Saturday, July 27, 2024
Home » புதிய சிந்தனை புதிய வெற்றி

புதிய சிந்தனை புதிய வெற்றி

by Porselvi

உங்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் வெளிக்கொணர முயற்சிகள் செய்வதில்லை. சிலர் தங்களது திறமைகளை வெளிப் படுத்துவதில் தயக்கத்துடனேஇருப்பார்கள். அவர்கள் எப்போதுமே தங்களது திறமைகளை அமைதியாக தம்மிடமே வைத்துக் கொள்வார்கள். இதற்கு அவர்களின் தாழ்வு மனப்பான்மையே மிக முக்கிய காரணம்.குயில்கள் தங்களுக்கு என்று சொந்தமாக கூடுகட்டிக் கொள்வது கிடையாது.காக்கையின் கூட்டில்தான் குயில்கள் தங்கள் முட்டைகளை இடுவது வழக்கம். ஆனால் முட்டையில் இருந்து வெளியே வந்ததும் குயில் குஞ்சு தனது குயில் இனத்தோடு சென்று சேர்ந்துவிடும்.ஒரு காக்கைக் கூடு இருந்தது. அதில் குயில் வந்து முட்டையிட்டு விட்டு போய்விடுகிறது. காக்கை, குயிலின் முட்டையை தனது முட்டை என்று நினைத்துக் கொண்டு அடைகாக்கின்றது.

குயில் குஞ்சும் முட்டையிலிருந்து பொரிந்து வெளியே வந்து விடுகிறது. தன் இனத்தோடு சேர வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் அது வளர்கிறது. உண்மையிலேயே அது குயிலாக இருந்த போதும் அதற்கு கூவத் தெரியவில்லை. தன்னை அது உண்மையான காகம் என்றே நினைத்துக் கொண்டது. கூவ முடிந்தும் அது கூவும் முயற்சி செய்யாமல் இருந்தது. ஏனென்றால் அது வளர்ந்த சூழ்நிலை அப்படி. அதன் திறமை என்னவென்று அதற்குத் தெரியவில்லை.இந்தக் குயிலைப் போன்றுதான் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையும் உள்ளது. குயிலாக பிறந்தும் குடும்ப வாழ்க்கையில் தங்களது திறமைகளை தொலைத்துவிட்டு காக்கையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் சிறந்த இல்லத்தரசியாக இருந்துகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தி இந்த சமூகத்தில் சாதிக்க முடியாதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் முடியும் என்கிறார் ஒரு சாதனைப் பெண்மணி. அவர் தான் புனேவை சேர்ந்த அக்‌ஷதா ஜெயின். தனிப்பட்ட தேவைக்களுக்கு ஏற்ப பரிசுப்பொருட்களை வழங்கும் வணிகம்தான் Knot Your Type. இதன் நிறுவனர் தான் அக்‌ஷதா. இன்ஸ்டாகிராமில் இவரது நிறுவனம் மிகவும் பிரபலம். இதில், ஒரு ரீல் வைரலான இரண்டு வாரங்களில் 19 மில்லியன் வியூஸ்,

லட்சக்கணக்கான பாலோவர்ஸ். தற்போது இதன் ரீல்கள் அனைத்தும் இரண்டு கோடியைக் கடந்து விட்டன. தற்போது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கின்றனர்.இதன் பின்னணியில் இருப்பவர் தான் அக்‌ஷதா ஜெயின். இவர் ஒரு இல்லத்தரசி. ட்ரெண்டியான இந்த ரீல்களை உருவாக்கியவர் இவர்தான். வீட்டிலேயே இருந்ததால் கலையில் தனக்கிருந்த திறனை மெருகேற்ற நினைத்தார்.மாதத்திற்கு 10 அல்லது 15 ஆர்டர்கள் கிடைக்கும் என்று நினைத்தே இதைத் தொடங்கினார். ஆனால் தற்போது மாதத்திற்கு 1000 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் பூர்த்தி செய்து வருகிறார். ரீல்கள் உருவாக்குவதில் தொடங்கிய இவரது முயற்சி ஒருகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வணிகமாகவே மாறிவிட்டது.

அக்‌ஷதாவிற்கு கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகம். நெருங்கிய உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பரிசளிக்க வேண்டியிருந்தால் இவர் கடைகளுக்குச் சென்று பரிசுப்பொருட்கள் வாங்குவதில்லை, இவரே தன் கைகளால் உருவாக்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.இத்தகைய வேலைப்பாடுகளில் ஆர்வம் இருந்ததால் கூகுள், யூட்யூப் போன்றவற்றில் தானாகவே கற்றுக்கொண்டுள்ளார். ‘ஃபுரோஷிகி’ என்கிற ஜப்பானிய கலையில் இவர் திறன்மிக்கவர். இந்தக் கலையில் துணிகள் அல்லது கைகளால் தயாரிக்கப்படும் கார்டுகளைக் கொண்டு பரிசுப்பொருட்கள் தயார் செய்யப்படும். இதில் அக்‌ஷதா தேர்ந்தவராக இருந்தார். இப்படி இவர் கொடுத்த பரிசுப்பொருட்களைக் கண்டு நண்பர்களும் குடும்பத்தினரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அக்‌ஷதா எம்பிஏ பட்டதாரி. பேஷன் டிசைனிங் பிரிவில் ஓராண்டு டிப்ளமோ முடித்துள்ளார். எம்பிராயிடரி வேலைப்பாடுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம்.கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இவரது நண்பருக்கு திருமணம் நடந்தது. அக்‌ஷதா ஒரு பரிசுப் பொருளை எம்பிராயிடரி கொண்டு அழகுப்படுத்தி பரிசளித்தார். இது தொடர்பான ஒரு ரீல் பதிவு செய்திருந்தார். ஒரே வாரத்தில் ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கின.அவரவர் தனித்தேவைக்கேற்ப ஆர்டர் செய்திருந்தனர். ஆர்டர் அளவு அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் மேற்கொண்டு ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.அக்‌ஷதா சமூக வலைதளங்களைக் கையாள்வது, தயாரிப்பு, ஆர்டர் ட்ராக்கிங் என அனைத்தையும் தனி ஆளாக சமாளித்து வந்தார். தற்போது 10 பெண்கள் அடங்கிய குழுவாக இயங்கி வருகிறது. இந்தப் பெண்களுக்கு எம்பிராயிடரி வேலைப்பாடுகளிலும், கைகளால் எழுத்துகளை வடிவமைப்பதிலும் அக்‌ஷதா பயிற்சியளித்திருக்கிறார்.

அதேபோல், வீட்டிலிருந்து செயல்பட்டு வந்தவர் ஒரு ஸ்டுடியோவிற்கு மாற்றலாகியிருக்கிறார். ஆர்டர்களை ட்ராக் செய்ய வலைதளம் உருவாக்கியிருக்கிறார். முன்பு ஆர்டர் செய்த பிறகு டெலிவரி செய்ய அதிக நாட்கள் வரை எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது சரியான குழு உருவாக்கியிருப்பதால் குறுகிய நாட்களில் டெலிவரி செய்யப்படுகிறது.பெருந்தொற்று சமயத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஸ்டுடியோவிலும் வீட்டிலும் மாறி மாறி வேலை செய்யவேண்டிய சூழல் இருந்துள்ளது.இடப்பற்றாக்குறை, மூலப்பொருட்கள் போன்றவை தொடர்பாகவும் சவால்களை சந்தித்து உள்ளார். டெலிவரிக்கு பெரும்பாலான தயாரிப்புகள் தயார் நிலையில் இருக்காது. இது போன்ற சவால்களை சமாளித்து தயாரிப்புப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்கிறார்.

10,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்ட Knot Your Type முதல் நாளிலிருந்தே லாபகரமாக செயல்பட்டு வருகிறது. வருடத்திற்கு 50 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார் அக்‌ஷதா.அக்‌ஷதா பொழுதுபோக்கிற்காக இந்த முயற்சியைத் தொடங்கியிருந்தபோதும் இது ஒரு வலுவான நிறுவனமாகவே மாறியிருக்கிறது. அது மட்டுமல்ல, புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஆலோசனைகளையும் கூறி வருகிறார் அக்‌ஷதா.புதிய சிந்தனைகளுடன் தொழில் முயற்சியைத் தொடங்கி நூறு சதவீத ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துங்கள்.என்றாவது ஒரு நாள் நீங்கள் நிச்சயம் புதிய வெற்றியை பெறுவீர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு ஒரு போதும் மனம் தளராதீர்கள் என்கிறார் அக்‌ஷதா. தொழில் முனைவோராக வேண்டும் என்று சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் இவருடைய வாழ்க்கை ஒரு ஊக்கப்படுத்தும் பாடமாகும்.

 

You may also like

Leave a Comment

7 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi