப்போது அறிந்திருக்கவில்லை. சொந்த ஊரில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி பிரதிக்‌ஷாவின் கணவர் உயிரிழந்தார். இதனால் 20 வயதிலேயே இளம் விதவையான பிரதிக்‌ஷா, மகனையும் தன்னையும் எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் உடைந்து போனார். ​​​​

கணவருக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, அவர் புக் பைண்ட் செய்து வந்த வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தது.குடும்பத்தை நடத்த எனக்கு எப்படியும் ஒருவேலை தேவை.எனவே கல்வித் தகுதி இல்லை என்றாலும், வாழ்வாதாரத்துக்குத் தேவையான வருமானம் தரக்கூடிய ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என வங்கியில் இருந்தவர்களிடம் கேட்டார்.அப்போது வங்கியில் பகுதிநேரத் துப்புரவு வேலை காலியாக இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதிக்‌ஷா உடனே பணியைத் தொடங்கினார். தினமும் காலையில் 2 மணி நேரத்திற்கு வங்கிக் கிளை முழுவதையும் கூட்டிப் பெருக்குவது, துடைப்பது, கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துவது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தார். மீதமுள்ள நேரத்தில் வீட்டு வாடகை மற்றும் மகனின் கல்வியைச் சமாளிப்பதற்காக மும்பையில் கிடைத்த சிறு, சிறு வேலைகளை பார்த்து சம்பாதித்தார்.

துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்த பிரதிக்‌ஷாவின் மனதில், வேறு எதையாவது தேட வேண்டும் என உத்வேகம் ஏற்பட்டது. திடீரென ஒருநாள் பிரதிக்‌ஷா தன்னைச் சுற்றி இருந்த ஊழியர்களைப் பார்த்தார், தான் வெறும் துப்புரவு வேலை செய்வதற்காக மட்டுமே வந்தவள் அல்ல, இதேபோல் நானும் கம்பீரமாக வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.எனவே, மீண்டும் படிக்க வேண்டும் என முடிவெடுத்தார். 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை மீண்டும் எழுத விரும்பிய பிரதிக்‌ஷாவிற்கு சில வங்கி ஊழியர்கள் உதவ முன்வந்தனர். 10ம் வகுப்பு மறுதேர்வுக்கான படிவத்தை நிரம்பிக் கொடுப்பதில் தொடங்கி, படிக்க ஒரு மாத விடுப்பும் கொடுத்து ஊக்கப்படுத்தினர். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் உதவியுடன் புத்தகங்கள் போன்ற படிக்கத் தேவையான பொருட்களைப் பெற முடிந்தது. சுற்றி இருந்தவர்கள் கொடுத்த உற்சாகம், பிரதிக்‌ஷாவை 10ம் வகுப்புத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைத்தது.

10வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, பிரதிக்‌ஷா தனது பழைய வேலைக்குத் திரும்ப முயற்சிக்கவில்லை. தனது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவும், மகனுக்கு நல்ல கல்வி கொடுக்கப்பதற்காகவும் அடுத்தடுத்து படிக்கத் தீர்மானித்தார். வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவெடுத்த அவர் அடுத்து 12ம்வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாரானார்.தனது சிறுசேமிப்பில் இருந்த குறைவான பணத்தைக் கொண்டு மும்பையின் விக்ரோலியில் உள்ள இரவுப் பள்ளியில் சேர முடிவெடுத்தார். சக ஊழியர்களின் உதவியோடு படித்து, 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.அதன் பின் கல்லூரியில் படித்து உளவியல் துறையில் பட்டமும் பெற்றார். இதன் மூலமாக வங்கியில் அவருக்கு எழுத்தராகப் பதவி கிடைத்தது. மேலும் உயர்பதவிகளை அடைய வேண்டும் என்று முடிவெடுத்த பிரதிக்‌ஷா அடுத்தடுத்து வங்கித் தேர்வுகள் எழுதினார்.

தொடர்ந்து எடுத்து வந்த முயற்சியின் பலனால் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிரதிக்‌ஷா டிரெயினிங் ஆபீசராக பணியில் அமர்ந்தார். கடந்த ஜூன் மாதம் எஸ்பிஐ வங்கியின் உதவி பொதுமேலாளராக பதவி உயர்வு பெற்று சாதித்துள்ளார். துப்புரவுப் பணியாளராக தொடங்கிய வாழ்க்கை தனது முயற்சியால் மற்றும் தொடர்ந்து எடுத்த பயிற்சியால் ஒரு மிகப்பெரிய வங்கியின் உயர் அதிகாரியாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கின்றார் பிரதிக்‌ஷா. இவரைப் போலவே முயற்சியும், பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும்,பண்புகளையும் வளர்த்துக்கொண்டு, இலட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி ஏற்றலாம் என்பதில் ஐயமில்லை.

 

You may also like

Leave a Comment

five − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi