ஓலா நிறுவனம், எஸ்1 எக்ஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் 3 வேரியண்ட்களில் வருகிறது. முதலாவது வேரியண்ட் 2 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது. குறுகிய கால அறிமுகச் சலுகையுடன் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரூ.89,999 என உயர்த்தப்படும். இதுபோல், 3 கிலோவாட் அவர் பேட்டரியுடனும் கிடைக்கும். இதன் அறிமுகச் சலுகை விலை ரூ.89,999. அதன்பிறகு ரூ.99,999 ஆக இருக்கும். எஸ்1எக்ஸ் பிளஸ் என்ற வேரியண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிமுகச் சலுகை விலை சுமார் ரூ.99,999. அதன்பிறகு சுமார் ரூ.1,09,999 ஆக இருக்கும். மிகக் குறுகிய காலச் சலுகை என்பதால், ஒரு வாரத்துக்கு பிறகு உயர்த்தப்பட்ட விலை அமலுக்கு வந்து விடும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 151 கி.மீ தூரம் வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகம் வரை செல்லும்.
புதிய அறிமுகம் மூலம், ஓலா நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் துவக்க வேரியண்ட் ரூ.89,999 ஆகவும், டாப் வேரியண்டான எஸ்1 புரோ சுமார் ரூ.1.47 லட்சமாகவும் இருக்கும். புதிதாக அறிமுகம் செய்துள்ள ஸ்கூட்டர்களுக்கு இப்போதே முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.