Saturday, June 1, 2024
Home » மங்களங்களை அருளும் மாங்கேணீ ஈஸ்வரர்!

மங்களங்களை அருளும் மாங்கேணீ ஈஸ்வரர்!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம்

காரையூர் என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில், புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 25.கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடக்கில் சுமார் 15.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஊராகும். காரையூருக்கு, புதுக்கோட்டையிலிருந்து சித்தூர் வழியாகச் செல்லும் பொன்னமராவதி பேருந்தில் ஏறி அரசமலை விலக்கிலிருந்து மேற்கு முகமாக சுமார் 4.கி.மீ. பயணித்தால் காரையூரை அடையலாம். அதைப் போல், புதுக்கோட்டையில் இருந்து நகரப் பேருந்து வசதிகளும் உள்ளது.

இவ்வூர் முழுக்க, முழுக்க வேளாண்மையை நம்பியுள்ள கிராமமாகும். காரணம், காரை என்றால் சுண்ணாம்பு என்று பொருள். இங்கு சுண்ணாம்புக் கற்கள் காணப்படுவதால் காரைக் கற்கள் நிறைந்த ஊர் காரையூர் எனப்படுகிறது. காரையூர், வடபுறத்தில் வயலை ஒட்டி ஒரு சிவன்கோயில் கிழக்குப் பார்த்த நிலையில் மாங்கனி ஈஸ்வரர்’ என்ற பெயர் கொண்டவராக காணப்படுகிறார். இந்த கோயில் கல்வெட்டில், இவ்விறைவன்மாங்கேணீ ஈஸ்வரர்’ என்ற பெயரை மக்கள் ‘மாங்கனி ஈஸ்வரர்’ என அழைப்பதோடு, அதாவது காரைக்கால் அம்மையார் மாங்கனி வடிவில் கதையைப் பொருத்தி மாங்கேணீ ஈசுவரரை, மாங்கனி ஈசுவரர் என பெயர் மாற்றம் செய்து அழைக்கின்றனர்.

அம்பாளை சௌந்தரநாயகி என்றும் அழைக்கின்றனர். இந்த சிவன் கோயில், உயரமற்ற ஒரு சுற்று மதிலுக்குள் கருவறை, அர்த்த மண்டபம், இடைக்கட்டு, மகா மண்டபம் என்ற அமைப்பில் காணப்படுகிறது.கட்டிட அமைப்பு – தாங்குதளம் என்ற உபானத் தரையோடு வைத்து அதன் மேல் ஜகதி என்ற நீள வரிசைக்கல், அதன் மீது முப்பட்டடைக்குமுதம், கண்டம் மேல் என்ற உள்வாங்கிய அமைப்பு, அதற்கு மேல் வேதிகை, சுவரின் மேல் புஷ்ப போதிகை, பிரஸ்தரம் கூரை, கூரைக்கு மேல் விமானம் ஆகிய அமைப்பில் இந்த கோயிலின் கட்டடக்கலை அமைந்துள்ளது. சுவரின் கருவறையின் மூன்று பக்க தேவகோட்டங்களிலும், தெய்வ உருவங்கள் இல்லை.

புஷ்பபோதிகை பிற்கால, அதாவது 13 ஆம் நூற்றாண்டு சோழர் கால போதிகையாக உள்ளதால், இது பிற்கால சோழர் கலைப்பாணி கோயிலாகும். சுவாமிக்கும் – அம்பாளுக்கும் தனித்தனி இரண்டு கோயில்கள் உள்ளன. பரிவாரத் தேவதை களாக மூலப்பிள்ளையார் கோயில் ஒரு சிறிய கருவறையுடன் உள்ளது. சுப்பிரமணியர் கோயில் கருவறையோடு முன் மண்டபம், தூண் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அம்பாள் கோயில் சுவாமி கோயிலின் வடக்கில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் கோயிலும், வடகிழக்கில் உள்ள பைரவர் கோயில் சிறுசிறு கருவறையோடு அமைந்துள்ளது.

கல்வெட்டுச் செய்திகள் காரையூர் மாங்கேணீ ஈஸ்வரர் கோயிலில் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் திரிபுவனச் சக்கரவர்த்தியின் 25 வது ஆட்சியாண்டு கல்வெட்டு, இது காரையூர், ஒல்லையூர் கூற்றத்தின் ஒரு ஊர் என்பதை தெரிவிக்கிறது. தன்னன் தெங்கநான குலோத்துங்க சோழ கடம்பராயன் காரையூர் வயலில் 14 வேலி நிலமும் வரி நீக்கிக் கொடுக்கப்பட்டது. இந்த கோயிலின் தென் பிராகார வெளிச்சுவரில் உள்ள திரிபுவனச் சக்கரவர்த்திகள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கேரளன் மங்களா தேவனான நிஷதராயர், இந்த கோயில் கைலாசபிள்ளையாருக்கு அமுது செய்யவும், பணியாரத்திற்கும் செங்குன்றகுடிகள் நிலத்தை கொடையாக கொடுக்கப்பட்டது.

கோயில் வாசற்படிக்கு வடபுறச் சுவரில் 13-ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னரில் ஒருவரான எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர தேவரின் 18 வது ஆட்சியாண்டு கல்வெட்டில், மாங்கேணீ ஈஸ்வரர் கோயில் மாகேஸ்வர்களும், தேவகன்மிகனும், கோயில் கணக்கர் ஆகியவர்கள் சேர்ந்து அவ்வூர் வெள்ளாளர் சொல்படி வரி நீக்கி நிலம் கொடுக்கின்ற போது, அவ்வூர் பிரமாதராயர் மானம் போக்கிட வேணுமென மறுப்பு கூற இவ்வூர் வேளான் தம்பி வென்சன்றன் செங்குன்றன் குடிகாட்டை விற்பதற்கு விலை கூறிய பிரான்மலை திருக்குன்றம் நாயானாற்கு விற்கப் போவது கேட்டு அந்நிலம் காரையூர் திருமாங்கேணி ஈஸ்வர முடையார் கோயிலுக்குரியது என்று சொன்னதால் மேற்படி கோயில் மாகேஸ்வார்கள், தேவகன் முதலானவர்கள் நூறு பணம் தந்து மாங்கேணீ ஈஸ்வரருக்கு திருநாமத்து காணியாக பெறப்பட்டதை தெரிவிக்கிறது.

கோயில் மேல் பிராகாரம் வெளிச்சுவரிலுள்ள எம்மண்டலமும் கொண்ட குலசேகர தேவரின் கல்வெட்டு காரையூர் ஊரார் மேற்படி சிவன் கோயில் ஷேத்திர பிள்ளையார் என்ற தெய்வத்திற்கு அமுது படிக்கும், காய்கறி உணவுக்கும், சாத்துப்படி என்ற உடை அலங்காரத்திற்கும் காரையூர் குளத்து வடகரைக்கு மேற்கு ஆசார வல்லன்குழி என்ற வயல்பரப்பை வரிநீக்கி கொடுத்தமையைத் தெரிவிக்கிறது.

தென்புறம் வாசற்படிக்கு கிழக்கிலுள்ள சோனாடு கொண்டருளிய முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 3-வது ஆட்சியாண்டு கல்வெட்டில் மேற்படி கோயில் சிவபிராமணர், உடையார், நம்பி உடையான் ஊர் பட்டன் இருவரும் இக்கோயிலுக்கு சந்தியாதீபம் விளக்கு எரிக்க ஒப்புக்கொண்டு இடையர் குன்றனிடம் நான்கு காசுகள் பெற்றதைத் தெரிவிக்கிறது.

தென்பிராகார சுவரிலுள்ள தேவபாண்டியர் மதுரைக்கு வந்த நாளில் இக்கோயில் அமுதுப்படிக்கு நீர், நிலம், வயலிலும் செம்பாதி நிலத்தினை காராண்கிழமை வரிநீக்கி கொடுத்தது என கூறப்பட்டுள்ளது. வட பிராகார சுவரிலுள்ள வீரப்பிரதாபராயர் ஆட்சிக்காலத்தில் மேற்படி அரசர்பேரில் ஒரு வேளை பூசை செய்வதற்கு நஞ்சைநிலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல கல்வெட்டுகள் கூறும் செய்திகளால், இந்த கோயில் பெற்ற சிறப்பும், செழுமையும் இக்கோயில் நடைமுறை பூசை, விளக்கு எரித்தல் போன்ற கோயில் காரியங்களையும் இங்கு ஏற்பட்ட சமுதாய பின்புலங்களையும் அறிந்துகொள்ளலாம்.

தொகுப்பு: புதுகை பொ.ஜெயச்சந்திரன்

You may also like

Leave a Comment

4 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi