Tuesday, June 6, 2023
Home » கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் : கே.எஸ்.அழகிரி

கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் : கே.எஸ்.அழகிரி

by Porselvi

சென்னை :கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற பல்லாரி பொதுக்கூட்டத்தில் பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் கட்சி சரணடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். விரக்தியின் விளிம்பில் இருப்பதால் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் காங்கிரஸ் மீது அவர் சுமத்தியிருக்கிறார். இந்திய விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத பா.ஜ.க.வினர் காங்கிரஸ் தலைவர்களின் தியாகத்தை அறிந்துகொண்டு பேசுவது நல்லது. இந்தியா விடுதலை பெற்ற ஒருசில மாதங்களிலேயே ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத கருத்தினால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத சக்திகளினால் விடுதலையைப் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவில் பயங்கரவாதத்திற்குப் பலியான முதல் தலைவர் மகாத்மா காந்தி அவர்கள் தான்.

பயங்கரவாத சக்திகளிடம் காங்கிரஸ் சரணடைந்து விட்டதாக பிரதமர் மோடி எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் என்பது தெரியவில்லை. இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்திக் காவி பயங்கரவாதத்தின் மூலம் அப்பாவி மக்களைப் பலியாக்கியதில் பா.ஜ.க.விற்கு பெரும் பங்கு உண்டு என்பதை அவரால் மறுக்க முடியாது. நாட்டில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்கள் பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகளுக்கு பங்கு உண்டு. இதனால் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவது தான் பா.ஜ.க-வின் செயல்திட்டம்.1984 மக்களவை தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., தேர்தல் அரசியலில் வெற்றிபெற அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க அத்வானி தலைமையில் ரதயாத்திரை மேற்கொண்டது. அதனால் ஏற்பட்ட பயங்கரவாத கலவரத்தினால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். தலைநகர் டெல்லி, உத்திரபிரதேச மாநிலத்தில் அப்பாவி மக்களின் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் தகர்த்தவர்கள் பா.ஜ.க.வினர். உத்திரபிரதேசத்தில் விவசாயச் சங்கங்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது வாகனத்தை ஏற்றி ஏழு பேரை படுகொலை செய்தவர் மத்திய பா.ஜ.க. அமைச்சருடைய மகன் என்பதை மோடியால் மறுக்க முடியாது. குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது 2002 இல் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதைத் தடுக்கத் தவறிய காரணத்தினால் சிறப்புப் புலனாய்வு குழுவினர் 9 மணி நேரம் அன்றைய முதலமைச்சராக இருந்த மோடி விசாரிக்கப்பட்டார். குஜராத் கலவரத்திற்குக் காரணமாக இருந்த அன்றைய குஜராத் மாநில அமைச்சர் அமித்ஷா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதை எவராலும் மறக்க இயலாது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற பிரக்யா சிங் தாக்கூருக்கு போபால் தொகுதி மக்களவை உறுப்பினர் பதவி கொடுத்து பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்திய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவதை விடக் கேலிக்குரியது எதுவுமில்லை. புல்வாமா தாக்குதலில் 40 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை சாலை வழியாக அழைத்துச் செல்லாமல், விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ அழைத்துச் சென்றிருந்தால் ராணுவ வீரர்கள் பலியானதைத் தவிர்த்திருக்கலாம். அன்றைக்கு ராணுவ வீரர்களை அழைத்துச்செல்ல விமானங்களைத் தர மறுத்ததின் மூலம் 40 பேர் வீரமரணம் அடைந்ததற்குப் பிரதமர் மோடி தான் பொறுப்பாகும். 40 ராணுவ வீரர்களின் வீரமரணத்தை வைத்து 2009 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற பரப்புரையில் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிய பிரதமர் மோடிக்கு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. வின் வரலாறே நச்சுக் கருத்துகளை பரப்பி, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, பயங்கரவாதத்திற்குத் துணைபோவது என்பது கடந்தகால வரலாறு. எனவே, பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்கப்படுத்துகிற பிரதமர் மோடி காங்கிரஸின் மீது கூறுகிற குற்றச்சாட்டை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi