Sunday, June 16, 2024
Home » கால்வண்ணமும் கைவண்ணமும்

கால்வண்ணமும் கைவண்ணமும்

by Kalaivani Saravanan

அகல்யா என்றால் அழகில்லாத அவயங்கள் இல்லாதவள் என்று பொருள். அஹல்யா என்ற சொல்லே அகல்யா என வந்தது. அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா நூலாகும். இந்நூலை தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ளார். இந்நூலில் அகலிகையின் கதையானது வெண்பாப் பாடல்களால் பாடப் பெற்றுள்ளது.

இந்திய சமய மரபில் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாக அகல்யா போற்றப்படுகிறாள். இந்து தொன்மவியலில் பஞ்ச கன்னிகைகள் என்று இவர்கள் அழைக்கப்பெறுகின்றார்கள். மிகச் சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப் பெறுகிறார்கள். இந்த ஐந்து பேர் யார் யார் தெரியுமா?

அகலிகை கௌதம முனிவரின் மனைவி
துரோபதை பஞ்ச பாண்டவர்களின் மனைவி,
சீதை இராமபிரானின் மனைவி,
தாரை இராமாயணத்தில் வாலியின் மனைவி,
மண்டோதரி இலங்கேசுவரன் இராவணனின் மனைவி

இனி அகலிகை கதைக்கு வருவோம். பேரழகியான, அகலிகைக்குக் கணவனைத் தேட சுயம்வரம் வைத்தார் பிரம்ம தேவன். யார் உலகை முதலில் மும்முறை வலம் வருகிறார்களோ அவருக்கே அகல்யா என்று அறிவித்தார்…அவளை அடைவதற்காக இந்திரன் உலகைச் சுற்றி வரக் கிளம்புகிறான், ஆனால் கௌதம முனிவரோ அதற்கு முன்பே உலகை மும்முறை வலம் வந்துவிட்டதால் அவருக்கே அகல்யா மனைவியாகிறாள்!

இந்தக் கதைகள் எல்லாம் குறியீடுகள். இதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கௌதமர் எப்படி உலகைச் சுற்றினார் தெரியுமா? கன்றை ஈனும் பசுவைப் பார்ப்பதும், உலகைப் பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு சாஸ்திரக் கருத்து உண்டு. ஆதலால் காமதேனு கன்றை ஈனும் போது இரு தலைப் பசுவை ஒரு சேரக் கண்ட கௌதமர் மும்முறை காமதேனுவை வலம் வருகிறார். அதனால் உலகை மும்முறை வலம் வந்ததாக ஆகிவிடுகிறது.

இந்திரனோ உலகை மும்முறை சுற்றிவிட்டு தாமதமாக வந்து சேருகிறான். ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களைச் சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான். இதற்கு பின் அகல்யாவை அடைய தக்கத் தருணத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான் இந்திரன்.

சேவல் விடிகாலை கூவும்போது கௌதமர் நதியில் நீராடக் கிளம்புவார். அந்த சேவலாக ஒருமுறை வந்து விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி, விடிந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறான் இந்திரன். அவர் நீராடச் சென்ற பின், கௌதமர் உருவத்தில் குடிலுக்குள் நுழைகிறான்.

இதை அறிந்த கௌதமர் கடும் கோபம் கொண்டு இந்திரனையும் அகலிகையையும் சபிக்கிறார். அகலிகை கல்லாகிறாள். அகலிகை கல்லாகச் சமைந்திருந்த கௌதம மகரிஷியின் ஆச்ரமம் இருந்த இடம் இப்போது ‘‘அகல்யா இடம்’’ (Ahalya Sthan, அகல்யா ஸ்தான்) என அழைக்கப்படுகிறது. இது பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இராமர் கோவில் இருக்கிறது.

அகலிகை சாப விமோசனத்தை, ‘‘கல்லைப் பெண்ணாக்கி’’ என்று இரண்டு சொற்களால் பாசுரப்படி ராமாயணத்தில் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகின்றார். பாசுரப்படி ராமாயணத்தில் இருக்கும் அனைத்து வரிகளும் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களிலிருந்து தொகுக்கப்பட்டன. ஆனால் அகல்யா சாப விமோசனத்தை ஆழ்வார்கள் யாருமே பாடவில்லை.

ஆனால் மூல நூலான வால்மீகி இராமாயணத்திலும் தமிழ் நூலான கம்பராமாயணத்திலும் அகல்யா சாப விமோசனம் பால காண்டத்தில் வருகிறது. இந்த சம்பவத்தை விட மனமில்லாத பெரியவாச்சான் பிள்ளை, ஆழ்வார்கள் பாடி இருக்காவிட்டாலும், கல்லைப் பெண்ணாக்கி என்ற இரண்டே சொற்களில் இந்த சம்பவத்தைப் பதிவு செய்கின்றார். பன்னிரண்டு ஆழ்வார்கள் பாட விட்டாலும் கம்ப நட்டாழ்வார் பாடியிருக்கிறாரே. திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாசுரம்.

மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே-
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே!

இதில் மை வண்ணம்,எய் வண்ணம், கை வண்ணம், அவ்வண்ணம் என்று பல வண்ணங்களை வாரி இறைத்திருப்பார் திருமங்கை ஆழ்வார். இராமபிரானின் அவயவ அழகு குறித்த பாசுரம்தான் இது. இந்த வண்ணத்தை பயன்படுத்த எண்ணிய கம்பன், அகலிகை சாப விமோசன படலத்தில், விசுவாமித்திர மகரிஷியின் கூற்றாக வைக்கிறார். தாடகை வதம் முடிந்து முனிவரோடு புறப்பட்டு மிதிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் ராமனும் லட்சுமணனும். அப்பொழுது ராமனுடைய திருப்பாதங்களில் இருந்து ஒரு துகள் பட்டு அங்கிருந்த கல் பெண்ணாகிறது. அவள் தான் அகலிகை.

அகலிகையினுடைய கதையை ராமபிரானுக்கு எடுத்துரைக்கின்றார் விசுவாமித்திரர். அது மட்டும் அல்ல அவளுடைய கணவனான கௌதம முனிவரை அழைத்து, ‘‘உன்னுடைய மனைவி, நெஞ்சு அறிந்து பிழை செய்யவில்லை. அவளை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லுகின்றார்.

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்

அதற்குப் பிறகு, ‘‘ராமா! உன்னுடைய திருக்கரங்களின் வலிமையை நான் தாடகை வதத்தில் கண்டேன். ஆனால் உன் திருவடிகளில் அருட்கருணையை நான் இங்கு காண்கின்றேன்’’ என்று வியந்து சொல்லுகின்றார்.

இந்த விசுவாமித்திரரின் கூற்றை எடுத்துரைக்கும்போது திருமங்கையாழ்வார் பாசுரம் கம்பனுக்கு நினைவில் வர, திருமங்கை யாழ்வார் உபயோகப்படுத்திய வண்ணங்களை எல்லாம் இந்த இடத்திலே பயன்படுத்தி மிக அற்புதமான பாடலைத் தருகின்றார்.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

பகவானின் கரங்கள் சமயத்தில் கை விட்டாலும், திருவடிகள் கைவிடாது.

ராமனை விசுவாமித்திர மகரிஷி மிதிலைக்கு அழைத்துச் செல்வது சீதையை மணம் முடிக்க என்பது நமக்குத் தெரியும் மிதிலைச் செல்வியான சீதை ஜனகரின் மகள். ஜனகரின் குலகுரு சதானந்தர். அந்த சதானந்தர் அகலிகையின் திருக்குமாரர் என்றொரு செய்தி உண்டு. இப்பொழுது அகலிகையின் சாப விமோசனத்திற்கும் மிதிலை சென்று சீதையை மணம் முடிப்பதற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது அல்லவா! எல்லாவற்றையும் விட நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி இது. பகவானின் திருவடிகளின் கருணை அளப்பரியது. எனவே நாம் நம் கஷ்டங்கள் தீரவும், காரியம் ஆகவும் அவனுடைய திருவடிகளில் விழவேண்டும்.

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi