Wednesday, February 28, 2024
Home » ஆண்டாளின் நீரோட்டம்

ஆண்டாளின் நீரோட்டம்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தியாகபூமியில் புண்ணிய நதிகள் பற்பல பெயர்களுடன் தோன்றி, அவை கடலில் சங்கமித்து கலக்கின்றன. சமுத்திர ராஜன் கணவனாகவும், புண்ணிய நதிகள் பத்தினிகளாகவும் கூறுவது உண்டு. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவிற்கும் உள்ள உறவு முறையை, நாயிகை நாயகன் என்ற பாவத்தில் ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்கள். ஸ்ரீஆண்டாள் பாடிய பாசுரங்கள் திருப்பாவை ஆகும்.

“சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே

தொல் பாவை பாடி அருளவல்ல பல்வளையாய்’’

`தொல்பாவை’ என்றால் பழமையானது. தொன்றுதொட்டு அனுஷ்டிக்கப்பட்டது வந்த நோன்பை, உட்கொண்டுள்ள திருப்பாவை பிரபந்தம் என்பது பொருள்.

ஆழ்வார்கள், ஆண்களாக பிறந்து பெண் பாவனையில் கண்ணனையே காதலித்தார்கள். அவர்களுடைய காதல் அளவு பட்டு இருந்தது. ஆனால், ஆண்டாள் பெண்ணாகப் பிறந்து கண்ணனை காதலிக்க அவளுடைய காதல் சிறந்த காதலானது எவ்வாறென்றால், `ஆண் ஆணை காதலிப்பது என்பது ஏறிப் பாயாத மேட்டுமடை’ ஒரு ஆணைப் பெண் இயல்பாக ஏற்பது என்பது `இறங்கி பாயும் பள்ளமடையாகும்’. இவளின் காதல் வேதாந்தங்களில் கொண்டாடப்படும் பரமபக்தியாகக் காணப்படுகிறது. ஆயர்பாடி கோபிகைகளை, கண்ணனோடு சேரக்கூடாது என்று கோபாலர்கள் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள்.

கண்ணனை காணாத கண்கள் பரிதவிக்கிறது. எப்படி கண்ணனை காணாது இருக்க முடியும் என்று கோபிகைகள் கண்ணீர் சிந்தி சோகக்கடலில் மூழ்கினர். அவர்கள் வருத்தம் நீக்கி சந்தோஷம் அடைய கண்ணன் ஒரு திருவிளையாடல் செய்கிறார்.நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட செய்கிறான். மழையின்றி பயிர்கள், விலங்குகள், உயிர்கள், என அனைத்தும் துன்பப்படுகின்றன. இதைக் கண்ட வயதானவர்கள், கோபாலர்கள் ஆகியோர் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்து ஆயர்பாடி கோபிகைகளை அழைத்து `கன்னிநோன்பு’ நோற்க செய்கின்றார்கள். அவ்வாறு செய்தால், மழை பொழியும் என்பது நம்பிக்கை. விரதத்திற்குத் தேவையானப் பொருட்களைக் கொடுப்பவராக, நந்தகோபனின் மகனான கண்ணன், உயர் அதிகாரியாக நியமிக்கப்படுகிறான்.

கோபிகைகள், கண்ணனே தங்களுக்கு கணவனாகக் கிடைக்க வேண்டும் என நினைத்து, யமுனை நதிதீரத்தில் முழுகி, மண் எடுத்து, `காத்யாயினி’ என்று பாவை(துர்கா) தெய்வத்தை மண்ணால் செய்து வணங்கினர். மழை பொழிந்து பயிர்கள் செழித்து, ஊர் சிறப்படைந்தது. அதன் பின்பு கண்ணனுடன் ஆயர்பாடி, கோபிகைகள் மகிழ்ந்தனர். கண்ணன் வராது மறைந்த நேரத்தில், (குரவைக்கூத்து) அவனை நினைத்து இருப்பது போல நாடகபாணியில் நடித்துக் காட்டினர்.

ஆண்டாளும், கண்ணனை அடைய ஆயர்பாடி பெண்கள் மேற்கொண்ட அதே செயலைப் பின்பற்றி, அனுகாரம் (ஒருவர் செய்தது போல மற்றவர் செய்தல்) நோன்பு நோற்றாள். அவள் எந்தச் சுவையிலும் நீராடவில்லை. எந்த படித்துறையிலும் முக்கி எழவில்லை, இங்கே நீராட்டம் என்று கூறுவது, கண்ணனும் நப்பின்னை தம்பதியினரை அணுகி, அவரிடம் ஆசிப்பெறுகின்ற செயலையே நீரோட்டம் என்று சொல்லப் படுகின்றது. எட்டு இடங்களில் நீரோட்டம் என்ற செய்தியானது மீண்டும்மீண்டும் வந்து மக்களின் துயரத்தை துடைக்க ஊற்று கோலாகத் திகழ்கிறது. ஆண்டாள் பாடியுள்ள 30 பாசுரங்களில், “நீரோட்டம்’’ என்று 8 பாசுரங்களில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மற்ற பாசுரங்களில் குறிப்பிடவில்லை. எனவே, அவர் கூறியுள்ள பாசுரங்கள் 1,2,3,4,6,13,20,27 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.

1) மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

சந்திரன், பூரணமாக பிரகாசிக்கும் நாளில், பகவானை வெளிச்சத்தில் பஜனைகள் செய்து வணங்கினால், அந்த நாளே நல்ல நாளாகும். பகவான் நமக்கு அனுக்கிரகம் செய்யும் நாள் நல்ல நாளாகும். நோன்பு என்றாலே அங்கமாக (உடம்பு) குளித்தல். ஆயர்பாடி கோபிகைகள் கண்ணனை பிரிந்ததால், தாபம் (ஏக்கம்) ஏற்படுகிறது. அந்த தாபம் தீரும்படி குளிக்க வேண்டும். நீரில் குளித்தால், தாபம் தீராது. ஆதலால், கிருஷ்ணனாகிய நீரில் ஆழமுக்கி, கிருஷ்ணனோடு இரண்டறக் கலந்து நீராடினால், ஜென்மத்தின் பயனைப் பெற முடியும். ஐஸ்வரியம், சொர்க்கம் முதலியவை அல்பமாக அழியக்கூடியது. நிலையாக நிற்கக்கூடிய மறுபிறவி இல்லாத “மோட்சபயனை’’ நாம் அடைய வேண்டும். கிருஷ்ண அனுபவம் செய்ய ஆசை இருப்போர் அனைவரும், என்னுடன் வாருங்கள். தங்களுடைய தாபம் தீரும்படி கிருஷ்ண அனுபவம் பெற, நீராட அழைக்கின்றாள்.

2) வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்
பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே
நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்
சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

இதில்: நெய்உண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

ஆண்டாள், ஆயர்பாடியில் கோபிகைகள் எவ்வாறு பேசுவார்களோ, அதைப் போலவே மாறிவிடுகிறாள். நெய், பால் வெண்ணெயோடு சேர்ந்து ஆயர்பாடி பெண்களின் நறுமணமும் வீச பேசுகின்றாள். பால் குடிக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும். ஆனால், அவள் நெய் உண்ணோம்.. பால் உண்ணோம் என்று கூறுகிறாள். நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்பதில் இருந்து வேறுபாடு இருக்கிறது. அதற்குக் காரணம், அவர்கள் கண்ணன் மீது கொண்ட மாறாத அன்பு தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற நிலை அறியாதது போல ஆனந்தமாக ஆடும் அவர்கள், மொழியிலேயே அந்த பேச்சை பேசுகின்றாள். நம்மாழ்வார் உண்ணும் அண்ணம், பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனுக்கே என்கின்றது போல, தான் ஆயர்பாடி சிறுமிகள் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் வித்தியாசம் அறியாமல் கிருஷ்ண மாயையில் மயங்கி கிடக்கிறார்கள்.

பொதுவாக, விடியற்காலையில் எழுந்து குளித்த பின்புதான் உணவு உண்ண வேண்டும் என்பது சாஸ்திரதர்மம். அதிகாலையிலே எழுந்து கிருஷ்ண அனுபவம் பெற்றவள், நாமத்தை பாடி பரவசமாக அடைந்தாள். அந்த தாபம் தீர வேண்டும்.

3) ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி
பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு
கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்
பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

இதில்: நம்பாவைக்குச் சாற்றி நீராடினாள்

பிறருடைய நோன்பைக் காட்டிலும், தங்களுடைய நோன்புக்குள் இருக்கும் பெருமையைப் பற்றி கூறுகிறாள். நோன்பு நோற்பது பொருட்டல்ல தங்களுடைய தாபம் தீரும்படி செய்ய வேண்டும். கிருஷ்ணனோடு கலக்கின்ற அனுபவமே பூர்வ பந்தம் மிக்கது. தமிழ் அகப் பொருளில் கலவியை நீராடல் என்று கூறுவார்கள். தோழியை பிரிந்த தலைமகள் ஆனவன் கனவினிலே தலைமகனை கண்டு அவனோடு காதல் கொண்டாள். அவளின் வடிவத்தில் ஏற்பட்ட மாறுதலை கண்ட தோழி யானவள் எங்கு சென்றாய்? என்று கேட்டாள்.

சுனை ஆடி வந்தேன் என்று கூறுவாள். இதில் `சுனை’ என்பது மலையின் மேல் நீர் நிலையை குறிக்கும். நீராடல் என்பது கலவியலை காட்டும். இங்கு கிருஷ்ணனும் ஒரு தடாகமானவன். என்று உருவகப்படுத்துகிறாள். தயரதன் பெற்ற மரகத மணித்தடம் என்று திருவாய் மொழியிலே நம்மாழ்வார் பாடுகிறார். ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதே எல்லையில்லா ஆனந்தமாகும். கோடை வெயிலில் திரிந்தவன் தடாகத்தில் மூழ்கி எப்படி நீராடுவானோ, அதுபோல கிருஷ்ணனோடு இரண்டற கலந்து நீராட வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமாக இருந்தன.

4) ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இதில்: மார்கழி நீராட மகிழ்ந்தேலோ

முதல் பாடலில், பரத்வத்தையும் இரண்டாவது பாட்டில் வியூகத்தையும், மூன்றாவது பாட்டில் அவதாரத்தையும் பேசினாள். இப்பாட்டில் அந்த அந்தர்யாமித்வம் பற்றி பேசுகிறாள். மழை என்பது மண்டல வர்ஷம். வட்டம் என்றும் கூறுவார்கள். அதாவது, புண்ணியம் செய்த ஒரு வட்டத்திலேயே மழை பெய்து, பாவம் செய்தவர்கள் வட்டத்திலே பெய்யாதிருப்பது. இப்படிப்பட்ட இயல்பை உடையவன் நீ என்று சொல்லி பர்ஜனை அழைக்கிறார்கள்.

உன்னிடத்தில் உள்ளதை மறைக்காமல் எங்களுக்கு கொடு என்று கொடுப்பாயாக பரம பாகவதர்களைக் கண்டால் இதர தெய்வங்கள் வணங்க வேண்டும் என்று வேதசாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய பரம பாகவதரைக் கண்டதும் மழை தெய்வத்திற்கு உற்சாகம் உண்டாகிறது. இவர்களுக்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக, கோபியர்களிடம் சென்று, நான் என்ன செய்ய வேண்டும் என்று அருகே வந்து கேட்க, உலகம் வாழவும் நாங்கள் மார்கழி நீராடவும் நீ மழையாக பொழிய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

6) புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன்
கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம்
கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும்
யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

இதில்: உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ

கிருஷ்ணன் ஓர் ஆயர்பாடி பெண்ணின் உள்ளத்தில் புகுந்து படுக்கையில் வெள்ளத்திலே, `ஹரி.. ஹரி..’ என்ற நாமத்தை கூறிக்கொண்டே இருக்கிறாள். `ஹரி’ என்ற சொல்லுக்கு பாவங்கள் போக்குபவன், விருப்பங்களை தருபவன் என்று பொருளாகிறது. அந்த திருநாமத்தை எங்கள் காதுகள் வழியாக உள்ளம் புகுந்து முனிவர்கள், யோகிகள் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து அவன் ஆனந்தம் தந்து கொண்டிருக்கின்றான். அவன் திருநாமத்தை சத்தமாக உச்சரித்தனர். கிருஷ்ணனை பிரிந்ததால் வந்த தாபத்தினாலும், உச்சரித்து உலர்ந்து வெடித்தது எங்கள் நெஞ்சினிலே புகுந்து பதப்படுத்தி ஆனந்தத்தை பிரதிபலிப்பாயா.. என்று கூறி நாங்கள் வந்துவிட்டோம் `நீயும் எழுந்து வா’ என்று அழைக்கிறாள்.

13) வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக்
கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.”

இதில்: குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளத்தில் மேயும் பறவை உருவம் கொண்டு வந்த கள்ள அசுரனான பக்காசூரனை, வாயைப் பிளந்து கொன்றான். பொல்லாத அரக்கனான ராவணனுடன், வீரத்தோடு போர் செய்து மடியச்செய்தான். இப்படிப்பட்ட கீர்த்திகளை உடைய ராமகிருஷ்ண கீர்த்திகளை எல்லாம் புகழ் பாட வேண்டும். அதற்காக நாம் கிருஷ்ணன் அனுபவம் பெறுவதற்காக அவனோடு கூடும் இடத்தில் அவர்கள் அடைந்துவிட்டார்கள்.

ஆகவே, குளிர்ச்சி உண்டாகும் படி, அதாவது சூரிய கிரணம்பட்டு நீர் உஷ்ணம் அடைவதற்கு முன்னே நாம் உடலும் உள்ளமும் குளிரும்படி குளிக்க வேண்டும். ஆனால், இங்கு கூறப்பட்டுள்ள `குடைந்து நீராடாதே’ என்றால் நீர் அலைகள் தெறிக்கும்படி நீரில் அமிழ்ந்து கிருஷ்ணனின் பிரிவு தாகம் மாறும்படி நீராட வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறு நீரில் குளிக்காமல் கிருஷ்ணனாகிய தடாகத்தில் கல்யாண குணங்களாகிய பெருமைகளை நாம் பேசிப் பேசி திளைக்க வேண்டும்.

இத்தகைய குள்ள குளிர குடைந்து நீராட்டம். ஆதலால், நீ.. கிருஷ்ணன் படுத்த படுக்கையை விட்டு எழாமல் நீ மட்டும் கள்ளத்தனமாக கிருஷ்ணன் குணங்களைச் செயல்களைத் தனியாக அனுபவிக்கின்றாய். அதை விடுத்து நாங்களும் அனுபவிக்க அவனோடு கலந்த உன் காட்சியை யாவது எங்களுக்கு காட்ட எழுந்து எங்களுடன் கலந்து கொள்ள வா.. என்று ஆண்டாள் அழைக்கிறாள்.

20) முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

இதில்: எம்மை நீராட்டியலோ எம் பாவாய்

முப்பத்து மூவர் தேவர்களும் சென்று ராட்சசர்கள் செய்யும் துன்பங்களைக் கூறி நடுங்கினர். அவர்களின் துன்பத்தை நீக்கினான் கண்ணபிரான். சிறுத்த இடையை உடைய நப்பின்னையே, மென்மையான குணங்கள் நிறைந்த பிராட்டியே.. நீ தூக்கம் தெளிந்து எழுந்து வந்து எங்கள் விரதத்திற்குத் தேவையான விசிறி, கண்ணாடி போன்றவற்றை வழங்க வேண்டும். வைணவர்கள் என்பவர்கள் பிறருக்கு வந்த துன்பத்தை தன்னுடைய துக்கமாக ஏற்றுக் கொள்வர்.

அதனால், உன்னுடைய மணவாளனான கிருஷ்ணனை நீராட்டம் பண்ண தந்து அருள வேண்டும். இந்த இடத்தில் ஆயர்பாடி பெண்களான நாங்கள் கிருஷ்ணனை பிரிந்ததால் தேகம் மெலிந்த எங்களையும் உங்கள் மணவாளனான கண்ணபிரானையும் நீயே சேர்த்து வைக்க வேண்டும். கண்ணனுடைய அன்பு மழையிலே நாங்கள் நனைய வேண்டும் என்று கேட்கின்றோம் என்று நப்பின்னை பிராட்டியிடம் ஆயர்பாடி சிறுமிகள் தாங்கள் வந்த காரணத்தை விண்ணப்பிக்கிறார்கள்.

27) கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!

உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்
பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணி
வோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
நெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

இதில்: கூடியிருந்து குளிர்ந்தேலோ

விரோதிகளையும் வெல்லும் குணம் உடையவரே வீரகுணத்தினால் வெல்லுவாய். கம்சன், சிசுபாலன், ராவணன் போன்றோரின் வீரத்தால் வென்றாய். உன்னுடைய கல்யாண குணமாகிய (சௌசீலயம்) நீர்மை குணத்திலே எங்களை வென்றாய். உயர்ந்தவன் தாழ்ந்தவர்க்காக இறங்கி வருதல். அதாவது மேட்டில் இருக்கும் நீர் பள்ளத்தை நோக்கி வருவது போல உயர்ந்த இடத்தில் இருக்கின்ற கண்ணபிரான் தாழ்ந்த இடையர் குலத்தைச் சேர்ந்த எங்களுக்காக இறங்கிவந்தாய். உன்னுடைய குணத்திற்காக வென்றாய்.

கண்ணபிரானை பிரிந்த நிலையில் மலரிட்டு நாம் முடியும் என்றும் நெய் பால் ஆகியவற்றை உண்ணோம் என்று கூறினோம். ஆனால், உன்னைக் கூடிய பிறகு நாங்கள் புத்தாடையை அணிந்து கொண்டு மூட நெய் பெய்து முழங்கை வரை அது வழிந்து ஓடுகிறது அதை நாங்கள் இப்பொழுது உண்கின்றோம் என்றாலும்கூட ஒருவரை ஒருவரை சார்ந்து அனைவரும் கூடி இருக்கின்ற இந்த தருணம் உண்பதைக் காட்டிலும் உன்னோடு கூடி இருக்கின்ற நேரமே புண்ணிய காலமாகும். ஆகவே, குளிர்ந்தேலோ என்பதில் உண்பதைவிட உன்னோடு குளிர்ந்து கூடியிருக்கவே ஆசைப்படுகின்றோம்.

வெயிலால் கமர் பிளந்த வயல் போல பிரிவால் பிளந்த நெஞ்சங்கள் குளிரும்படியாக இப்பொழுது நாங்கள் உன்னோடு சேர்ந்து கூடியிருப்பதே குளிர்ந்த நீரோட்டலாகும். நித்ய முக்தர்கள் பேரறிவுடைய ஜீவாத்மா பரமாத்மாவோடு கூடியதாய் சகல விருப்பங்களையும் அனுபவிக்கின்றன.இந்த எட்டு பாசுரங்கள் மூலம் ஆண்டாள் கண்ணனை எப்படி நீராடினால் என்பதை நாம் அறிந்து கொண்டோம். அவனோடு கலந்த அன்பே ஆகும். நாமும் கண்ணனுடன் இரண்டறக் கலந்து, அவனுடைய அன்பினை பெறுவோம்!

தொகுப்பு: பொன்முகரியன்

You may also like

Leave a Comment

18 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi