ஈரோடு: ஈரோடு அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து, நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது ஒட்டன்குட்டை கரியங்காட்டு தோட்டம். இங்கு வசிப்பவர் முத்துசாமி (85), விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80). இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் முத்துசாமியும், சாமியாத்தாளும் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். நள்ளிரவு முத்துசாமியின் வீட்டின் கதவை மர்மநபர்கள் சிலர் கம்பியால் நெம்பி, கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டினர். சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில், முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித் (23), தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி ஜெயபாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முத்துசாமி, சாமியாத்தாள் ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கொலை, கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். மேலும், ஈரோடு எஸ்பி ஜவகர் இன்று காலை கொலை நடந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். கொலையான முத்துசாமி, வீட்டில் பாதுகாப்பிற்காக செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதனால், முத்துசாமியின் வீட்டில் கொள்ளையடிக்க மர்மநபர்கள் திட்டம் திட்டி, ஒரு வாரத்திற்கு முன்பே முத்துசாமியின் வீட்டில் வளர்த்த நாய்க்கு விஷம் தடவிய பொருளை சாப்பிட கொடுத்து கொலை செய்துள்ளனர். இதன் பின்னரே மர்மநபர்கள் நேற்றிரவு முத்துசாமி வீட்டிற்குள் நுழைந்து முத்துசாமியையும், சாமியாத்தாளையும் கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். வீடுபுகுந்து வயதான தம்பதியினரை கொடூரமாக கொலை செய்து, கொள்ளை நடந்த சம்பவம் சென்னிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.