புதுடெல்லி: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆணவத்தால் நாடாளுமன்ற நடைமுறைகள் சீரழிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், மோடி அரசின் ஆணவத்தால் நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகள் சீரழிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமாக ஜனாதிபதி உள்ளார். நாடாளுமன்றத்தை திறப்பதற்கான உரிமையை ஜனாதிபதியிடம் இருந்து பறித்து அதன் மூலம் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என 140 கோடி இந்திய மக்களும் அறிய விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,ராஞ்சியில் நாட்டின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகத்தை ஜனாதிபதி முர்மு சமீபத்தில் திறந்து வைத்தார்.
ஒரு நபரின் ஆணவம் மற்றும் தன்னை தானே முன்னிலைப்படுத்தும் குணம் ஆகியவற்றால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கான உரிமை நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.