Wednesday, May 22, 2024
Home » திருமணத்தடை அகற்றும் ஈசன்

திருமணத்தடை அகற்றும் ஈசன்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குபேர செல்வம் அருளும் குமரன்குன்றம்

சென்னை குரோம்பேட்டைக்கு அருகில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது குமரன் குன்றம். மூலஸ்தானத்தில் சுவாமி நாதர் கையில் தண்டம் ஏந்திய பாலகனாகக் காட்சி தருகிறார். அவரது பீடத்திலும் சந்நதி எதிரிலும் யானை வாகனம் உள்ளது. இங்கு முருகப் பெருமான் குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால் பக்தர்கள் இவரை ஐஸ்வர்ய முருகன் என்று போற்றுகின்றனர். இவரை வணங்குபவர்களுக்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.

ஆயுள் தோஷம் நீக்கும் அரன்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைமன்னை சாலையின் அருகே திருவுசாத்தானம் எனும் சிவாலயம் உள்ளது. இங்கு அருளும் ஈசன் சுயம்பு லிங்கமாக, சற்று சாய்ந்த நிலையில், அமிர்தம் தன்மேல் சிந்தியதால் வெண்ணிறமாக தரிசனமளிக்கிறார். மந்திரபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இவரை திருஞானசம்பந்தர் பாடிப் பரவியிருக்கிறார். திருக்கடையூர் சென்று கால சம்ஹார மூர்த்தியை வணங்க இயலாதவர்கள், இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள மார்க்கண்டேயர் மற்றும் அவர் பூஜித்த மார்க்கண்டேஸ்வர லிங்கத்தை தரிசித்தால் ஆயுள் தோஷம் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

திருமணத்தடை அகற்றும் ஈசன்

கோவை பொள்ளாச்சி சாலையில், ஒத்தக்கால் மண்டபம் என்ற இடத்தில் பூங்கோதை நாயகி உடனுறை புற்றிடங்கொண்டீசர் திருக்கோயில் உள்ளது. இங்கு, ஊர் மக்கள் ஏற்படுத்திய வழிபாட்டு மன்றம் தினமும் காலையும் மாலையும் பூஜைகள் நடத்துகிறது. இந்த கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தம். திருமணத்தடை விலகிடவும் குழந்தை பாக்கியம் கிடைத்திடவும் இந்த இறைவன் அருள்மழை பொழிகிறார்.

காஞ்சி ஆதிவராகர்

ஒரு சாபத்தால் தன் பொலிவான வடிவத்தை இழந்த திருமகள், காமாட்சியின் திருவருளால் வடிவழகோடு சௌந்தர்ய லட்சுமி எனும் அஞ்சிலை வல்லி நாச்சியாராக காஞ்சி காமாட்சியம் மன் ஆலய கருவறையின் இடதுபுற கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறாள். ஆதிவராகப் பெருமாளாகவே வந்து திருமால் அவளைப் பார்த்ததாக 108 வைணவ திவ்யதேச வரலாறு கூறுகிறது. திவ்ய தேசங்களிலேயே மிகவும் சிறிய திருவடிவம் கொண்ட மூர்த்தமாக விளங்குகிறார் இந்தப் பெருமாள். திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்த மூர்த்தி இவர்.

அமிர்தம் ஆனந்தம்

ஆனதாண்டவபுரம் எனும் ஆனந்ததாண்டவபுரம், மயிலாடுதுறைக்கு 5 கிலோ மீட்டர் வடக்கே உள்ளது. மானக்கஞ்சாற நாயனாரின் பக்தியை ஈசன் உலகறியச் செய்த தலம் இது. மூலவர் ஜடாநாதர் என்றும் பஞ்சவடீசர் என்றும் வணங்கப்படுகிறார். பதஞ்சலி முனிவருக்காக ஈசன் இத்தலத்தில் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டியதால் இத்தலம் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, பின் மருவி ஆனதாண்டவபுரம் என அழைக்கப்படுகிறது. கருட பகவான் அமிர்தத்தை எடுத்துச் சென்றபோது இத்தல திருக்குளத்தில் சிறிதளவு சிந்தியதாக ஐதீகம்.

கதவு தரிசனம்

பரக்கலக்கோட்டை என்ற சிற்றூர் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ளது. இங்கு இருக்கும் ‘பொது ஆவுடையார்’ கோயிலில் சிவ தரிசனம் பெற நீங்கள் விரும்பினால் ஏதாவது திங்கட்கிழமை, இரவு 12 மணிக்கு அங்கே போக வேண்டும். அப்போதுதான் கதவு திறக்கப்பட்டு சிவனுக்கு பூஜை நிகழ்த்தப்படும். அதேபோல தை மாதம் முதல் நாளன்று மட்டும் அவ்வாலயம் பக்தர்களின் தரிசனத்திற்காக காலை முதல் மாலை வரை திறக்கப்பட்டிருக்கும். மற்ற நாட்களில்? கதவுக்குத்தான் பூஜை, தரிசனம் எல்லாம்.

இறைவனை தரிசிக்கும் நவகிரகங்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் பார்த்தபடி அமைந்திருப்பதுதான் நவகிரங்களின் பொதுவான தோற்றம். ஆனால், நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில், அவை வெவ்வேறு திசைகளைப் பார்க்காமல், எல்லாமும் ஒரே திசையை நோக்கியபடி, அதாவது இறைவனைப் பார்த்தபடி வீற்றிருக்கின்றன. மூன்று வரிசைகளில் வரிசைக்கு மூன்றாக இவை அணிவகுத்து நிற்கின்றன.

தொகுப்பு: அனந்த பத்மநாபன்

You may also like

Leave a Comment

2 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi