சென்னை: திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த 2007ம் ஆண்டு திருநெல்வேலியில் திமுக இளைஞர் அணியின் முதல் மாநாடு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எழுச்சியோடும் சிறப்பாகவும் நடந்தது. இந்த நிலையில் திமுகவில் இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 29ம் தேதி நடந்த திமுக இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நடைபெற்றது. அப்போது திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக இளைஞர் அணியின் 2வது மாநாடு வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2007ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாடு நடந்தது. தொடர்ந்து, வருகிற 17-12-2023 திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் இளைஞர்களை பங்கேற்க செய்து பிரமாண்டமாக நடத்த திமுக இளைஞர் அணி முடிவு செய்துள்ளது.