புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூஸ்கிளிக் செய்தி இணையதள நிறுவனம் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்று, சீனாவுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் செய்திகள் வெளியிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை செய்தி நிறுவன அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கினர்.
செய்தி நிறுவனத்தின் நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா தெற்கு டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அங்கு தடயவியல் அதிகாரிகளும் விரைந்தனர். செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் அபிஷர் சர்மா, பாஷா சிங், ஊர்மளேஷ், வரலாற்று ஆசிரியர் சோகைல் ஹஷ்மி உள்ளிட்டோர் வீடுகளிலும் போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களின் லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபிஷர் சர்மா, ஊர்மளேஷ் உள்ளிட்டோர் விசாரணைக்குப் பின், லோதி சாலையில் உள்ள சிறப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் வெளிநாட்டு பயணங்கள், ஷாஹீன் பாக் போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 25 கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பல மணி நேர சோதனையைத் தொடர்ந்து, நியூஸ்கிளிக் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீசார், நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் இன்று காலை டெல்லி நீதிமன்ற நீதிபதி முன்பு அவரது இல்லத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்காக அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.