புதுடெல்லி: நேபாளத்தில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதால், தேசிய தலைநகர் மண்டல பகுதி உட்பட வட இந்தியா முழுவதும் தாக்கம் உணரலப்பட்டது. நேபாளத்தில் நேற்றிரவு இரவு சுமார் 11.32 மணியளவில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் நேபாளத்திலும், அயோத்தியில் இருந்து வடக்கே 227 கிமீ தொலைவிலும், காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 331 கிமீ தொலைவிலும் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. என்சிஆர் பகுதியான குருகிராம், காஜியாபாத், வட இந்தியா மற்றும் பீகாரின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் கடந்த ஒரு மாதத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும். சமீபத்திய நிலநடுக்கம் டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளிலும் உணரப்பட்டது, எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை.