Saturday, May 11, 2024
Home » மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Arun Kumar

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். பல்லாயிரக்கணக்கானோர் திரளுவார்கள் என்பதால் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவருமான கலைஞர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடல் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுபடி சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளன.

அண்ணா நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்று வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா நினைவிடத்திற்கு பின்னால் கலைஞர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்று வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

கலைஞர் நினைவிடத்தில் ‘ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனதுநினைவிடத்தில் எழுத வேண்டும் என்று கலைஞர் முன்கூட்டியே சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கலைஞரை பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கலைஞர் சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கலைஞரின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கலைஞர் நினைவிடத்தை சுற்றி பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் கலைஞர் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் ‘க’ என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தின் இலச்சினையாக உள்ளது. ‘கலைஞர் எழிலோவியங்கள்’ என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையை, கலைஞர் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் அவரது இறுதிப்பயண புகைப்படங்களும், ‘அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. உரிமை வீரர் கலைஞர்’ என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கலைஞர் உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு ‘3 டி’ தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது.

கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கலைஞர் பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது. ‘கலைஞருடன் ஒரு செல்பி’ என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் ‘டிஜிட்டல்’ தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் சிந்தனை’ சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் ‘ஏ.வி.’ தொழில்நுட்பத்தில் கலைஞர் பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. மேலும் கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் ‘டிஜிட்டல்’ திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மினிதியேட்டரில் கலைஞர் வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இப்படி எண்ணற்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கலைஞரின் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக, இன்று மாலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு நினைவிட வளாகம் மற்றும் மெரினா கடற்கரை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கலைஞர் நினைவிட திறப்பு விழாவுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் திரளுவார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் நினைவிடத்துக்கு வந்து செல்லும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து 150 சிறப்பு பஸ்களும், கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi