Friday, May 3, 2024
Home » முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?: கி.வீரமணி கேள்வி

முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?: கி.வீரமணி கேள்வி

by Lavanya

சென்னை: முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி). அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், அத்தேர்தல் சட்டப்படி செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் – பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 18வது பொதுத் தேர்தல் தொடங்கிய நிலை முதல் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் இராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதவர்கள் ஹிந்துவிரோதிகள் என்று, கடவுளையும், மதத்தையும் தேர்தலில் இழுத்துப் பேசுவது எவ்வகையில் நியாயம்? அதுமட்டுமா? பிரதமரின் பேச்சு தேசிய அவமானம்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கைபற்றிக் குறிப்பிட்டு, அது முஸ்லிம் லீக் கருத்து கொண்டதாக உள்ளது என்று பேசுகிறார்!அண்மையில் ராஜஸ்தானில், ஹிந்து வாக்கு வங்கியை குறி வைத்து, ‘‘காங்கிரஸ் கட்சி ஹிந்து சொத்துகளை முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுக்கவே திட்டமிட்டுள்ளது.

‘‘பொன் பொருளை அவர்களுக்கே பிரித்துக் கொடுப்பார்கள்’’ என்று மனம் போன போக்கில் பேசி வருவது – நாளும் அவருக்கு வரும் செய்திகளின்படி, ‘‘மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது; 400 தொகுதி என்கிற கனவு பகற்கனவாகி விடுவதோடு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் வெகுவாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்’’ என்பதாலும், அவர் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் கீழிறக்கத்திற்கு ஆளாக்கிவருவது, நாட்டிற்கே ஊறுவிளைவிக்கும் தேசிய அவமானம் ஆகும்! மோடி, அமித்ஷாவின் (ரெய்ப்பூர்) பேச்சு முழு சட்ட மீறல், தண்டனைக்குரிய குற்றமாகும்.

பிரதமர் மோடியின் மற்றொரு விசித்திர விஷமப் பேச்சு (உ.பி. காசியாபாத்தில்) – ‘‘எனக்கு முஸ்லிம் பெண்களின் ஆசிகள் ஏராளம் உண்டு’’ என்று ஒரு குடும்பத்திற்குள்ளேயே, கணவன் – மனைவி இருவருக்கிடையே பிரிவினைவாதத்தைப் புகுத்தும் மிகக் கேவலமான கீழிறக்கப் பேச்சாகும். ஒரு பிரதமர் பதவியை – அதுவும் பத்தாண்டு காலம் அப்பதவியை வகித்தவர் இப்படிப் பேசுவது, அப்பதவியின் மாண்பையே குழிதோண்டிப் புதைப்பதல்லாமல் வேறு என்ன? தேர்தல் ஆணையம்
கண்டும், காணாமல் இருக்கலாமா? தேர்தல் ஆணையம் இவற்றைக் கண்டும் காணாததாக, கேளாக் காதுகளுடனும் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச் சட்ட அவமதிப்புக்கும் சரியான ஆதாரங்களாகும்!

அத்தனை எதிர்க்கட்சிகளும் குறிப்பாக காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகள் இதனை நாளும் தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையையும் பிரதமர் பேச்சின்மீது இதுவரை எடுக்கவே இல்லை!‘‘சட்டத்தின்முன் அனைவரும் சமம்‘’ என்ற தத்துவம் ஏன் பிரதமர் பேச்சு விஷயத்தில் மட்டும் காணாமற்போக வேண்டும் – சட்டம் அனைவருக்கும் பொதுச் சட்டம்தானே! நாட்டில் மத வகுப்புக் கலவரங்களை வெடிக்கச் செய்யும் நிலையை ஆளும் பிரதமரே தூண்டுவதுபோல் பேசலாமா? எனவே, நிலைமை மேலும் மோசமாகமலிருக்க (காரணம் ஜூன் முதல் தேதிவரை ஏழு கட்டத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில்) ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட மாண்பு, அரசியல் விழுமியங்களைக் காக்கும் பெரும் பொறுப்பு, மக்களின் கடைசி நம்பிக்கையான உச்சநீதிமன்றத்திடம்தான் என்பதால், உடனடியாக முன்வந்து, பிரதமருக்குத் தாக்கீது அனுப்பி வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொள்ளவேண்டும்! நீதியின் கண்களைக் கட்டியிருக்கும் தத்துவம் – உருவகம் கூறுவது என்ன?‘‘எதையும் பார்க்காமல் சட்டம், நீதி தனது கடமையைச் செய்தாகவேண்டும்‘’ என்பதை வலியுறுத்தத்தானே! எனவே, உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து (‘Suo Moto’) தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொள்வதே – நாட்டின் ஜனநாயகம் காக்க, விருப்பு வெறுப்பு அரசியல் என்ற அறத்தை விழுங்கும் அநியாய அலங்கோலம் தலைவிரித்தாடாமல் தடுக்கப்பட அதுவே ஒரே வழி! சட்டம் ஓரப்பார்வையோடு நடந்துகொண்டு வருகிறதே என்ற பழி நாளைய வரலாற்றுப் பழியாக மட்டுமல்லாமல், வரலாற்றுப் பிழையாகவும் ஆகிவிடக் கூடும்! இன்றைய எதேச்சதிகார மோடி ஆட்சியின் சட்ட இடிப்பாரை – உச்சநீதிமன்றம் போன்றவைதானே! மதச்சார்பற்ற நாடு என்று முத்திரை.

ஆனால், தேர்தலில் ஜாதி, மத, வெறுப்புப் பிரச்சார அடைமழையாக, ‘‘வேலியே பயிரை மேய்வது போன்று’’ நாட்டின் பிரதமரே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செய்து வரலாமா?அந்தோ ஜனநாயகமே, உன் நிலை இவ்வளவு அவலத்திற்கு ஆளாகலாமா?அனைத்துக் கட்சிகளின் கடமை அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை உச்சநீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் சென்று, நீதி கேட்டு நெடிய பரப்புரைகளை அடைமழைபோல செய்ய முன்வரவேண்டும்.
இன்னும் 35 நாள்களும் நாட்டில் பிரச்சாரம் எவ்வளவு மோசமாகுமோ! அதற்குத் தடுப்பே இல்லையா?
மவுனம் கலையட்டும், சட்டம் கடமையைச் செய்யட்டும்!இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

You may also like

Leave a Comment

11 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi