ஊத்துக்கோட்டை: கச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய சிறுவர் பூங்கா பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் காணப்படுகிறது. அவற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் உள்ள கச்சூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு டாக்டர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கலவை, ஸ்ரீராமகுப்பம், சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், ராசாபாளையம், பென்னலூர் பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பெரும்பாலும் பிரசவத்திற்காக அதிக அளவில் பெண்கள் வருகின்றனர்.
குழந்தை பெறும் பெண்களுக்கு என அங்குள்ள புதிய கட்டிடத்தில் தனி இடம் ஒதுக்கி அதில் 3 நாட்கள் சிகிச்சை பெறுவார்கள். அவ்வாறு ஒதுக்கப்படும் தனி கட்டிடத்தின் பின்புறம் சிறுவர்கள் விளையாட கடந்த 2 வருடத்திற்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் பூங்கா போதிய பராமறிப்பு இல்லாதால் புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு, தேள், பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பிரசவ வார்டுக்கு வருகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடனேயே சிகிச்சை பெறுகின்றனர். எனவே சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்காவை சுற்றியுள்ள செடிகொடிளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் கூறியதாவது: கச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. ஆனால் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது. புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்தி விட்டு மது பாட்டில், வாட்டர் பாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். மேலும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்காவிற்கும் இதே நிலைதான். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றிவிட்டு, மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினர்.