சென்னை: தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலன் குறித்தும், அவர்களுக்கான திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு தலைவர் பிரேம்ஜிபாஜ் சோலங்கி ஆய்வு நடத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு தலைவரும், எம்பியுமான கீர்த்தி பிரேம்ஜிபாய் சோலங்கி தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்து நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 14 எம்பிக்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி.லட்சுமி பிரியா, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா, தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு இணைந்து செயல்படுத்தி வரும், நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதைதொடர்ந்து சென்னை ஐஐடி மற்றும் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் உட்பட அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.