Wednesday, June 12, 2024
Home » ங போல் வளை

ங போல் வளை

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

யானையை வம்பிழுக்கும் சிம்மம் அளவான பயிற்சியும் சரியான பயிற்சியும்…

யோகப் பயிற்சிகளைச் செய்பவர்களில் சிலர் அதன் பலன்களைச் சற்று அதிகப்படுத்திக் கூறுவதும், யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டவர்கள், அதனைப் பாதியில் விட்டுவிடுவதும், இங்கே இயல்பாக நம்மால் காண முடிகிறது. இவ்வளவு அதிகப் பலன்கள் மட்டுமே இருக்கிறது எனில் அவற்றை ஏன் பாதியில் நிறுத்த வேண்டும் என்பது முதல் கேள்வி?யோகப் பயிற்சிகள் பலன்களை மட்டுமே தரக்கூடியவையா? பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாதா? என்கிற இரண்டாவது கேள்விக்கும் நாம் இந்தக் கட்டுரையில் சில அடிப்படைகளை ஆராய்வோம்.

ஒரு பயிற்சியாளர் தனது பயிற்சியின் பலன் என்று எதைக் கருத வேண்டும்? இதற்கு யோக நூல்கள் சொல்லக்கூடிய விளக்கம் மிக முக்கியமானது. உடலளவில் தொடங்கி மனம் வரை முதலில் உற்சாகமும் ஆரோக்யமும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே வரவேண்டும். அதை அனுபவமாகவும் உணர வேண்டும். அதாவது, மூட்டுவலி, தூக்கமின்மை , இறுக்கமான முதுகு, கை கால்களில் வலி என ஏற்கெனவே அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு உபாதையிலிருந்து படிப்படியாக விடுபட வேண்டும்.

அந்த தீர்வு மனதளவிலும் அவருக்கு ஒரு உற்சாகத்தை அளித்து அவரை தொடர் பயிற்சியாளராக மாற்ற வேண்டும். அதன் மூலம் நோய்த்தன்மை நீங்கி ஆரோக்யமான உடல் அமைய வேண்டும். இது முதல் நிலை பலன்கள். அடுத்ததாக, இன்று நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பயிற்சியும், அதன் மூலம் நாம் சேகரிக்கும் ஆற்றலும் இன்றே முழுவதும் தீர்ந்து போய்விடாமல் நாளையத் தேவைகளுக்கு நம்முள் சேமிக்கப்பட வேண்டும்.

யோகப் பயிற்சிகளோ, உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகளோ, அதற்கான அளவுகோல்கள் மிகவும் முக்கியமானவை. உதாரணமாக, ஒரு சராசரி மனிதர், ஆரோக்யமான உடல் கருதி அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பயிற்சி செய்கிறார் என்றால், அது அவருக்குப் பலனை அளிக்கும், அவரே அதீதமாக மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார் என்றால் நிச்சயமாக அதற்கான பக்க விளைவுகளை அனுபவித்தே தீர வேண்டும். இதுவே ஒருவர் தன்னைக் கட்டுமஸ்தானாக மாற்ற விரும்பி அல்லது ஆணழகன் போட்டிக்குத் தயாரிக்கிறார் என்றால், அந்த நபர் தாராளமாக அதற்கான செயலில் இறங்கலாம். நான்கு மணி நேரம் பயிற்சியும் அதோடு சேர்ந்து செய்ய வேண்டிய உணவு, உறக்கம், வாழ்வியல் ஒழுக்கம் என சிலவற்றையும் கடைபிடிக்க வேண்டும்.

ஆனால், ஒரு சாமானியருக்கோ, அடிப்படை ஆரோக்கியத்தை விரும்பும் ஒருவருக்கோ இத்தகைய அதீதப் பயிற்சி அவசியமற்றது. உடற்பயிற்சி போலவே தான் யோகப் பயிற்சிகளும், அளவுக்கு அதிகமானால் அதற்கான எதிர்மறை விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும், நூற்றியெட்டு முறை ‘சூரிய நமஸ்காரம்’ செய்கிறேன், சிரசாசனத்தில் அரை மணி நேரம் நிற்கிறேன், வியர்வை சொட்ட சொட்ட இரண்டு மணி நேரம் ஆசனங்களைச் செய்வேன், தினமும் இருபது, முப்பது பயிற்சிகளைச் செய்வேன் என அதீதமாகச் செய்யப்படும் பயிற்சிகளைத் தங்களுடைய திறமை என்று சிலர் சொல்லிக்கொள்வதுண்டு. இதை மரபார்ந்த யோகம் நேரடியாகவே தவிர்க்கச் சொல்கிறது.

ஆம். சாமானியருக்கோ, யோகத்தின் மூலம் அன்றாடப் பயன் அடைய விரும்பும் ஒருவருக்கோ மூன்று மணி நேரப் பயிற்சி என்பது அவசியமற்றது. அவர் யோகத்தின் முழுமையான பயனை அடைய விரும்புகிறார் எனில், அவர் செய்யும் பயிற்சிகள் உடல், அன்றாடத்துக்குத் தேவையான ஆற்றல், மனம் இவை மூன்றும் இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறதா? என்பதையும், அதற்கானப் பயிற்சித் திட்டம் தன்னிடம் உள்ளதா? என்பதையும் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு பாடத்திட்டம் என்பது அரை மணி நேரம் சரியான யோகாசனப் பயிற்சிகளை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம். இதையே நவீன அறிவியலும் உடற்பயிற்சிகளில் சிறந்தது ‘ஏரோபிக்ஸ்’ முறையில் இருக்க வேண்டும் என்கிறது. அதாவது மூச்சுடன் இணைந்து செய்யக்கூடிய பயிற்சிகள்.

அந்தப் பயிற்சிகளில் முன்புறம் குனிதல், பின்புறமாக வளைதல், பக்கவாட்டில் சாய்தல், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியைத் திருக்குதல் அல்லது சுருக்குதல், கை கால்களை நீட்டுதல், மூட்டு இணைப்புகளை மடக்கி நீட்டுதல், குப்புறப் படுத்த நிலை, மேல்நோக்கிப் படுத்த நிலை, நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலை என எல்லா நிலைகளிலும் பயிற்சிகள் இருத்தல் அவசியம்.

இவை அனைத்தும் இணைந்தே அரைமணி நேரமோ, நாற்பது நிமிடமோ செய்தால் போதும். இப்படியான ஒரு பாடத்திட்டம் மட்டுமே முழுமையான உடல் ஆரோக்யத்தைக் கொடுக்க முடியும் என்பது மரபார்ந்த யோகம் சொல்லக்கூடியது. அடுத்ததாக, உள்ளுறுப்புகளின் ஆரோக்யம் சார்ந்தப் பயிற்சிகள். நமது உள்ளுறுப்புகளில் தொண்ணூறு சதவிகிதம் அனிச்சைச் செயலாக, மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருப்பவை. இந்த செயல்பாட்டில் சுவாச மண்டலம் மிகப்பெரிய அளவில் பங்குவகிக்கிறது. உயிர்வளி நிறைந்த ரத்த ஓட்டம் முதல் இதய இயக்கம் வரை பல முக்கியப் பணிகளுக்கு சுவாசமே ஆதாரமாக விளங்குகிறது. இந்த சுவாச மண்டலத்தைச் சீராக்கவும், அதன் ஆற்றலை அதிகரிக்கவும் செய்யக்கூடிய பயிற்சிகள் நம் அன்றாடத்தில் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது இருத்தல் அவசியம்.

உள்ளுறுப்புகள் மற்றும் சுவாச மண்டலத்திற்கானப் பயிற்சிகளை முடித்து விட்டு, உடல் மற்றும் மனதை ஓய்வாக வைத்துக்கொள்ளக்கூடியப் பயிற்சிகளைச் செய்து அன்றையப் பயிற்சிகளை முடிக்க வேண்டும். இதற்கு பதினைந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் செய்ய ஒருவருக்கு நாற்பது நிமிடம் முதல் ஒருமணி நேரத்திற்கு மேல் தேவைப்படாது. இவற்றைத் தவிர ஒருவர் ஆன்மிக சாதகராகவோ, யோகத்தின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சித்திகளை அடைய விரும்புவராகவோ இருந்தால், அவர் சரியான ஓர் ஆசிரியரை அல்லது குருகுலத்தைத் தேர்ந்தெடுத்து, பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, நேரத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.

இந்த கால வரையறை உங்களை நன்கு அறிந்த ஓர் ஆசிரியரும் நீங்களும் தொடர்பில் இருக்கும் போதும் மட்டுமே சாத்தியமாகிறது. ஏனெனில், நீங்கள் செய்யும் பயிற்சிகளினால் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் உங்களுடைய உடல் மனம், ஆற்றல் எனப் பல தளங்களில் மாற்றத்தை உணர தொடங்குவீர்கள். அதை ஓர் ஆசிரியரால் மட்டுமே அறியமுடியும். அதனால் மேற்கொண்டு பயிற்சிகளை மேம்படுத்தவோ, சில பயிற்சிகளை தவிர்க்கவோ சொல்லச் சாத்தியமானவராக அவர் இருப்பார்.

இது எதையும் செய்யாமல், தனது விருப்பம் போல, காணொளிகளைப் பார்த்து, நண்பர்கள் சொல்லக் கேட்டு, வேறு யாரோ செய்யும் பயிற்சிகளைப் பார்த்து, வியந்து ஒருவர் உடலை வளைத்து, நெளித்து, அதீதமாகப் பயிற்சிகளைச் செய்வாரெனில், அனைத்து விதமான உடல் உபாதையையும், சிக்கலையும், அவரே வரவழைத்துக்கொள்கிறார் என்றே பொருள். அந்த வேதனைகளிலிருந்து மீள நீண்ட நாட்களாகலாம்.

இதையே யோக நூல்களும் , ஆயுர்வேத நூல்களும் சரியான பயிற்சியும் , அளவான பயிற்சியும் இருக்க வேண்டும் என்கின்றது. அவற்றில் முக்கியமான நூலான அஷ்டாங்க ஹிருதயம் எனும் நூலில் ஆச்சாரியர் வாக்பட்டா, கூறுகையில்: அளவுக்கு மீறிய தேகப் பயிற்சியால் ஆறுவிதமான தீங்குகள் நேரும் என்றும், தன் சக்திக்கு மீறி அவற்றைச் செய்பவன், யானையை வம்புக்கு இழுக்கும் சிங்கத்தைப் போல அழிவான்’ என நேரடியாக எச்சரிக்கிறார்.

பூ நமன் ஆசனம்

இந்த பகுதியில் நாம் ‘பூ நமன் ஆசனம்’ எனும் பயிற்சியைக் காணலாம். முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கவும், வயிற்றுப் பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கங்களை நீக்கவும் உதவிகரமாக இருக்கும். கால்கள் நீட்டிய நிலையில் அமர்ந்து, கால்களை மடிக்காமல், நெற்றி நிலம் பட வலது மற்றும் இடது புறமாகக் குனிய வேண்டும். ஐந்து சுற்றுகள் வரை செய்து பலன் பெறலாம்.

You may also like

Leave a Comment

nineteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi