சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (23). இவர் ஐடிஐ தொழிற்கல்வி முடித்துள்ளார். மணிகண்டன் சாலிகிராமம் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் இந்து(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்துவை கடந்த 6 மாதங்களாக மெக்கானிக் மணிகண்டன் காலை மற்றும் மாலையில் பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும் படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
பல முறை கல்லூரி மாணவி மணிகண்டனிடம் உங்களை எனக்கு பிடிக்கவில்லை. என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கண்டித்துள்ளார். இருந்தாலும் மணிகண்டன் ‘தன்னை தவிர நீ யாரையும் காதலிக்க கூடாது’ என்று எச்சரித்து வந்துள்ளார். இதுகுறித்து கல்லூரி மாணவி தனது வீட்டில் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்துவை வழிமறித்து மெக்கானிக் மணிகண்டன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வந்து இந்து அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மகள் மயங்கியதும் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின் படி விருகம்பாக்கம் போலீசார் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்திய போது, நடந்த சம்பவத்தை அவர் வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதைதொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவியை காதலிக்க வலியுறுத்தி தொந்தரவு செய்த மெக்கானிக் மணிகண்டன் மீது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று கைது செய்தனர்.