Tuesday, March 5, 2024
Home » ஜகத்தைக் காக்கும் புரி ஜகந்நாதர்

ஜகத்தைக் காக்கும் புரி ஜகந்நாதர்

by Kalaivani Saravanan

ஒரிசா, புரி

திருவரங்கத்திலேயே பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமானாகிய ரங்கநாதரையும், ஏழு மலையிலேயே தினமும் லட்சக் கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து, திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடத்தானையும், பூமியை காத்தருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராஹரையும், தொட்டதையெல்லாம் வெற்றியை கொடுக்கும் நாங்குநேரி தோத்தாத்ரிநாதனையும், முக்தியை தரும் முக்திநாத் கோயிலையும், பாவங்களை போக்கும் புஷ்காரம், பத்ரிநாத், நைமிசாரண்யம் என இந்த புண்ணிய ஷேத்திரங்களில், ஒரு முறையாவது சென்று தரிசிக்கமாட்டோமா..! என்கின்ற ஏக்கமும், ஆசையும், ஆவலும் பலரது மனதில் துடித்துக்கொண்டிருக்கும்.

பாரத தேசத்தில் பிறந்தவர்கள், நிச்சயம் இவ்விடங்களுக்கெல்லாம் செல்லவேண்டும் என்றும், சாத்திரங்கள் கூறுகின்றன. அதனாலும் சிலர் தரிசிக்க விரும்புகிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி என்னும் ஷேத்திரமும் அடங்கும்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா `ஜெகந்நாதர்’ என்னும் திருநாமத்திலேயே ஒரிசா மாநிலம், புரியில் கோயில் கொண்டுள்ளார். இந்த ஜெகந்நாதர் குடிகொண்டுள்ள திருத்தலத்தை, நாம் நிச்சயம் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களுள் ஒன்றாகும். இந்த கோயிலின் பிராகாரங்கள், தேர் செல்லும் சுற்றுவட்ட பாதை, சில முக்கிய தெருக்கள் என `புரி ஜெகந்நாதர் கோயிலில்’ உள்ள அனைத்து முக்கிய இடங்களும் புனரமைக்கப்பட்டு, அதை அந்நாட்டு முதல்வர் சமீபத்தில்தான் திறந்துவைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கியுள்ளது. இதை பற்றி விரிவாக பின்னே வரும் பக்கங்களில் காணலாம். அதற்கு முன்னர், `புரி ஜெகந்நாதர் கோயிலை பற்றி சற்று காணலாம்.

கிருஷ்ணர் – ஜெகந்நாதராக மாறிய சுருக்க கதை

ஜரா என்றொரு வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் தனது அவதாரத்தை அதோடு நிறைவு செய்தார், என்கிறது புராணம். பின்னர், புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் தோன்றிய கிருஷ்ணர், `புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு, தனக்கு ஒரு சிலையை செதுக்குமாறு கூறினார்’. அதன் பெயரில் மன்னர் அந்த இடத்திற்கு செல்ல, ஒரு பெரிய மரக்கட்டை ஒன்று கடலில் மிதந்து வந்தது.

அதை எடுத்துக் கொண்ட அரசன், அந்த மரக்கட்டைக்கு விசேஷ பூஜைகளை செய்து, தச்சர்களை வரவழைத்து, தனது கனவில் கிருஷ்ணர் கூறியதை போல், பெருமாள் சிலை ஒன்றை செய்யும்படி கூறினார். தச்சனும், சிலை செய்வதற்காக அந்த மரக்கட்டையில் உளியை வைத்தான். வைத்தவுடனேயே, உளி உடைந்துவிட்டது. பல முறை முயற்சித்தும் உளி உடைந்துக் கொண்டே இருந்தது. என்னால் இனி சிலை செதுக்க முடியாது என்றுகூறி அந்த தச்சன் சென்றுவிட்டான். செய்வதறியாது திகைத்த மன்னரின் முன்பாக அவருக்கு தெரியாமல், மன்னன் முன்பு கிருஷ்ணன், ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார்.

அரசனிடம், 21 நாட்களில் இந்த வேலையை நான் முடித்து தருவதாகவும், அதுவரை, தான் வேலைசெய்யும் அறையை யாரும் எட்டி பார்க்கவோ.. திறக்கவோ கூடாது என்றும் கூறினார். அதற்கு, அரசனும் ஒப்புக் கொண்டார்.

15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. எனவே அரசன், வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் செல்லவில்லை. பின்னர், அடுத்த பல நாட்கள் உளிச் சத்தம் கேட்கவே இல்லை. எங்கே.. வயதானதச்சர் தூங்கிவிட்டாரோ.. என பயந்த அரசன், அவசரப்பட்டு கதவைத் திறந்துவிட்டார்.

உடனே, தச்சர் கோபமடைந்தார். “மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும், எனது அறைக் கதவை திறந்துவிட்டாயே… எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் இப்படியே.. அரைகுறையாகவே இருக்கும்”. என்றதும் மன்றாடி மன்னன் மன்னிப்பு கேட்டு கதறினார். தனது சுயரூபத்தை காண்பித்த கிருஷ்ணன், `கவலைவேண்டாம்… இப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள், சிலையைப் பார்த்துவிட்டு, நாம் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள்” என்று அருள்பாலித்தார்.

அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார். இந்திரத்துய்மாவின் காலத்திற்கு பிறகு, கோயில் பாழடைந்துவிட்டது. அதன்பிறகு, அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்துவிட்டது.

தற்போதைய கோயில், ஏறக்குறைய பொ.ஊ. 1135-ல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200-ஆம் ஆண்டில், இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் மேற்கில், எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் ஒன்று உள்ளது. ஆலயக் கொடிமரம், ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் “பதீதபவன் பாவனா” என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். ராமாயணத்தில் ராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக் கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.

ஜெகந்நாதரின் வித்தியாசமான தோற்றம்

புரி ஜகந்நாதர் கோயிலில், ஸ்ரீஜெகந்நாதர், ஸ்ரீசுபத்திரை, ஸ்ரீபலராமன் ஆகிய மூவரும் மூலவராக இருந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றார்கள். இந்த மூவருக்கும் சரியான உருவம் கிடையாது. மரத்தால் ஆன கழுத்து, காதுகள் மற்றும் கை கால்கள் இல்லாத, `அனாதி அனந்தம்’ அதாவது ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் சிலைகளின்றி முழுவதும் மரத்தால் ஆன தெய்வங்கள்.

மேலும், கண்களுக்கு இமைகள் இல்லாத, இரண்டு பெரிய வட்ட வடிவிலான ஓவியத்தால் தீட்டிய இரு கண்கள், மூலவரான ஜெகந்நாதருக்கு அமைந்திருக்கின்றது. ஒரு கண் சூரியனையும், மற்றொரு கண் சந்திரனையும் குறிக்கிறது. இந்த வகை ஓவியங்கள், 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரிசாவில் பாரம்பரியமிக்க கட்டிடக்கலை

ஜெகந்நாதர் கோயில், சுமார் 61 மீட்டர் (200 அடி) உயரத்திற்கு மேல், நாகரா கட்டிடக்கலை (Nagara architecture style) பாணியில், மிக பிரம்மாண்டமான கோயிலாகும். அதுமட்டுமா..! கலிங்க கட்டிடக்கலையின் எஞ்சியிருக்கும் சிறந்த மாதிரிகளில் ஒன்றாகும். அதாவது, ஒரிசா மாநிலத்துக்கென்றே தனித்துவமிக்க கட்டிடக்கலை ஒன்று உள்ளது, அதுதான் கலிங்க கட்டிடக்கலை. தற்போது அது, ஒரிசாவின் அழிந்து வரும் கலை. எஞ்சியிருக்கும் ஒருசில கலையின் தோற்றமே, புரி கோயில் போன்ற அமைப்புகளாகும். கி.பி 800 – ஆம் ஆண்டிலிருந்து, முக்கிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக இந்த கோயில் இருந்து வருகிறது என்றால், எத்தகைய புராதனமிக்க கோயிலாக இருக்கவேண்டும்!

ஆச்சரியமூட்டும் புரி ஜெகந்நாதர் திருக்கோயில் பிரசாதம்

புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள மடப்பள்ளி, (சமையலறை) உலகிலேயே மிகப் பெரியது என்கிறார்கள். சுமார் 300 சமையற்கலைஞர்களும், 600 உதவியாளர்களும், ஒரு நாளைக்கு 20,000 நபர்களுக்கும், சில சமயங்களில் பண்டிகை நாட்கள் மற்றும் விழா காலங்கள் என்று வந்துவிட்டால், ஒரு லட்சம் நபர்களுக்கும் சமைக்கிறார்கள். பிரசாதங்களுக்குப் புகழ்பெற்ற ‘சப்பன் போக்’ இந்தக் கோயிலின் சிறப்பு! ‘சப்பன் போக்’ என்பது கிருஷ்ண ஜெயந்தி அன்று, ஜெகந்நாதருக்கு 56 வகையிலான பதார்த்தங்களை (உணவு) தயார் செய்து நிவேதனம் செய்வதே ஆகும்.

மடப்பள்ளியில் சமைக்கப்பட்டு, ஜெகந்நாதருக்கு நிவேதனத்திற்காக எடுத்துச் செல்லும்போது, அந்த உணவுகளுக்கு எந்த மணமும் இருப்பதில்லை. ஆனால், நிவேதனம் செய்த பின்னர், `ஆனந்த் பஸார்’ என்ற இடத்தில், பிரசாதங்கள் விநியோகிக்கப்படும். அப்போது, அந்த உணவுகளின் வாசம், ஊரையே மணக்கும்.

மேலும், ஒரு அதிசயம் இங்கு நிகழ்கிறது! மண்பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். ஐந்து பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, அடியில் விறகுகள் வைத்துச் சமைக்கிறார்கள். சமைக்கும்போது, மேலே இருக்கும் பானையிலுள்ள உணவுதான் முதலில் வெந்துவிடுமாம். இப்படியோர் அதிசயத்தை வேறெங்கும் பார்க்க முடியாது, என்கிறார்கள் மடப்பள்ளி ஆட்கள்.

இங்கு சமைக்கப்படும் உணவுகளை, மகாலட்சுமியே நேரடியாகக் கண்காணிப்பதாக ஐதீகம். அதனால் இங்கே சமைக்கப்படும் உணவுகள் மிஞ்சுவதும் இல்லை, பற்றாக்குறை ஏற்படுவதும் இல்லை என்கிறார்கள். அன்றன்று புதிய பானையில்தான் சமைக்கிறார்கள். பானைகளை பக்தர்களுக்கு, நிவேதித்த பிரசாதங்களை விநியோகித்த பின்னர் அந்த பானைகளை உடைத்துவிடுகிறார்கள்.

விழாக்கள்

நீலாத்ரி மஹோதயா, ஸ்னான யாத்திரை, ரத யாத்திரை (தேர் திருவிழா), அல்லது  குண்டிச்சா யாத்திரை, ஸ்ரீ ஹரி சயனா, உத்தபன யாத்திரை, பார்ஸ்வ பரிபர்தனா, தக்ஹிநயன யாத்திரை, பிரராபனா யாத்திரை, புஷ்யாபிஷேகம், உத்தராயணம், தோலா யாத்திரை, தமனக சதுர்த்தசி, சந்தன் யாத்திரை, என சுமார் 13 விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில், ரதயாத்திரை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ரத்தின வீதியில் ரத யாத்திரை (தேர் திருவிழா)

இந்த கோயிலில், ஆண்டுதோறும் 9 நாட்கள் தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெறும். லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நாடு முழுவதிலிருந்தும் கலந்து கொள்கிறார்கள். 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்திகளான புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலராமரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வார்கள்.

அப்போது, பாரம்பரிய வழக்கப்படி, புரிநகர மன்னர், தேரோடும் வீதியான ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால், பெருக்கிச் சுத்தம் செய்வாராம். முதலில் பலராமரின் தேரும், அதன் பின்னர் சுபத்ராதேவி எழுந்தருளிய தேரும் என இரு தேர்களும் புறப்பட்ட பின்புதான், இறுதியாக ஜெகந்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா என்னும் ஒரு கோயிலை நோக்கிச் செல்லும் ஜெகந்நாதர், யாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா என்னும் கோயிலை அடைந்ததும், ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும், தேர்கள் புறப்பட்டு, புரி ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக, ஆண்டுதோறும் மரத்தால் ஆன 45 அடி உயரமும், 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர்கள் செய்யப்படுகின்றது. இந்த விழா, உலகப் புகழ் வாய்ந்த விழாவாக பார்க்கப்படுகிறது.

புதுப் பொலிவுடன் புரிக்கோயில்

இத்தகைய அதிசயமும், உலகப் புகழ் பெற்றதுமான புரி ஸ்ரீஜெகந்நாதர் கோயிலை, புதுப்பொலிவுடன் புதுப்பிக்க களமிறங்கியது அந்நாட்டு அரசு. `ஸ்ரீமந்திர பரிக்ரமா பிரகல்ப’ என்னும் பெயரிட்டு, தனது ட்ரீம் பிராஜெக்டாக்கியது. முதலாவதாக, சுமார் 26 ஏக்கரில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது. பல கோடி செலவு செய்து, கோயிலின் பிராகாரத்தை அகலப்படுத்தி, தூய்மை செய்தது.

யாத்திரிகளின் வசதிகளுக்காக, புதிய தங்கும் விடுதிகள், பார்க்கிங் வசதிகள், வயதான பக்தர்கள் தரிசிக்க அவர்களுக்கென தனி வரிசைகள் என பல சிறப்புமிக்க வசதியினை செய்துள்ளது, அம்மாநில அரசு.

`அயோத்தியா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
பூரீ துவாரகாவதி சைவ சப்தைதே மோக்ஷ தாயகா’

– என்று ஒரு அருமையான ஸ்லோகம் உண்டு.

அதன் பொருள் பலருக்கும் தெரிந்திருக்கும். அயோத்தியா, மதுரா, காசி, காஞ்சி, புரி என இந்த திருத்தலங்களுக்கெல்லாம் சென்றுவந்தால், மோட்சம் கிட்டும் என்னும் அதன் உள் அர்த்தங்களாக பார்க்கப்படுகிறது. அதன்படி, சிறப்பு மிக்க புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு சென்று, ஜெகத்தை ஆளும் அந்த ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டாமோ! நிச்சயம் தரிசிக்க வேண்டிய தலம். சென்று மோட்சத்தை எட்ட பிரார்த்திப்போம்.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

14 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi