கராச்சி: பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதற்கு இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இடிக்கப்பட்ட இந்து கோயில் அமைந்துள்ள சிந்து மாகாணத்தின் மேயரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்தவருமான முர்தஜா வகாப் அவரது டிவிட்டரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஆய்வு செய்த போது அந்த மாதிரியான இடிப்பு சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. கோயில் இடிக்கப்படாமல் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.உண்மை நிலையை அறிய போலீசாருக்கு உதவும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து பஞ்சாயத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வபோது இது குறித்த விவரங்களை டிவிட்டரில் பதிவிடுவதாகவும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அனைத்து சமூக மக்களுடனும் துணை நிற்பதாகவும் தெரிவித்தார். அவர் மேலும், வழிபடும் கோயில்களை இடித்து வணிக வளாகங்கள் கட்ட ஒருபோதும் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார்.