Saturday, June 1, 2024
Home » மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்

by Lavanya
Published: Last Updated on

கருஞ்சீரகம்!

கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. எனவே தான், கருஞ்சீரகம் இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். இதன் காரணமாகவே, அரபு நாடுகளில் கருஞ்சீரகத்தை அதிகளவில் உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.

இது, நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியைத் தரும். இதயநோய் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது. மேலும், எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

பக்தி மணக்கும்.. பசி தீர்க்கும்… பஞ்சாமிர்தம்!

பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தங்களின் கூட்டு என்று பொருள். தமிழில் இதனை ஐந்தமுது என்பார்கள். பால், தயிர், நெய், தேன், வாழைப் பழம் ஆகிய ஐந்து உணவுப் பொருட்களின் அற்புதமான கூட்டணிதான் உண்ணத் தெவிட்டாத பஞ்சாமிர்தம். பஞ்சாமிர்தம் தமிழர்களின் தனித்துவமான உணவுப் பொருட்களில் ஒன்று இதனை முருகன் கோயில்களில் பிரசாதமாய் கொடுப்பது வழக்கம். பொதுவாக, முருகன் கோயில்கள் மலைமேல்தான் அதிகம் இருக்கும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள்.

இப்படி மலை மேல் இருக்கும் மருகனை கால் கடுக்க ஏறிப் போய் தரிசிக்கும் அடியவர்கள் உடலில் வலு வேண்டும் என்பதற்காக இந்த பஞ்ச அமுதக் கூட்டணியை வடிவமைத்தார்கள் நம் முன்னோர்.பாலில் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் உள்ளன. இதனால் அசைவ உணவை உண்ட பலம் கிடைக்கிறது. பால் பொருட்களான தயிரிலும் நெய்யிலும்கூட இவை வினையூட்டம் பெற்ற வேறு வடிவில் உள்ளன. தேனில் இரும்புச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் உள்ளன.

இவை அனைத்தும் ஒன்று சேரும்போது அது ஒரு சமச்சீரான சத்தாக மாறுகிறது. பஞ்சாமிர்தம் முருகன் கோயில்களில் மிகப் பழங்காலம் தொட்டே வழங்கப்பட்டு வந்திருக்க வேண்டும். கேரளப் பஞ்சாமிர்தத்தில் இந்த பஞ்ச அமுதங்களோடு இளநீரையும் சேர்க்கிறார்கள். அருணகிரிநாதர் பஞ்சமிர்த வண்ணம் என்ற பாடலே இயற்றியிருக்கிறார். பழனி கோயிலின் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாமிர்தத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்கு கனிந்த வாழைப் பழமும் சுத்தமான தேனும் பாலும் தயிரும் நெய்யும் 5:4:3:2:1 என்ற விகிதத்தில் கலந்தால் சுவை மிகுந்த பஞ்சாமிர்தம் தயார். சித்திரையை சிறப்பிக்கும் வேப்பம்பூ ரசம் தமிழர்களின் வாழ்வியலில் சித்திரை மாதம் சிறப்பான கோவில் திருவிழா, உழவுக்கான ஆயத்தபணி, விஷேசங்களுக்கு முக்கிய பங்குள்ள மாதம்.

சித்திரை 1ம் தேதியை தங்களின் தினமாக கடைபிடிக்கும் தமிழ்மக்கள், அன்றைய தினம் இறைச்சி, வடை, பாயாசம் சகிதமாக உணவை சமைத்து, தமிழர் முறையில் வழிபாடு நடத்தி குடும்பத்தோடு உண்பார்கள். குலதெய்வக் கோயிலுக்கு சென்றும், மக்கள், குழந்தைகள் குடும்பம் என சித்திரைத் திருநாளை சுபிட்சமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வார்கள். இந்த வேப்பம்பூவில் ரசம் வைத்து சாப்பிடுவது வழக்கம் உடலில் உள்ள நோய்கள் சரியாகி பிணி போக்கும் உணவே மருந்து தான் இந்த வேப்பம் பூ ரசம். வாழ்க்கை என்றால் இனிப்பும், கசப்பும் சேர்ந்த தத்துவத்தை விளக்கும் வகையில் இந்த வேப்பம்பூ ரசம் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி?

காய்ந்த வேப்பம்பூக்களை மிதமான சூட்டில் நல்லெண்ணெயில் வறுத்து தனியாக் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நல்லெண்ணெயில் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து வறுத்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை வைத்து தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும். கையளவு புளியைக் கரைத்து, அல்லது தக்காளியை பிழிந்து விட வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்து வந்த பின் வறுத்த வேப்பம்பூவை சேர்க்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு கொத்தமல்லித் தழையை சேர்த்தால் ரசம் இன்னும் மணம் கூடும்.

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi