சென்னை: சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் 69.99 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.03.2023 முதல் 31.03.2023 வரை மொத்தம் 69,99,341 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக, பிப்ரவரி மாதத்தைவிட 6.30 லட்சம் பயணிகள் அதிகமாக மார்ச் மாதத்தில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக 10.03.2023 அன்று 2,58,671 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் க்யூ ஆர் கோடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,61,453 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,76,793 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,55,702 பயணிகள் மற்றும் குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,393 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.