Thursday, November 30, 2023
Home » தெளிவு பெறுஓம்: குலதெய்வம் தெரியவில்லை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி வணங்க வேண்டும்?

தெளிவு பெறுஓம்: குலதெய்வம் தெரியவில்லை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி வணங்க வேண்டும்?

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குலதெய்வம் தெரியவில்லை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி வணங்க வேண்டும்?
– ஸ்ரீனிவாசமூர்த்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பதில்: குலதெய்வத்தை அவசியம் வணங்க வேண்டும். குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் நாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாது. இதை, இன்றும் நமது கிராமத்தில் பின்பற்றுகிறார்கள். குலதெய்வத்தை வம்சா வளியாக வழிபட்டு வருபவர்கள், ஏதோ சில காரணத்தினால் நடுவில் விட்டு விட்டால், நம்முடைய முன்னோர்கள் எந்த குல தெய்வத்தை வணங்கினார்கள் என்பது தெரியாமல் போய்விடும். அப்படித் தெரியாமல் போன குடும்பங்கள் நிறைய உண்டு.

அதே சமயம் யாராவது ஒருவர் சொன்னார் என்பதற்காக தவறான ஒரு விஷயத்தை நாம் செய்து விடக்கூடாது. குலதெய்வம் தெரியவில்லை என்று சொன்னால், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொள்ளுங்கள். அதையே குல தெய்வமாக பாவித்துக் கொண்டு, அதற்கு மஞ்சள், குங்குமம், புஷ்பங்கள் சாற்றுங்கள். குலதெய்வம் அதில் வந்து இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து அதையே குலதெய்வமாக பாவித்து வழிபட்டு வந்தால், ஒரு நாள் உங்கள் குலதெய்வம், தான் இருக்கும் இடத்தையும், தான் யார் என்பதையும் வழிகாட்டும். குல தெய்வத்தை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், குலதெய்வம் உங்களை அறியும்.

? நாள், யோகம், திதி போன்ற விஷயங்கள் சரியில்லை. அப்போது காரியங்கள் செய்ய என்ன செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் செய்வது?
– எஸ்.ஜனா, சிதம்பரம்.

பதில்: நமக்கு நல்வழி காட்டும் சாஸ்திரங்கள் நெருடலானது என்று நாம் நினைக்கின்றோம். கடைபிடிக்க முடியாதது என்று விட்டு விடுகின்றோம். விதிகள் கடுமையாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். விதிகள் இருப்பது போலவே விதிவிலக்குகளும் சாத்திரத்தில் உண்டு. அது எந்த சந்தர்ப்பத்திலும் மனிதனின் செயல்களுக்கு தடையாக இருப்பதில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எந்த நாளாக இருந்தாலும், அந்த நாள் நன்மை தீமைகள் கலந்துதான் இருக்கும். அப்படி இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நாளில், வரமோ, யோகமோ, திதியோ, நட்சத்திரமோ சரியாக அமையவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அன்றைக்கு சில காரியங்களைச் செய்துதான் ஆக வேண்டும் என்று கருதினால், நாம் பின்பற்ற வேண்டியது ஓரை சாஸ்திரம் எனப்படும் விஷயத்தை. ஒரு காலத்தில் இதற்கு பிரதானமான முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். கல்யாணப் பத்திரிகை அடிக்கும் பொழுது நல்லோரையில் என்கின்ற வார்த்தை மிக மிக முக்கியம்.

ஒரு நாளில் காலை சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்த ஓரை மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக திங்கட்கிழமை காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரம் சந்திர ஓரை நடக்கும். அதற்குப் பிறகு சனி ஹோரை. அதற்குப் பிறகு குரு ஓரை. வாரத்தை பின் நோக்கி (anti clock wise) ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்கிற ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், அடுத்தடுத்த ஓரைகளை மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். திங்களுக்கு பிறகு புதன்கிழமை போகக் கூடாது.

திங்கட்கிழமைக்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை அதற்கு முன்னால் சனிக்கிழமை அதுதான் சந்திர ஓரைக்கு அடுத்து வருகின்ற ஓரை. இப்படி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம். பொறியியல் வேலைகள் செய்வதற்கு சனி ஓரை. தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு புதன் ஓரை. புதன் ஓரையில் நிலம் வாங்குதல் முதலிய விஷயங்களைச் செய்யக்கூடாது. பெண் பார்த்தல் திருமண பேச்சுக்களை நடத்தக் கூடாது. இந்த அடிப்படையில் நாம் செயலாற்றினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

?வலம்புரிச் சங்கு பூஜை அறையில் வைப்பது நல்லதா?
– ரெங்கா, காஞ்சிபுரம்.

பதில்: `சங்கின் வலம்புரியும், சேவடிக்
கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்
தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்
தந்தார்
செங்கண் கருமுகிலே! தாலேலோ
தேவகி சிங்கமே! தாலேலோ’

– என்பது பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் பாசுரம்.

வலம்புரிச் சங்கு பூஜை அறையில் வைப்பது சகல தோஷங்களையும் நீக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எந்த விதமான தீமைகளும் அணுகாது என்பார்கள். ஆனால், அதை ஒரு நல்ல பீடத்தில் வைக்க வேண்டும். தரையில் வைக்கக்கூடாது. வலம்புரிச் சங்கில் பாலோ தீர்த்தமோ எடுத்து சுவாமிக்கு அல்லது சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் ஆராதனைகளைச் செய்யலாம். வலம்

புரிச்சங்கு உருவில் குபேரன் இருந்து அருளுகிறார். பூஜையறையில், சிறிய தட்டில் அரிசியிட்டு, அதில் சங்கு வைத்து, அந்த சங்கை புஷ்பத்தால் அலங்கரித்து சந்தன குங்குமமிட்டு பூஜித்து வந்தால், இல்லத்தில் தானியப் பஞ்சமே இருக்காது.

? விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அனைவரும் சொல்லலாமா?
– ஹரிணி, மைசூர்.

பதில்: அனைவரும் சொல்ல வேண்டும். மஹாபாரதத்தில், தருமர் பீஷ்மரிடம் “கிமேகம் தெய்வதம், லோகே கிம் வாப்யேகம் பராயணம், கோ தர்ம ஸர்வ தர்மாநாம்?” என்று கேட்கிறார். அதாவது, “இந்த உலகில் அனைவருக்கும் ஒரே அடைக்கலம் யார்? உலகில் மிகப் பெரிய தெய்வம் யார்? யாரைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் ஒருவர் மங்களத்தை அடைய முடியும்? யாரை வணங்கினால் ஒருவன் ஐஸ்வர்யத்தை அடைய முடியும்? உங்கள் கருத்துப்படி, எல்லா தர்மங்களிலும் மிகப் பெரிய தர்மம் எது? யாருடைய பெயரை உச்சரிப்பதன் மூலம், ஒரு உயிரினம் சம்சார பந்தங்களுக்கு அப்பால் செல்ல முடியுமா?’’

எல்லா உலகங்களுக்கும் அதிபதியும், உன்னத ஒளியும், பிரபஞ்சத்தின் சாரமுமான விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பதன் மூலம் மனிதகுலம் எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபடும் என்று பீஷ்மர் பதிலளித்தார். இப்படிப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மிக மிக உயர்வானது. பகவானே அமர்ந்து கேட்டது. ஆண்கள், பெண்கள் என்று எந்தவிதமான பாலின வேறுபாடும் இல்லாமல் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லலாம். இன்றைக்கு பல இடத்தில் விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி என்று ஏற்படுத்தி, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறார்கள். ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பூஜை அறையிலோ, இல்லை ஒரு குழுவாக அமர்ந்து கோயில்களிலோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யலாம். அதனுடைய பலன் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள முடியும்.

?எதையெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாது?
– பி.சகுந்தலா, சென்னை.

பதில்: பொதுவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டும், சில விஷயங்களைச் சொல்லக்கூடாது என்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சொல்லக்கூடாத விஷயங்களை சொல்லி விடுகின்றோம். சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லாமல் தவிர்த்து விடுகின்றோம். அடுத்து யாரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்கின்ற வரைமுறையும் தெரிந்து கொள்வதில்லை. ஆனால் நம்முடைய சாஸ்திரங்கள் இந்த பிரச்சினைக்கும் வழிகாட்டுகின்றன.

உதாரணமாக ஒருவருடைய சொத்து, ஒருவருக்கு இருக்கும் கடன், அவருடைய வயது அவருக்கு உபதேசமான மந்திரம், பிறரிடம் பட்ட அவமானம் மற்றும் குடும்ப ரகசியங்கள், தான் கொடுத்த தானம் முதலிய விஷயங்களை மற்றவர்களிடம் தம்பட்டம் அடிக்கக் கூடாது.இப்பொழுது தொழில்நுட்பம் அதிகமாக வந்துவிட்டது. தினசரி செய்கின்ற வேலைகளைக் கூட (vlog) பதிவிட்டு விடுகிறோம். சமீபத்தில் அப்படி தன்னுடைய தனிமையான வீட்டைப் பற்றி ஒருவர் (youtube) பதிவிட்டு இருந்தார்.

அதை கவனித்தவர் அந்த வீடு தனிமையாக இருப்பதையும், வேறு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருப்பதையும் கவனித்தார். அந்த வீட்டின் ஆடம்பரத்தை பார்த்து, திருடச் சென்று அகப்பட்டுக் கொண்டார். இந்த செய்தி தினசரிகளில் வந்தது.அதைப்போலவே பெண்கள் தேவையில்லாமல் தங்கள் படங்களையும், குழந்தைகளின் படங்களையும் இணையதளத்தில், சம்பந்தமில்லாதவர்கள் பாராட்ட வேண்டும் (like) என்று நினைத்துப் போடுகிறார்கள். இது பல சமயங்களில் எப்படிப்பட்ட விபரீதங்களை எல்லாம் வரவழைக்கிறது என்பதைப் பற்றி அறிவதில்லை.

? தேங்காய் ஏன் உடைக்கிறோம்? அதில் ஏதேனும் நியமனங்கள் உண்டா?
– மாதவி, திருச்சி.

பதில்: நம்முடைய பூஜையில் தேங்காய் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. தேங்காய் ஒரு அற்புதமான பொருள். மனிதனின் மும்மலங்களாகிய ஆணவம், கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கிறது. இதை கோயிலில் உடைப்பதன் மூலம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் என்பதுதான் தேங்காய் உடைப்பதன் பின்னால் இருக்கும் முக்கிய தாத்பர்யம். ஆயினும் அதை உபயோகப்படுத்துவதில் சில நியமங்கள் உண்டு.

உதாரணமாக சதுர் தேங்காய் உடைப்பதாக இருந்தால் அதை ஆண்கள்தான் உடைக்க வேண்டும். பெண்கள் உடைக்க கூடாது. சில நேரங்களில் தேங்காய் தவறாக வாங்கி விடுவோம். தேங்காய் அழுகிவிட்டது என்றால் மனது சங்கடப்படும். இதை நேர்மறையாகவும் எடுத்துக் கொள்ளலாம். கண்திருஷ்டியும், நம்மைப் பிடித்த தீயசக்திகளும் அழுகிவிட்டது என்றும் கருதலாம். தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் என்பார்கள்.

சில குருக்கள் இருக்கிறார்கள் அவர்கள் கருவறையில் தேங்காய் உடைக்கும் போது மறைவாக உடைப்பார்கள். தேங்காய் சரியாக இல்லாவிட்டால், வந்தவர் மனம் சங்கடப் படும் என்று அவர்கள் வைத்திருக்கக் கூடிய நல்ல மூடியை வைத்து பிரார்த்தனை செய்து, தரும் உயர்ந்த உள்ளமும் அவர்களுக்கு உண்டு. பொதுவாக தேங்காய் உடைக்கும் பொழுது ஜாக்கிரதையாக உடைக்க வேண்டும். சமமாக உடைக்க வேண்டும். குடுமியை நீக்கிவிட்டுத்தான் நிவேதனமாக வைக்க வேண்டும்.

?தீர்க்காயுளோடும் திருப்தியாகவும் வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
– வி.சுபாஷ், சித்தூர்.

பதில்: ஏன் இல்லை? நாம் அந்த வழிகளை பின்பற்றுவது இல்லை. உதாரணமாக, நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்த சிலர், தாங்கள் எதைப் பின்பற்றி இப்படி வாழ்ந்தோம் என்பதைச் சொல்லி இருக்கின்றார்கள். அப்படிச் சொன்னவர்களில் ஒருவர்தான் மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா. அவர் மிகச்சிறந்த பொறியியல் அறிஞர். தானியங்கி மதகு என்கின்ற கண்டுபிடிப்பைச் செய்தவர். வெள்ளத் தடுப்பு முறைகளை விளக்கிச் சொல்லியவர். நீர் மின்சார தயாரிப்பு முறைகளை எடுத்துச் சொன்னவர். இன்றைக்கு திருப்பதியில் இருந்து திருமலை வரைக்கும் சாலை வசதி உண்டு என்று சொன்னால் அதற்கு விஸ்வேஸ்வரய்யாவின் சிந்தனையும் திட்டமும் கூட ஒரு காரணம்.

அவரை பற்றி வேடிக்கையாக ஒரு கதையைச் சொன்னார்கள். அவர் கடைசி காலம் வரை உழைத்துக் கொண்டே இருந்தாராம். அவரை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எமன் அவ்வப்பொழுது வந்து பார்ப்பாராம். அவர் தொடர்ந்து வேலை செய்திருப்பதைப் பார்த்துவிட்டு பிறகு வரலாம் என்று போய் விடுவாராம். உறுதியான உள்ளத்தோடு ஊருக்கு உழைப்பவர்களை, அவ்வளவு சீக்கிரம் கால தேவன் அழைப்பதில்லை என்று பொருள்.அவர் சில விஷயங்களை நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறார். அந்த விஷயங்கள்.

1. அளவோடு சாப்பிட வேண்டும்.

2. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. பக்குவமான மனதில் துன்பங்கள் வராது.

3. மனசாட்சிக்கு விரோதமான செயலை செய்யக்கூடாது.

4. நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். எந்தவிதமான வில்லங்கமான சிந்தனையும் இல்லாவிட்டால், நன்றாக தூக்கம் வரும். தூக்கம் என்பது ஒரு மனிதனை உற்சாகத்தோடும், செயல் வேகத்தோடும் வைத்திருக்க உதவுவது.

5. கடன் வாங்காமல் வருமானத்திலே வாழ்க்கையே வாழப் பழக வேண்டும்.

6. எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் ஒரு சிறு பகுதியாவது சேமிப்புக்கு வைக்கப்பட வேண்டும். சம்பாதிக்க முடியாத காலத்தில் இந்தச் சேமிப்பு உதவும்.

7. எப்பொழுதும் சோம் பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

8. ஒருவன் களைப்பு ஏற்படும் வரை உழைக்க வேண்டும். 7 மணி நேரம் 6 மணி நேரம் என்றெல்லாம் கணக்கு கிடையாது.

9. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும்.

இந்த விஷயங்கள் எளிதான விஷயங்கள். எல்லோரும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். இந்த விஷயங்களை பின்பற்றி வாழ்ந்தால் ஒருவன் தீர்க்க ஆயுளோடும் திருப்தியான மனதோடும் வாழ முடியும்.

? எது விஷம்?
– மோகனகிருஷ்ணன், கரூர்.

பதில்: எது அளவுக்கு மீறி இருக்கிறதோ அது விஷம் என்று தமது அர்த்த சாஸ்திரம் நூலில் சொல்லுகின்றார் சாணக்கியர். இதைத்தான் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்று தமிழில் பழமொழியாக சொல்லி வைத்தார்கள். எவ்வளவு உண்ண முடியுமோ அவ்வளவுதான் உண்ண முடியும். அப்பொழுது தான் ஆரோக்கியம் இருக்கும். நம்மிடம் இருக்கிறது என்று அளவுக்கு மீறி உண்டால் அது ஜீரணமாகாது. அது நம்முடைய உடலில் பல்வேறு வியாதிகளை உண்டு பண்ணும்.

அதைப்போலவே அதிகமான செல்வம் ஒருவருக்கு மகிழ்ச்சியையும் திருப்தியான வாழ்க் கையும் தரும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிகமான செல்வம் படைத்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பது அவர்களிடம் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். இதை ஆழ்வார் ‘‘செல்வமே பெரு நெருப்பாய்’’ என்று பாடினார்.

வீட்டில் சமையல் அறையில் அடுப்பில் நெருப்பு மூட்டி வைத்து பல்வேறு பண்டங்களைச் சமர்ப்பிக்கின்றோம் நெருப்பு அதிகமாகவும் போய் விடக்கூடாது. குறைந்தும் போய்விடக்கூடாது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் சமையலறையில் உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்ட, நெருப்பானது வீட்டையே எரித்து விடும் நம்முடைய உடம்பில் ஜடராக்கினி என்கிற நெருப்பு இருக்கிறது. அந்த நெருப்பு குறைந்துவிட்டால் உண்ணுகின்ற உணவு செரிக்காது. அந்த நெருப்பு அதிகமாகி விட்டால் அது குடலையே (அசிடிட்டி, பெப்டிக் அல்சர்) அழித்துவிடும். எனவே எதுவுமே அளவுக்கு மீறி விட்டால் அது நஞ்சு.

தொகுப்பு: தேஜஸ்வி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?