Sunday, June 16, 2024
Home » நிமிஷத்தில் வரமருளும் நிமிஷாம்பாள்!

நிமிஷத்தில் வரமருளும் நிமிஷாம்பாள்!

by Porselvi

சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி. பராசக்தி அன்னையின் சிறந்த பக்தனாக திகழ்ந்தவன் முக்தராஜன் என்ற மன்னன். அவன் தன்னுடைய நாட்டை எந்த வித குறைகளும் இல்லாதபடிக்கு ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வறுமை இன்றும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அசுரனால் இடையூறு ஏற்பட்டது.

ஜானுசுமண்டலன் என்னும் அந்த அசுரனுக்கு, முக்த ராஜனின் பக்தியைக் கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அந்த அசுரன், முக்தராஜனுக்கு இடையூறு செய்வதையே வேலையாக மாற்றிக்கொண்டான். முக்தராஜனுக்கு, ஜானுசுமண்டலனின் இடையூறுகளை சமாளிப்பதே பெரும் சுமையாக இருந்தது. ஆகையால் நாட்டையும், நாட்டு மக்களின் குறைகளையும் உடனடியாக கவனித்து, சரி செய்ய முடியாமல் திணறினான்.

இப்படியே போனால் என்னதான் முடிவு. ஒரு நாள் இதுபற்றி முக்தராஜன் சிந்தித்தபோது, தன் அன்னையான பராசக்தியிடமே தன் குறையை கூறி வேண்டுவது என்று முடிவு செய்தான். ஜானுசுமண்டலனை அழிக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். மனமுருகி வேண்டும் பக்தனுக்கு மனம் இறங்காமல் இருப்பது தெய்வம் அல்லவே!

யாகத்தில் உதித்த நிமிஷாம்பாள் :

யாகத்தில் இருந்து உதித்த அம்பிகை, முக்தராஜன் மற்றும் அவனது நாட்டு மக்களின் வேண்டுகோளின் படி, ஜானுசுமண்டலனைப் பார்த்து ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தாள். அந்த நொடிப் பொழுதில் அசுரனான ஜானுசுமண்டலன் சாம்பலாகிப் போனான். கண நேரத்தில் தன் பக்தன் முக்தராஜனுக்கு அருள்புரிந்ததால், ‘நிமிஷாம்பாள்’ என அழைக்கப்பட்டாள்.

அசுர வதம் செய்ததால், அம்பிகைக்கு உண்டான தோஷம் நீங்க, நிமிஷாம்பாள் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தின் அருகில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்தாள். அதைத் தொடர்ந்து அம்பிகையின் தோஷம் நீங்கியது. அம்பிகை வழிபட்ட அந்த லிங்கம், ‘முக்தீஸ்வரர்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.

ஆலய அமைப்பு :

இந்த இறைவனை கர்நாடகாவில் ‘மவுத்திகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். தனக்கு அருள்புரிந்த அன்னைக்கு, கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சம் என்னும் இடத்தில் கோவில் எழுப்பினான் முக்தராஜன். அந்த அம்பிகைக்கு, ‘நிமிஷாம்பாள்’ என்று பெயரிட்டான். சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி.

அம்மனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நிலை கோபுரம் முதலில் வரவேற்பு அளிக்கும். அதன் வழியாக கருவறைக்கு சென்றால், அங்கு அன்னை கிழக்கு நோக்கி நான்கு திருக் கரங்களுடன் துர்க்கையின் அம்சமாக அருள்பாலித்து கொண்டிருக்கிறார். நிமிஷாம்பாள் தேவியின் முன்பாக சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள் உள்ளன.

நிமிஷாம்பாள் வழிபட்ட சிவலிங்கமான மவுத்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கிறார். அதன் அருகிலேயே லட்சுமி நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகர், அனுமன், சூரியன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதி உள்ளது.இத்தலத்தில் சிவராத்திரி, மாத பவுர்ணமி, நவராத்திரி, நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சென்னையில்…

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சம் என்னும் இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. இதுதவிர பெங்களூரில் அக்கிப்பேட் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர், கர்நூல், தவணகிரி ஆகிய இடங்களிலும் நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னை பிராட்வேயில் உள்ள காசிச்செட்டித் தெருவில் நிமிஷாம்பாள் கோவில் இருக்கிறது.

சென்னை காசிச்செட்டி தெருவில் உள்ள கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதனுள் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்த வண்ணம் நிமிஷாம்பாள் எழுந்தருளி உள்ளாள். அம்மனின் எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் உள்ளன. நிமிஷாம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சூட்டி தொடர்ந்து 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டும்.

கோவில் அமைப்பு :

கருவறை வெளிப்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி, முக்தீஸ்வரர், ஆஞ்சநேயர், முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் கிழக்கு பார்த்து அருள்பாலித்து வருகின்றனர். நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவக்கிரக சன்னிதி உள்ளது. இதில் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பது போன்ற சிலை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தலத்தில் நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று அம்மனுக்கு 108 கலச அபிஷேகமும், துர்க்கா ஹோமமும் நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகிறது.

அம்பிகை வழிபட்ட லிங்கம் :

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சத்தில் அமைந்துள்ளது நிமிஷாம்பாள் ஆலயம். இங்கு அம்பாள் வழிபட்ட லிங்கம், ‘மவுத்திகேஸ்வரர்’ என்ற பெயரில் தனிச் சன்னிதியில் இருக்கிறது. மவுத்திகேஸ்வரர் என்னும் முக்திகேஸ்வரருக்கு, முகம் போன்ற கவசம் இந்த தலத்தில் சாத்தப்பட்டுள்ளது. இத்தல ஈசனை பிரதோஷ நாட்களில் வழிபட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi