Thursday, May 16, 2024
Home » கொரோனா முடிந்தும் தொடரும் கொள்ளை: பிஎம் கேர்ஸ் மூலம் ரூ.12,700 கோடிககு மேல் குவிப்பு ; மோசடியை மூடி மறைக்க பாடுபடும் மோடி அரசு

கொரோனா முடிந்தும் தொடரும் கொள்ளை: பிஎம் கேர்ஸ் மூலம் ரூ.12,700 கோடிககு மேல் குவிப்பு ; மோசடியை மூடி மறைக்க பாடுபடும் மோடி அரசு

by Ranjith
Published: Last Updated on

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திர திட்டம் மூலம் ரூ.12,000 கோடிக்கு மேல் ஒன்றிய பாஜ சுருட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, ‘பிஎம் கேர்ஸ்‘ நிதித் திட்டம் மூலம் பாஜ செய்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொணர வேண்டும் என எதிர்க்கட்சிகள் சட்டப்போராட்டத்தைத் துவக்கியுள்ளன. தேர்தல் பத்திர திட்டம் மூலம் திரட்டிய நிதி விவரத்தை மறைக்க ஒன்றிய பாஜ அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் சேர்ந்து எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டனவோ, அதைவிட தீவிரமாக பிஎம் கேர்ஸ் திட்ட நிதி விவரத்தை மறைக்க முயற்சி செய்து வருகிறது பாஜ.

இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியும் ஒன்றிய அரசு வாய் திறப்பதாக இல்லை. நீதித்துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை போல, எந்த நோட்டீசுக்கும் முறையான பதில் தராமல் அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது 2020 ஜனவரி 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் தீவிரமான பிறகு, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அதிக செலவினமும், நிதித் தேவையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2020 மார்ச் 27ம் தேதி, ‘பிஎம் கேர்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள உதவும் வகையில் இந்த திட்டத்தில் தனி நபர்கள், நிறுவனங்கள் நிதி வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் நிதி முழுமைக்கும் வரி விலக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டது. நிதி வழங்குவோர் முழுமையான வரி விலக்கு பெறும் வகையில், வரி மற்றும் இதர சட்ட விதிகள் திருத்தம் 2020, வருமான வரிச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதன்பிறகு ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (Prime Minister’s National Relief Fund) நிதி வழங்குவோருக்கு கிடைக்கும் வருமான வரிச் சலுகை போன்றே பிஎம் கேர் திட்டத்திலும் வருமான வரிச் சட்டம் 80ஜியின் படி முழு வரி விலக்கு பெறலாம். மொத்த வருவாயில் 10 சதவீத பிடித்தம் செய்வதும் பிஎம் கேர் நிதிக்குப் பொருந்தாது என சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது ? மொத்தம் எவ்வளவு நிதி வசூலானது? நிதி வழங்கியவர்கள் யார்? என பல கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

ஒன்றிய பாஜ அரசின் வெளிப்படைத் தன்மையே இல்லாத திட்டங்கள் வரிசையில் இதுவும் சேர்ந்து விட்டது. முறைகேடு இல்லை என்றால், இந்த விஷயத்தை இவ்வளவு காலமாக ஏன் மூடி மறைக்க வேண்டும்? பிஎம் கேர்சில் இதுவரை வசூலான தொகையை அரசு முன்வந்து அறிவிக்காவிட்டாலும், அவ்வப்போது வெளிவந்த செய்திகள் மூலம் ரூ.12,700 கோடி வசூலானதாக அறிய முடிகிறது. மூடி மறைத்தும் இவ்வளவு என்றால், உண்மையில் இதற்கு மேலும் வசூலாகியிருக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன என பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

‘தேர்தல் பத்திரம்’ போன்றே மோடி அரசின் மிகப்பெரிய மோசடி இது என வர்ணித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் , ‘‘சில பெரிய நிறுவனங்கள் மட்டும் இந்தத் திட்டத்துக்கு வழங்கிய நிதியை வெளிப்படையாக அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் குழுமம் ரூ.500 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி, பேடிஎம் ரூ.500 கோடி, ஜெஎஸ் டபிள்யூ குரூப் ரூ.100 கோடி வழங்கியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, குறைந்த பட்சம் 38 ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பிஎம் கேர்சுக்கு ரூ.2,105 கோடியை வழங்கியுள்ளன.

இதுதவிர, பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பங்களிப்பாக ரூ.150 கோடி வந்துள்ளது. அவ்வப்போது வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இதனை அறிய முடிகிறது. ஆனால், ஆர்டிஐ மூலம் பல முறை கேள்வி எழுப்பியும் விவரங்களைத் தர ஒன்றிய அரசு மறுத்து விட்டது. பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் நிதி பங்களிப்பு விவரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டும், அதில் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி, இன்றளவும் பிஎம் கேர்சுக்கு நிதி செலுத்துவதற்கான இணைப்புகள் அந்த இணையளத்தில் இடம் பெற்றுள்ளன. அதாவது, கொரோனா முடிவுக்கு வந்த பிறகும் வசூல் வேட்டையை ஒன்றிய அரசு நிறுத்துவதாக இல்லை. மேலும், பிரதமர் தேசிய நிவாரண நிதி (பிஎம்என்ஆர்எப்), தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை பிரதமர் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் நிதி திட்டங்கள். அரசு நேரடியாக நிதி பெறுவதற்கு இந்தத் திட்டங்கள் இருக்கும்போது, பிரதமர் பெயரில் பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி,

அரசு இணைய முகவரியும் கொடுத்து வசூல் செய்து, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஒன்றிய அரசு கைவிரிப்பது எந்த வகையில் நியாயம்? வெளிப்படைத் தன்மையுடன் ஒன்றிய அரசு இருக்கிறதென்றால், இதில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உண்மையானால் சட்ட ரீதியாகவும், அதிகாரத்தின் மூலமாகவும் அனைத்து விவரங்களையும் மூடி மறைப்பது ஏன்? பலன் அடைந்தது யார்? யாரை காப்பாற்ற இத்தனை மெனக்கிடல்களை ஒன்றிய அரசு செய்கிறது என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

* கணக்கு காட்டாமல் சுருட்ட வசதியாக…
அவசர காலத்துக்கான நிவாரண நிதிக்காக தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவை உள்ளன. இதன் வரவு, செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆனால் இந்த தணிக்கை ஏதும் இல்லாமல், கிடைக்கும் பணம் முழுவதையும் சுருட்டும் வகையில் அமைக்கப்பட்டது தான் பி.எம்.கேர்ஸ் என்கிற குற்றச்சாட்டு இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது.

மிரட்டி… உருட்டி…
எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என மக்கள் பிரதிநிதிகளை கட்டாயப்படுத்தி – சொல்லப்போனால் மிரட்டிக் கூட பி.எம்.கேர்ஸுக்கு நிதியை சேர்த்திருக்கிறார்கள். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் அளவுக்கு நிதியளிக்க பாஜ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர ராணுவ வீரர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை தர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற புகாரும் எழுந்துள்ளது.

* லடாக் ஊடுருவலின்போது சீனாவில் இருந்து வந்த நிதி
பிஎம் கேர்சுக்கு இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் நிதியுதவி வழங்கியுள்ளன. சீனாவின் டிக்டாக் நிறுவனம் ரூ.30 கோடி,மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களான ஷாவ்மி ரூ.10 கோடி, வாவே ரூ.7 கோடி வரை, ஒன்பிளஸ் ரூ.1 கோடி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக லடாக் மற்றும் அருணாசல பிரதேச எல்லையில் சீனப் படைகள் ஊடுருவியபோதுதான் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சீனாவை எதிர்ப்பதாக கூறும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

* தனியார் அறக்கட்டளைக்கு அரசு இணைய முகவரி ஏன்?
பிஎம் கேர்ஸ் நிதி விவரங்களை வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருவதை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, பிஎம் கேர்ஸ் என்பது தனியார் அறக்கட்டளை அமைப்பு. இதனை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துவது கிடையாது.

எனவே, ஆர்டிஐ சட்ட விதிகளின்படி நிதி விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்தது. ஆனால் பிஎம் கேர்ஸ் https://pmcares.gov.in என்ற இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. gov.in என்பது அரசு இணையதளங்களுக்கு மட்டுமே உரியது. அப்படியிருக்க, தனியார் அறக்கட்டளைக்கு இந்த முகவரியை ஒதுக்கியது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

* வெண்டிலேட்டர் விலையில் கோல்மால்!
பல கோடிகளில் திரட்டிய நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்பதற்கு சரியான பதில் ஏதும் இல்லை. 58,850 மேக் இன் இந்தியா வெண்டிலேட்டர்கள் ரூ.2000 கோடிக்கு வாங்கப்பட்டது, ரூ.1000 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது, மருந்து, மாத்திரைக்கு 100 கோடி செலவானது என பொத்தாம்பொதுவாக கூறப்பட்டது. அதிலும் தில்லுமுல்லு நடந்துள்ளது. ஒரிஜினல் விலையை விட வெண்டிலேட்டருக்கு இரு மடங்கு அதிக விலையை கணக்கு காண்பித்துள்ளனர்.

வாங்கிய பணத்தில் அடிமாட்டு விலைக்கான செலவே செய்துவிட்டு மற்ற அனைத்தும் சுருட்டப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்ட விவரம் மற்றும் அதற்கு பிஎம் கேர்சில் இருந்து எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அஞ்சலி பரத்வாஜ் என்பவரால் கோரப்பட்டிருந்தது. அதில், டெல்லி டிஆர்டிஓ கொரோனா மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு 250 பிஎம் கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்டதும், அதற்கான செலவு பிஎம் கேர்சில் இருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிய வந்தது.

மேலும் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்ப பரிந்துரை குழு ஒப்புதல் இல்லாத 2 தனியார் நிறுவனங்களுக்கு வெண்டிலேட்டர் ஆர்டர் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. பிஎம் கேர்ஸ் நேரடியாக ஆர்டிஐயில் பதில் தர மறுத்தபோதும், வேறுவழிகளில் திரட்டி சிறிதளவு தகவலிலேயே பெரும் மோசடி நடந்தது அம்பலம் ஆகியுள்ளது.

* ெகாடுத்தாச்சு… ஆனா, வரல…
2020 மே 13ம் தேதி அதிகாரப்பூர்வ அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. அதில், பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.100 கோடியை தடுப்பூசி மேம்பாட்டுக்காக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த நிதி யாருக்குச் சென்றது என்ற விவரம் இல்லை. பின்னர், 2021 ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் வெளியிட்ட விளக்கத்தில், கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுக்காக பிஎம் கேர் நிதி எங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெளிவு படுத்தியிருந்தது.

அப்படியானால், அந்த நிதி யாருக்குப் போனது? பலன் பெற்றது யார்? என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. முதன்மை அறிவியல் ஆலோசகரின் (Principal Scientific Advisor) மேற்பார்வையில் தடுப்பூசி மேம்பாட்டு ஆராய்ச்சி நடைபெறும் என பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தங்கள் மேம்பாட்டில் இந்த ஆராய்ச்சி நடைபெறவில்லை என முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது, இத்திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi