Friday, May 17, 2024
Home » அதிசயம் அநேகமுற்ற பழநி

அதிசயம் அநேகமுற்ற பழநி

by Kalaivani Saravanan

‘‘ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அண்ணாமலை’’ என்று திருவண்ணாமலையைக் குறிப்பிடுவர். அந்த ஞானியர் வாழும் மலைக்கு இன்னொரு மலையை இணையாகச் சொல்ல வேண்டும் எனில் பழநி மலையை மட்டுமே சொல்ல முடியும். பழநி மலையைச் சுற்றிலும் எண்ணற்ற சித்தர்கள். குடிகொண்டு விளங்குகிறார்கள். சில இடங்களில் சித்தர்கள் வாழ்வார்கள். சில தலங்களில் வழிபட்டிருப்பார்கள். ஆனால் பழநியில் மட்டும்தான் சித்தரே சித்தர் முருகனை ஸ்தாபித்துள்ளார். ஆம், போகர் என்ற புகழ்மிகு சித்தர் ஒன்பது வகையான பாஷாணங்களை (விட்டு)க் கொண்டு உருவாக்கியதே ஞான தண்டாயுதபாணி சுவாமி ஆவார்.

இந்த நவபாஷாணத்தின்மீது பட்டு வரும் அத்தனை அபிஷேகப் பொருட்களும் மிகவும் மருத்துவத்தன்மை வாய்ந்தவை. சுவாமியின் மீது அபிஷேகமான பஞ்சாமிர்தம், இரவில் சாற்றி காலையில் களையப்படும் இரவுக்கால சந்தனம், அபிஷேகம் செய்யப்பெற்ற சிரசு விபூதி, கௌபீன தீர்த்தம் என அனைத்தும் உடற்பிணியையும் உள்ளப்பிணியையும் குணப்படுத்த வல்லன. முருகன் எழுந்தருளியுள்ள இம்மலைக்குப் பெயர்க் காரணம் உண்டு. உலகை யார் முதலில் வலம் வருவார்கள் என்ற போட்டியின் விநாயகப் பெருமான் ஞானப்பழத்தைப் பெற்றுவிட, கோபம்கொண்ட முருகப் பெருமான் நின்ற குன்றே பழநியாடும். ‘நீயே பழம்’ என்ற பொருளில் தமிழ் மூதாட்டி ஔவையார் ‘பழம் நீ’ என்றார். அதனால் இம்மலை ‘பழநி’ என்று காரணப்பெயர் பெற்றது.

உலகிலேயே இரண்டு படைவீடுகள் ஒன்றாகி அமையப் பெற்ற பகுதி இப்பழநிமலை. அடிவாரத்திலுள்ள திருவாவின்குடி மூன்றாம் படைவீடாகும். மலைமீது உள்ள பழநியாண்டவர் சந்நிதி ஐந்தாம் படைவீடாகும். ஆம். திருத்தணி முதலிய குன்றுகள் அனைத்தும் குன்று தோறாடல் என்ற வகைமையில் ஐந்தாம் படை வீடாகிறது. அதனால்தான் இவ்வூரைக் கும்பிடுவதே பெரும்பேறு என்கிறார், அருணகிரிநாதர். ‘‘உனது பழநிமலை எனும் ஊரைச் சேவிக்க அறியேனே’’ என்று முருகனைக் கும்பிடுவது மட்டுமே சிறப்பல்ல. இந்த பழநிமலையாகிய ஊரைக் கும்பிடுவதே பெரும் சிறப்பு என்று பாடியிருக்கிறார்.

அப்படிப்பாடுவதற்கு மற்றொரு காரணமுண்டு. சில தலங்களில், சில கடவுளர்களிடம், சில மந்திரங்களைச் சொல்ல இகநலன்களோ அல்லது பரநலன்களோ ஆகிய இரண்டில் ஒன்று மட்டும்தான் கிடைக்கும். (இகநலன்-இந்த மண்ணுலக வாழ்விற்கான நலன்கள்; பரநலன்-விண்ணுலகில் வாழ்வதற்கான நலன்கள்). ஸ்ரீசக்ரத்தில் பிந்துவை அடக்கியுள்ள முக்கோணம் கீழ் நோக்கியவாறு வைத்துப் பூசித்தால் இகநலன்கள் கிடைக்கும். மேல்நோக்கியவாறு வைத்துப் பூசித்தால் பரநலன்கள் கிடைக்கும். ஸ்தூல பஞ்சாட்சரத்தைச் சொன்னால் இகநலன்களும் சூட்சும பஞ்சாட்சரத்தைச் சொன்னால் பரநலன்களும் கிடைக்கும். ஆனால், இந்தப் பழநி முருகனை வழிபட்டு அவனது ஆறெழுத்து மந்திரத்தைச் சொன்னால் இதம் மற்றும் பரம் ஆகிய இருவகை நலன்களும் கிடைக்கும் என்பதை,

‘‘இசைபயில் சடாட்சரம் அதனாலே
இகபர சௌபாக்கியம் அருள்வாயே
பசுபதி சுவாக்யம் உணர்வோனே

பழநிமலை வீற்று அருளும் வேலா’’ என்று பழநிமலைத் திருப்புகழில் பாடியிருக்கிறார் அருணகிரிநாத அடிகள். இருபெரும் நலன்களை அருள்வதால் தான் இம்மலைக்கு மனிதர்கள் மட்டுமின்றி சித்தர்களும் முத்தர்களும் அதிகமாக வருகின்றனர். அனைவரையும் இழுக்கும் காந்தமலையான இக்கந்தமலை, கந்தகமலையும் ஆகும். ஒருமுறை அதிகாலைப் பொழுதில் நானும். என் நண்பரும் பழநிமலையேறினோம். ஆங்காங்கு நாம் கொட்டும்குப்பைளால் சற்று துர்நாற்றம் இருந்தது. தீடீரென அரைத்த சந்தனத்தின் மணம் எங்களின் நாசிகளை இன்புறுத்தியது. என்ன மணம்?என்று கேட்ட போது இதற்கு பெயர் பரிமள சுகந்தம் ஆகும்.

தற்போது முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேக நீர், மலையில் படும் போது மலை முழுவதும் நறுமணம் கமழும். இது கந்தகமலை என்றார் பழநியைச் சார்ந்த அந்த நண்பர்.
சந்தனம் மணக்கும் இம்மலையின் மீது குடிகொண்டுள்ள தண்டாயுதபாணிக்குச் சாற்றும் அரைத்த சந்தனம், காலையில் விழாக்கால் பூஜையின் போது பக்தர்களுக்குப் பிரசாதமாகி வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தை உட்கொள்ளும்போது சற்றுக் கசப்பாகத்தான் இருக்கும்.

ஆனால், இதை உண்போர்க்கு உடல்நலத்தைக் காத்து வாழ்வை இனிப்பாக மாற்றும். சங்க காலத்தில் ‘பொதினி’ என்று அழைக்கப்பட்ட இப்பழநியில் சரவணப் பொய்கை என்ற திருத்தீர்த்தம் திகழ்கிறது. இந்த தீர்த்தத்திற்கு உலகிலுள்ள அத்தனைத் தீர்த்தங்களும் அடங்கும். இதனை,

‘‘தரணிதனில் அறுபத்து அறுகோடி
தீர்த்தமும் உன் சரவணத்துள் அடக்கம்’’

என்கிறது ஒரு பாடல்.

தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அந்த கங்கையும் கூட இந்த சரவணப் பொய்கையில் அடக்கம் என்பதால்தான்

‘‘காசியின் மீறிய பழநி’’

– என்று குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

சித்த புருஷர் போகரின் ஜீவசமாதி, மனம்கவரும் மரகதலிங்கம், தண்டத்துடன் காட்சி தரும் தண்டாயுதபாணி வள்ளிசுனை, அருகிலேயே இடும்பன்மலை மலையைச் சுற்றிலும் சித்தர்கள், அடிவாரத்தில் திருவாவின்குடி என்ற சிறப்புகளாலேயே கட்டமைக்கப்பட்டது. பழநி என்பதால்தான் ‘பழநிமலை’ என்ற ஊரை வணங்குவதற்கே தவம் செய்திருக்க வேண்டும் என்பதை, ‘‘உனது பழநிமலையெனும் ஊரைச் சேவிக்க அறியேனே’’ என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

ஒவ்வொரு தலத்திலுள்ள முருகளைக் கும்பிடுவதற்குத் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த பழநிமலை என்ற ஊரைக் கும்பிடவே தனியாகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பழநி என்னும் ஊர்ப்பெயரைச் சொல்லுவது புண்ணியம். அப்படிச் சொல்லுபவர்களின் பாதத்தைப் பணிவதும் புண்ணியம். இதனை

‘‘படிக்கின்றிலை பழனித் திருநாமம்; படிப்பவர்தாள் முடிக்கின்றிலை;’’

– என்கிறது கந்தர் அலங்காரம்.

நக்கீரர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவல், பாம்பன் சுவாமிகள், போன்ற அருளாளர்களால் பாடல் பெற்ற பழநியை நினைப்பதும் துதிப்பதும் புண்ணியத்திலும் புண்ணியம்.

தொகுப்பு: சிவ. சதீஸ்குமார்

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi