Saturday, July 27, 2024
Home » மீ டைம்!

மீ டைம்!

by Porselvi

டிரெண்டிங் வார்த்தைதான் இந்த ‘மீ டைம்’, அதாவது எனக்கான நேரம். குடும்பம், குழந்தைகள், சமையலறை, வேலை, இதற்கு இடையில் எத்தனை பேர் அட ஆரோக்கியத்தை விடுங்கள், அதெல்லாம் பெரிய சமாச்சாரம், ஆனால் நமக்குப் பிடித்த சின்னச் சின்ன சந்தோஷங்கள் குறித்து நினைத்துப் பார்க்கிறோம். அதை செய்தாலே ஆரோக்கியமும் தாமாகவே முன்வந்து சேர்ந்துகொள்ளும். சரி நமக்கான ‘மீ டைம்‘ என்றால் என்ன எப்படி அதில் கவனம் செலுத்த வேண்டும். ஆலோசனைகள் தருகிறார் டாக்டர். எஸ். வந்தனா மருத்துவ மனநல ஆலோசகர். ‘நானே ஒரு பெண் என்கிறதால் முதலில் எனக்கு என்ன பிடிக்கும் என யோசித்துப் பார்த்தேன். எந்த சிறப்பான நாளானாலும், அல்லது விழாக்காலங்கள் என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் எனக்கு சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வுகள், நாட்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், அல்லது ஒதுக்க மாட்டேன். என்ன வேலையில் இருப்பினும் எனக்கான சந்தோஷம் ஒரு விஷயத்தில் இருப்பின் அதுதான் பிரதானம். அதற்கான நேரம் போகதான் மற்றவை. பொதுவாகவே பெண்கள் எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதிலே 100% ஈடுப்பாட்டுடன் வேலை செய்பவர்கள். மேலும் இயற்கையிலேயே அவர்கள் சரியான முடிவையும் எடுப்பதில் வல்லவர்களும் கூட. சிலருக்கு இதில் மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால் நிதர்சனம் இதுதான்.

அந்தக் காரணம்தான் அவர்களுக்கு பொறுப்பு என நியமித்து ஒரு வேலையாக கொடுத்தால் தங்களையும் மறந்து எடுத்துக்கொண்ட பொறுப்புகளை சரியாக செய்வார்கள். இந்தப் பொறுப்புகளுக்கும், கடமைகளுக்கும் இடையேதான் மெய்மறந்து வேலை செய்கையில் ‘மீ டைம்’ காணாமல் போய்விடுகிறது’ என்னும் டாக்டர் வந்தனா தொடர்ந்து தனக்கான நேரத்தின் முக்கியத்துவம் குறித்து மேலும் தொடர்ந்தார். ‘இன்ஸ்பைர் & இன்க்ளூஷன்’ (Inspire & Inclusion)…. அதாவது முதலில் உங்களை நீங்களே இன்ஸ்பைர் செய்துகொண்டு அதில் உங்களுக்கு எது தேவையோ அதை சேர்த்துக்கொள்ளும் முறை. உங்களை நீங்களே நினைத்துப் பெருமை படும்படி நம் மீதான அக்கறையும், அன்பும் அதிகரித்துக்கொள்வது. இதில் எந்த சுயநலமும் இல்லை. சுயஅன்பு (selfcare), சுய அக்கறை(selflove), இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு எது நல்லதோ , எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதன்பால் ஈடுபாடு காட்டுவது. அடுத்து உங்கள் உடை, தோற்றம் இவற்றில் மற்றவர்களுக்குப் பிடிப்பதைக் காட்டிலும் உங்களுக்கு முதலில் உங்கள் தோற்றம், அல்லது உடை பிடித்திருக்கிறதா என கவனம் செலுத்துவது இவையனைத்தும் கூட மீ டைம்தான்.

அதே போல் எடுத்துக்கொள்ளும் உணவிலும், கணவனுக்கு அது பிடிக்கும், குழந்தைக்கு இது பிடிக்கும் எல்லாம் சரி, தங்களுக்கு என்ன பிடிக்கும் என்கிற மனநிலை பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. இதில் நம் அம்மாக்கள், பாட்டிகள் பலரும் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்பது அவர்களுக்கே தெரியாத அல்லது மறந்து போகிற அளவுக்கு மாறியிருக்கிறார்கள். எதிலும் சரியான முடிவெடுப்பதிலும் , தீர்வுகள் கொடுப்பதிலும் வல்லவர்கள் பெண்கள் என்பதற்கு உலக அளவில மனநல நிபுணர்கள் பலரின் ஆதாரங்கள் உள்ளன. அதனால்தான் மனநல மருத்துவர்களாகவும், ஆலோசகர்களாவும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். உங்களுக்கென நீங்கள் பெரிதாக பணமோ, பொருளோ செலவிட வேண்டாம், குறைந்தபட்சம் பிடித்த சினிமா, இசை, விளையாட்டு, அருகாமையில் ஒரு கோவில், ஒரு குட்டி ஷாப்பிங், புத்தகங்கள் வாசிப்பு, நண்பர்களுடன் சந்திப்புகள், ஏதேனும் ஒன்றை தினம் ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி செய்து உங்களுக்கு நேரம் செலவிடுகள். அடுத்து சொந்தக் காலில் நிற்பது, இது வெறும் பொருளாதார விஷயம் மட்டுமல்ல ஆரோக்கியமும் உள்ளடக்கியதுதான். அதாவது தன் ஆரோக்கியத்துக்கு எது நல்லதோ அதை மட்டுமே ஏற்றுக்கொள்வதும் கூட ‘மீ டைம்’ தான்.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

6 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi