Saturday, May 11, 2024
Home » திருத்தலங்கள் தோறும் தெய்வத் திருமணங்கள்!

திருத்தலங்கள் தோறும் தெய்வத் திருமணங்கள்!

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மீகம்

முத்துக்கள் முப்பது

  1. முன்னுரை

‘‘பங்குனி போய் சித்திரை வந்தால், பத்திரிக்கை வந்துவிடும், கல்யாண பத்திரிக்கை வந்துவிடும்’’ என்றொரு திரைப்படப் பாடல் அந்தக் காலத்தில் உண்டு. இந்தப் பாடல் எதை மனதில் வைத்துக் கொண்டு எழுதினார்களோ தெரியவில்லை. ஆனால் சித்திரை வந்துவிட்டால் பல கோயில்களில் தெய்வத் திருமணங்களுக்கான பத்திரிக்கை நம் கைக்கு வந்துவிடும்.

இப்பொழுது சித்திரை துவங்கி விட்டது. இந்த மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் தெய்வத் திருமண உற்சவங்கள் நடைபெற இருக்கின்றன. இந்த தெய்வத்திருமணங்களின் பின்னணி என்ன? எதற்காக கல்யாண உற்சவங்கள் ஆலயங்களில் நடத்தப்படுகின்றன? எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் இந்த விசேஷம் சித்திரை மாதத்தில் நடக்கும்? மற்ற மாதங்களில் எந்தெந்த ஆலயங்களில் நடக்கும்? என்கின்ற பல்வேறு செய்திகளை இங்கு நாம் ஆராயலாம்.

  1. மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்

மணம் என்ற சொல்லுக்கு கூடுதல் என்று ஒரு பொருள் உண்டு. இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். பொதுநிலையில் இது நறுமணத்தைக் குறிக்கிறது. மண்ணுதல் என்ற சொல்லுக்கு நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல் எனப் பல பொருள்கள் உண்டு. சிறப்பான ஒரு விஷயத்திற்கு ‘‘திரு’’ என்கிற அடைமொழி கொடுத்து திருமணம் என்று சொல்லுகின்றோம். ஆணும் பெண்ணும் மகிழ்வதற்காகவும், கலப்பதற்காகவும், இணைந்து இல்லறம் அழகு பெறுவதற்காகவும் செய்யும் சடங்கு திருமணம்.

இந்தத் திருமணத்தை ஆலயங்களில், தெய்வங்களுக்கும் செய்து பார்த்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தெய்வத் திருமணங்கள் நடைபெறுவதற்கான எத்தனையோ காரணங்களில் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்.

  1. மணி விழா,சதாபிஷேக விழா

ஆலயங்களில் தெய்வங்களுக்கு திருமணம் செய்து பார்ப்பதில் பக்தர்கள் ஏன் மகிழ்கிறார்கள் என்ற ஒரு கேள்வி கேட்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் மணிவிழா, சதாபிஷேகம் என்று சொல்லப்படும் விழா என்று சில விழாக்களை நடத்துகின்றோம். நாம் பிறப்பதற்கு காரணமான பெற்றோர்களின் திருமணத்தை, மறு படியும் நாம் காணுவதற்கு சாஸ்திரங்கள் கொடுத்த வாய்ப்பு இது, இத்தகைய திருமணத்தை குழந்தைகள் தான் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களுக்கு ஏன் மறுபடியும் கல்யாணம் செய்து பார்க்கிறீர்கள் என்று எந்தப் பெற்றோரும் குழந்தைகளிடம் கேட்பதில்லை. மாறாக நமக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கிறார்களே என்று மகிழ்ந்து ஆசி வழங்குகிறார்கள். அந்த நல்ல ஆசியைப் பெறுவதற்காகத்தான் பெற்றோர்களுக்கு மணி விழா, சதாபிஷேக விழா, நூற்றாண்டு விழா முதலிய விழாக்களை நாம் சாஸ்திர பூர்வமாக நடத்துகின்றோம்.

  1. சேர்த்தி உற்சவம்

நம்மை இந்தப் பிறவியில் பெற்ற பெற்றோர்களுக்கு, நாம் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து, திருமண வைபவத்தை நடத்தி, அழகு பார்த்து ஆசிபெறுவது போலவே, நம் எல்லோரையும் படைத்த, எல்லோருக்கும் பெற்றோர்களான, (சர்வ லோக மாதா; சபிதா) தெய்வங்களையும் மாதா பிதாவாகப் பாவித்து, அவர்களுக்கு திருக்கல்யாண உற்சவங்களை நடத்திப் பார்த்து, தெய்வங் களின் பேரருளைப் பெறுகிறோம். அப்படி பெறுவதற்காகவே ஆகம விதிகளில் திருக்கல்யாணம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மணம் என்ற சொல்லுக்கு சேர்தல் என்ற பொருள் உண்டு என்று பார்த்தோம். வைணவத்தில் திருக்கல்யாண உற்சவத்தை சேர்த்தி உற்சவம் என்று சொல்வார்கள். திருவாகிய மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் சேர்தலை திருமண உற்சவம் என்று சொல்வார்கள்.

  1. எப்பொழுது திருக்கல்யாண உற்சவங்கள்?

திருக்கல்யாண உற்சவங்கள் திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும், நடைபெறும். இத்திருமண உற்சவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெறுவது உண்டு. ஆகம விதிகளின் படி பெரும் பாலும் குடமுழுக்கு நடக்கின்ற தினம் மாலை திருக்கல்யாண உற்சவமும், திருவீதி வலமும் கட்டாயம் இருக்கும். இது தவிர, தலபுராண வரலாற்றின் அடிப்படையில் சில ஆலயங்களில், பிரம்மோற்சவங்களின் ஒரு அங்கமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும், இன்னும் சில ஆலயங்களில் பக்தர்களின் கோரிக்கைகளுக்காக அவர்கள் விரும்பும் நாள்களில் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைப்பார்கள்.

  1. உலகமெங்கும் நடைபெறும் ஸ்ரீநிவாசா திருக்கல்யாணம்

சில ஆலயங்களில் அபூர்வமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சில ஆலயங்களில் அவ்வப்பொழுது நடைபெறும். ஒரு சில ஆலயங்களில் தினம் தோறும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறும். அப்படி நடைபெறும் ஆலயங்கள் திருமலை, திருச்சானூர், ஸ்ரீகாலஹஸ்தி. திருமலை பிரம் மோற்சவத்தை இன்றைக்கும் நாம் தினந்தோறும் காலை 12 மணிக்கு தரிசிக்கலாம். பிரமோற்சவம் முதலிய ஒரு சில கால கட்டங்களில் மட்டும் இந்தத் திருக் கல்யாணம் நடக்காது. திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்நதியில் தினம்தோறும் திருக்கல்யாண உற்சவம் உண்டு. இது தவிர ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை உலகம் எங்கும் வெவ்வேறு ஊர்களிலும் வேண்டுகோளின் பேரில் நடத்துகின்றார்கள்.

  1. தாயாருக்கு முதன்மை

பொதுவாக இந்திய சமய மரபு, பெண்களுக்கும், தாயாருக்கும், கணவன்-மனைவியாக இருந்தால் மனைவிக்கும், சிறப்பும் முதன்மையும் கொடுக்கும் என்பதற்கு இந்த தெய்வத் திருமணங்கள் எந்த பேரால் அழைக்கப்படுகின்றன என்பதே ஒரு சாட்சி யாகும். பெரும்பாலும் அம்பாள் அல்லது தாயாரின் பெயரை ஒட்டித்தான் தெய்வத் திருமணங்கள் சொல்லப்படுகின்றன. 1.சீதா கல்யாணம் 2.ருக்மிணி கல்யாணம் 3.மீனாட்சி கல்யாணம் 4.வள்ளி திருமணம் 5.ஆண்டாள் திருக்கல்யாணம் 6.பத்மாவதி திருக்கல்யாணம் 7.ராதா கல்யாணம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.வாழ்வியலில் நம் வீட்டில் நடக்கும் திருமண வைபவத்தில் கூட, மணமகனை மகாவிஷ்ணுவாகவும், மணப் பெண்ணை திருமகளாகவும் கருதிச் சடங்குகளை நடத்துவது உண்டு.

  1. சடங்குகளின் வரிசை

தெய்வத் திருமணங்கள் பெரும்பாலும் நாம் நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமண வைபவம் போலவே பல்வேறு சடங்குகளுடன் நடைபெறுவதைக் காணலாம். குறிப்பாக கீழ்க்காணும் சடங்குகள் தெய்வத்திருமணங்களிலும் உண்டு. 1. முளைப்பாலிகை 2. ரக்ஷா பந்தன் எனும் காப்பு கட்டுதல் 3. மாலை மாற்றுதல் 4. கோத்திரப் பிரவரம் 5. ஹோமங்கள் 6. கன்னியாதானம் 7. திருமாங்கல்ய தாரணம் 8. லாஜ ஹோமம் 9. சப்தபதி 10. திருவீதி வலம் எனும் இந்தச் சடங்குகளின் வரிசைகள் கிட்டத்தட்ட தெய்வத் திருமணங்களிலும் பின்பற்றப்படுகிறது. திருமாங்கல்ய தாரணத்தின் போது சொல்லப்படும் அந்த ஸ்லோகமும் ஒரே ஒரு சொல்லை மாற்றி தெய்வத் திருமணங்களின் போதும் ஓதப்படும்.

9 ஒரு சொல் மாற்றம்
மாங்கல்ய தாரணத்தின் பொழுது

“மாங்கல்யம் தந்துனானே” என்ற
ஸ்லோகத்தைச் சொல்லுகின்றோம்
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா,
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்…’
இதன் பொருள் இதுதான்.
மம ஜீவன ஹேதுனா

  • என்னுடைய வாழ்க்கையில் இன்றியமை யாதவளாகி இருப்பவளே, மாங்கல்யம் தந்துனானே- இந்த மங்கல நாணை, கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்) சுபாகே- மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே த்வம் சஞ்சீவ சரத சதம்”- நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

இதில் மம ஜீவன ஹேது என்கிற வார்த்தையை மாற்றி சுவாமிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்யும் பொழுது லோக ஜீவன ஹேதுனா என்று சொல்லுவார்கள். என்னுடைய வாழ்க்கைக்கு என்று சொல்லாமல், உலகத்தார் நன்றாக இருப்பதற்கு இந்த மாங்கல்ய தாரணம் நடக்கிறது என்பது பொருள். திருக்கல்யாணம் நடைபெற்றால் அந்த தெய்வ தம்பதிகளின் பேரருள் எல்லோ ருக்கும் கிடைத்து, எல்லோரும் நன்றாக வாழ்வார்கள் என்பதற்காகத்தானே, ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்களை நடத்துகின்றோம்.

  1. ஆண்டாள் சம்பாவனை

சிவாலயங்களில் நடக்கும் திருமணங் களிலும், திருமால் ஆலயங்களில் நடக்கும் திருமணங்களிலும் ஒரு வேறுபாடு உண்டு. திருமால் ஆலயங்களில் திருக்கல்யாண வைபவம் முடிந்ததும், ஆண்டாள் தமிழில் பாடிய நாச்சியார் திருமொழி பதிகமான வாரணமாயிரம் என்று தொடங்கும் திருமொழியை சேவிப்பார்கள். தாயார் சார்பில் ஒரு பட்டாச்சாரியாரும், பெருமாள் சார்பில் ஒரு பட்டாச்சாரியாரும் எதிரெதிரில் அமர்ந்து கொண்டு, ஆளுக்கு இரண்டு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்துக்கொண்டு, சுவாமியின் திருக்கரங்களில் கொடுத்து வாங்கி, வாரணமாயிரம் பாசுரங்களை ராகத்தோடு சேவித்து தேங்காய் உருட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதே வைபவம் வைணவ இல்லங்களிலும் நடைபெறும்.

11 திருமணத் தடை நீங்க

இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும், இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும் மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும், நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும், ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌பெருமாள் வந்த நிலை பற்றியும், ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும், ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும், எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும், ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும், பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும், பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது. பத்தாம் பாசுரம் முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், சந்பாவனை (பணம்) வைத்து ஆண்டாள் நாச்சியார் சம்பாவனை என்று வழங்கப்படும். அந்த பதிகத்தின் முதல் பாட்டு இது.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

இதை விளக்கு வைத்து பக்தியுடன் ஒரு மண்டலம் பாராயணம் செய்பவர்களுக்கு திருமண தடை நீங்கும்.

  1. அகத்தியருக்கு மணக்கோல காட்சி

சிவசக்தி சொரூபம் என்பது பார்வதி பரமேஸ்வரனைக் குறிக்கும். ஆற்றல் + ஆற்றல் தரும் இடம், சிந்தனை+ செயல் என்று படைப்பாற்றலுக்கு மிக முக்கியமான இந்த இணைப்பு தெய்வத்திருமணங்களின் அடிப்படை இந்தத் தத்துவ குறியீடாகத்தான் எல்லா தெய்வங்களுக்கும் திருமண வைபவம் நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் பார்வதிக்கும் பரமேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறுவது பங்குனி உத்திரத்தில்.

திருமணத்தின் மிக முக்கியமான சடங்கான கன்னிகாதானம் நடைபெறும் வைபவத்தை விளக்குவது தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மணக்கோலம். இந்தக் கன்னிகாதான மணக்கோலத்தை ஒரு முறை பார்த்தாலே திருமணத் தடைகள் தூள் தூளாகி ஒவ்வொருவருக்கும் நல்ல இல்லற வாழ்க்கை அமையும். வடக்கே கயிலையில் பார்வதி பரமேஸ்வரர் திருமணம் நடந்தது. அந்த திருமண கோலத்தினை தரிசிக்க ஆசைப்பட்ட அகத்திய மாமுனிவருக்கு சித்திரை மாதம் ஒன்றாம் தேதி திருநெல்வேலி பாபநாசத்தில் மணமக்களாகக் காட்சி தருகிறார் சிவபெருமான்.

  1. சிவபெருமானின் திருமணக் கோலம்

பொதுவாகவே சிவாலயங்களில் மூலவர் லிங்கத் திருமேனியாக இருப்பார். அம்பாள் பெரும்பாலும் தனிச் சந்நதியில் திருவுருவத்தோடு காட்சி தருவார். ஆனால் திருக்கல்யாண வைபவத்திற்கு உற்சவ திருமேனிகள் வேண்டும் அல்லவா! அதற்காக அம்பாளுக்கும் ஈஸ்வரனுக்கும் தனித்தனியாக பஞ்சலோக உற்சவ திருமேனிகள் ஆலயங்களில் செய்து வைத்திருப்பார்கள். இத்திருமேனிகளுக்கு தான் திருக்கல்யாணமும் உற்சவ காலங்களில் வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலாக்களும் நடைபெறும்.

திருமண கோலத்திற்கான இத்தகைய உற்சவ திருமேனிகளில் சிவபெருமான் நான்கு திருக்கரங்களுடன் இருப்பார். சாரங்கபாணி அல்லவா. மான் மழு ஏந்தி இருப்பார். கீழ் வலது உள்ளங்கை மேல்நோக்கி இருக்கும். அம்பிகையின் இடது கரத்தில் ஆச்சரிய முத்திரை அல்லது மலர் ஏந்தி இருப்பாள். பெரும்பாலும் இறைவனின் இடது கரத்தில் அபயமுத்திரை அல்லது வரத முத்திரை அமைந்திருக்கும்.

  1. கல்யாண திருத்தலங்கள்

அனேகமாக தலபுராணத்தை ஒட்டி பார்வதி பரமேஸ்வரர் திருமண கோலங்கள் வெவ்வேறு வகைகளில் நாம் பார்க்க முடியும். பார்வதி தேவி சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காகவே தவம் இருந்த பல திருத்தலங்கள் உண்டு. அப்படிப்பட்ட திருத்தலங்களிலும் புராண நிகழ்வுகளை ஒட்டி அந்தந்த மாதங்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பல திருத்தலங் களில் சிவபெருமான் பார்வதி தேவியை கரம்பிடிக்கும் அமைப்பில் காட்சி தருவார். சில சிவத்தலங்கள் திருமண தடையை நீக்கும் கல்யாண தலங்களாக கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட தலங்களில் சில காளஹஸ்தி, மதுரை, குத்தாலம், திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி இத்தகைய தலங்களை தரிசிப்பது புண்ணியம். சிவபார்வதி திருமணத்தோடு தொடர்புடைய தலங்களில் சிவபெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளியுள்ளார்.

  1. வள்ளி திருமணம் உணர்த்தும் தத்துவம்

பழங்காலம் தொட்டு தமிழகத்தில் முருகப்பெருமான் வழிபாட்டு முறை இருந்தது.
மக்கள் முருகனை தங்கள் தெய்வமாக வழிபட்டனர்.
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்று தொல்காப்பியம் கூறும். முருகன் என்றாலே அழகு, இனிமை, இளமை, தெய்வத்தன்மை, மணம் மகிழ்ச்சி என்ற ஆறு தன்மைகளையும் தன்னுள் கொண்டவன் என்று பொருள். குறிஞ்சி கிழான் என்று கூறுவார்கள். ஞான பண்டிதனான முருகன், வள்ளி தெய்வானையை மணந்து கொண்டான். பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரத்தின் போது, முருகன் வள்ளி தெய்வானை திருமணம் நடைபெறும். முருகன் ஞான சொரூபம். வள்ளி இச்சா சக்தி (அதாவது விருப்பம் ஆசை.) தெய்வானை கிரியாசக்தி. (செயல்) வள்ளியாகிய ஜீவன் பேரின்பமாகிய முருகப் பெருமானுடன் கலப்பதை வள்ளித் திருமணம் உணர்த்துகிறது.

  1. மூன்று போர்களும் முருகனும்

குறவர் இனத்தில் பிறந்த வள்ளியை மணம் புரிந்து கொண்ட முருகன் தெய்வப் பெண்ணாகிய தெய்வானையை மணந்து கொண்டான். அப்படி திருமணம் செய்து கொண்ட தலம் திருப்பரங்குன்றம். முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்துக்குத் தனி சிறப்பு உண்டு. அறுபடை வீடுகளில் முதல் படைவீடு. திருப்பரங்குன்றம். திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் பூஜை செய்த தலம்.

முருகன் அசுரர்களை எதிர்த்து பல்வேறு இடங்களில் போர் புரிந்தார், திருச்செந்தூரில் கடல் போர். திருப்பரங்குன்றத்தில் நிலப்போர். திருப்போரூரில் ஆகாயப் போர். இந்த மூன்று போர்களையும் மும்மலங்கள் என்று சொல்வார்கள். மாயை என்பது திருச்செந்தூர். கன்மம் என்பது திருப்பரங்குன்றம். ஆணவம் என்பது திருப்போரூர். போர் முடிந்து தேவர்கள் மகிழ திருமணக் கோலத்தோடு அமர்ந்த இடம் திருப்பரங்குன்றம்.

  1. திருப்பரங்குன்றத்தில் திருமண உற்சவம்

இந்தத் தலத்தில் முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற இடங்களில் நின்று கொண்டு காட்சி தரும் முருகப்பெருமான், இந்தத் தலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இங்கு மட்டும் மூன்று முறை சூரசம்காரப் பெருவிழா நடைபெறும். ஐப்பசி மாத கந்த சஷ்டி, தை மாத தெப்ப விழா, பங்குனி உத்திர விழா என மூன்று விழாக்களிலும் சூரசம்காரம் நடைபெறும்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இங்கு விசேஷமாக பங்குனி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அந்த உற்சவத்துக்கு மதுரை சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மையும் எழுந்தருளுவது இன்னும் சிறப்பு. இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருமண வைபவத்தை ஒட்டித்தான் நாட்டின் எல்லா முருகன் ஆலயங்களிலும் பங்குனி உத்திரத் திருக்கல்யாணமும் திருவீதி உலாவும் நடைபெறும்.

  1. மங்கல நாணை மாற்றும் வைபவம்

கொடி ஏற்றத்துடன் தொடங்கும் பங்குனி உத்திரப் பெருவிழாவின் மிக முக்கிய வைபவமாக முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். விழாவின் நிறைவாக முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். இதற்காக ஸ்ரீசுப்ரமணிய சுவாமியும் தெய்வானையும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்கள். முருகப் பெருமான் பசுமலை வழியாக மூலக்கரை வரை சென்று அங்கே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு செல்வார்.

இதே வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பிரியாவிடை உடன் சுந்தரேஸ்வரரும் தனித்தனியாக பல்லக்கில் புறப்பட்டு தங்கள் திருக்குமாரனின் திருக்கல்யாணம் உற்சவத்தைக் காணத் திருப்பரங்குன்றம் வருவார்கள். இருவர் சந்திப்பும் சந்திப்பு மண்டபத்தில் நிகழும். ஒரே நேரத்தில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். அதற்குப் பிறகு பெற்றோர்களாகிய சிவபெருமான் மீனாட்சியம்மன் முன்னிலையில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண வைபோகம் முடிந்ததும் சுமங்கலி பெண்கள் புதிய மங்கல நாணை மாற்றிக் கொள்வார்கள். சோலை மலையிலிருந்து (பழமுதிர்சோலை)
சீர்வரிசைகள் கொண்டு வரப்படும்.

  1. பூவராகரும், லட்சுமி வராகரும்

திருமால் ஆலயங்களில் பல தலங்கள், திருமணத் திருத்தலங்களாகவே அமைந்திருக்கின்றன. வைணவ சமய மரபில் பிறப்பில்லா பெருமானுக்கு பல அவதாரங்கள் உண்டு. அஜாயமாநோ பஹுதா விஜாயதே என்பது வேதம். பகவத் கீதையில் தன் பிறப்பிற்கான காரணத்தை பகவானே கூறுகின்றான். ‘‘அர்ஜுனா, நீ பிறப்பதற்கும் நான் அவதாரம் எடுப்பதற்கும் வேறுபாடு உண்டு. நீ உன்னுடைய கர்மத்தைத் தீர்ப்பதற்காக (வினைப்பயனாக)பிறக்கின்றாய்.

நான் உங்களை மீட்டெடுப்பதற்காக கருணையினால் அவதாரம் செய்கின்றேன்’’ என்கின்றான். அந்த அவதாரங்களில் அவன் பல்வேறு வடிவங்களில் தோன்றுகின்றான் ஒவ்வொரு அவதாரத்திலும் தாயாரும் அந்த அவதாரத்திற்கு ஏற்ற வடிவில் தோன்றுகின்றார். பகவான் வராகப் பெருமானாக அவதாரம் எடுத்த பொழுது, தாயார் வெவ்வேறு பெயர்களில் பூமா தேவியின் அம்சமாக தோன்றுகிறார். அதனால் அவருக்கு பூ +வராகர்= பூவராகர் என்றே பெயர். அதில் சிறப்பு பெற்ற தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம்.

  1. நித்ய கல்யாண பெருமாள்

வராகப் பெருமாளுக்கும் மகாலட்சுமி தயாரிக்கும் திருமண உற்சவங்கள் நடைபெறுவது உண்டு. தல புராணச் செய்திகள் சற்று மாறுபடும். திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்தார். பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அத்தலம் ‘வராகபுரி’ என்றானது. காலவமுனிவர் என்பவருக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார்.

360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர். வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பு கொண்டு திகழ்ந்தனர். முனிவர் தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராக மூர்த்தியிடம் வேண்டினார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்றார். தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி’ எனும் ஒரே பெண்ணாக்கினார். அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டார். இன்றும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளுகிறார்.

  1. திருமணத் தடை நீக்கும் தலம் திருவிடந்தை

இத்தலம் சென்னைக்கருகே கிழக்கு கடற்கரை சாலையில் மஹாபலிபுரம் அருகே உள்ளது. இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திரு இட வெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய கருப்பு புள்ளி உள்ளது. இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும். ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், தனது மனைவியுடன் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தித்தலமாகவும் விளங்குகிறது.

  1. லட்சுமி நரசிம்மர்

திருமணம் என்றால் சேர்தல் என்று பொருள். திருவோடு சேர்ந்து மணம் பெறுதல் திருமணம். வராக அவதாரம் போலவே நிருஸிம்ஹப் பெருமாளாக அவதாரம் எடுத்த பொழுது, தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அச்சம் நீங்கவும், அவர்களுக்கு பேரருள் கிடைக்கவும் பகவான் மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து, தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமானாகக் காட்சி தருகிறார்.

ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் காட்சி தரும் திருத்தலங்கள் பற்பல உண்டு. பங்குனி உத்திரத்தின் போது திருவாலியில் உள்ள லட்சுமி நரசிம்மப் பெருமாள் சந்நதியில், கல்யாணரங்கநாதராகப் பெருமாள் மகாலட்சுமியை திருக்கல்யாணம் செய்து கொள்ளுகின்றார். பங்குனி உத்திர நன்னாள் பகல் வேளையில் சீர்காழிக்கு அருகே திருவாலியில் இத் திருமண வைபவம் நடைபெறும். இரவு, இந்த திருமண தம்பதிகளை, திருமங்கை ஆழ்வார் கொள்ளையடித்து, அவர்களிடம் திருமந்திர உபதேசம் பெறும் திருவேடுபரி உற்சவம் நடைபெறும். அந்த உற்சவம் இந்த ஆண்டு 4.4.2023 அன்று நடைபெற இருக்கிறது.

  1. சீதா கல்யாண வைபோகமே

திரேதாயுகத்தில் ஸ்ரீராம அவதாரத்தில் நடைபெறும் திருமணம் சீதா கல்யாணம். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட விழாவிற்காக, திருக்கல்யாணம் வைபவங்கள் நடைபெறுவது உண்டு. ஆனால் ஸ்ரீராம நவமி உற்சவத்தின் ஒரு அங்கமாக, உலகெங்கிலும், ஒரே நாளில் நடைபெறும் திருமணம் சீதா கல்யாண வைபவம். இத்திருமண வைபவத்தை இராமாயணத்தில் வால்மீகி முனிவரும், துளசிதாசரும், தமிழில் கம்பனும், அருணாச்சல கவிராயர் போன்ற கவிகளும், தியாகராஜ சுவாமிகள் போன்ற இசைவாணர்களும் எழுதி
வைத்திருக்கின்றனர்.

  1. பாணிக்கிரகணம்

திருமணச் சடங்குகளில் முக்கியமான ஒன்று கைப்பிடித்தலாகும். மண மகளின் கையை மந்திரங்கள் முழங்க மணமகன் பற்றிக் கொள்வதே ‘‘பாணிக்கிரகணம்’’ எனப்படும் கைப்பிடித்தல் ஆகும். (பாணி-உள்ளங்கை, கிரகணம்-பிடித்துக் கொள்ளுதல்).

மத்தளம் கொட்ட, சங்குகள் முழங்க, முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ், என் தலைவன், அழகன், மதுசூதனன் வந்து என்னைக்கைத் தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் என்று ஆண்டாளும் விவரிக்கிறாள்.இப்போதும் பாணிக்கிரகணம் செய்யும்போது “இயம் சீதா மம சுதா ஸஹ தர்மசரீதவ! ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண் ஹீஷ்வ பாணிநா”- (பால காண்டம், வால்மீகி ராமாயணம்) என்ற ஸ்லோகத்தைச்சொல்வார்கள். “இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல்போல தொடர்ந்து வரட்டும்” என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது பிற்காலத்தில், மகளைக் கொடுக்கும் எல்லா தந்தையரும் சொல்லும் சொற்களாக, வாக்கியமாக மாறிவிட்டது.

  1. சீதா கல்யாண வைபோகமே

அது மட்டும் இல்லை. இன்றைக்கும் நம்முடைய இல்லங்களில் நடைபெறும் திருமண வைபவத்தில் மணமக்களுக்கு நலங்கு சடங்கு வைக்கும் பொழுது சீதா கல்யாண வைபோகமே என்ற பாடலை தான் பாடுவார்கள்.

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர
சீதா கல்யாண வைபோகமே!
குறிஞ்சி ராகத்தில் பாடப்படும் இந்த இனிமையான பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று சொல்லலாம் இந்தப் பாடலின் அர்த்த பாவத்தை உணர்கின்ற பொழுது, ஸ்ரீராமருக்கும் சீதைக்கும் உள்ள கல்யாண குணங்கள் தெரியவரும். இப்பாடலை கேட்பதே மகா புண்ணியம்.

  1. ருக்மணி கல்யாணம்

கிருஷ்ணாவதாரத்தில் நடைபெறும் திருமணங்களில் ருக்மணி திருமணமும் ஒன்று. திருமண வகைகள் பல உண்டு. அதில் ஒரு வகையான திருமணம் இது. பெண்ணின் காதலை ஏற்று, அவள் விரும்பாத திருமணத்திலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றும் முறையாக ஸ்ரீமத் பாகவதத்தில் ருக்மணி திருமண வைபவம் சொல்லப்பட்டிருக்கிறது. பகவான் கண்ணனுக்கு தன்னைக் காப்பாற்றச் சொல்லி ருக்மணி பிராட்டி எழுதிய கடிதம் அற்புதமானது. ஒரு பக்தை பகவானிடம் தன்னுடைய ஆழ்மன காதலை சொல்லுகின்ற அந்த கடிதம் நம்முடைய மனதை உருக்கும்.

“நாளை எனக்கும் சிசுபாலனுக்கும் திருமணம் என்று நிச்சயித்திருக்கிறார்கள் நீங்கள் உடனே வந்து போர் செய்து சிசுபாலனிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள். காப்பாற்றி என்னை கடத்திச் சென்றாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் நாளை நகரத்துக்கு வெளியே உள்ள குலதெய்வ கோயிலுக்கு கௌரி பூஜை செய்ய நான் வருவேன். பூஜை முடிந்து திரும்பும் போது என்னை நீங்கள் அபகரித்துச் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும்”. இப்படி நடந்த சுவையான திருமணம்தான் ருக்மணி திருமணம்.

  1. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு எழுதிய காதல் கடிதம்

காதல் கடிதங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஜீவாத்மா பரமாத் மாவுக்கு எழுதிய காதல் கடிதம் தான் ருக்மணியின் காதல் கடிதம். இளமையிலிருந்து கண்ணனுடைய கதையைக் கேட்ட அவளுடைய மனம், கண்ணன் பால் சென்று விட்டது. தன்னைக் காப்பாற்றும்படி ஒரு கடிதத்தை எழுதி, அவள் உஞ்சவிருத்தி செய்யும் ஒரு பிராமணரிடம் கொடுத்து, கண்ணனிடம் சேர்க்கும் படி வேண்டுகின்றாள். பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் ஒரு குரு இருக்க வேண்டும் அல்லவா. இந்த ஸ்லோகம் ஒவ் வொன்றும் மெய் சிலிர்க்க வைப்பது. அதில் ஒரு ஸ்லோகம்:-

ச்ருத்வா குணான் புவனசுந்தர ச்ருண்வதாம் தே
நிர்விச்ய கர்ண விவரை: ஹரதோ அங்க தாபம்
ரூபம் த்ருசாம் த்ருசிமதாம் அகிலார்த்த லாபம்
த்வயி அச்யுத ஆவிசதி சித்தம் அபத்ரபம் மே

புவனசுந்தரா, அச்யுதா, உன் குணங்கள் கேட்பவர்களின் காதுகள் மூலம் உட்புகுந்து அவர் தாபத்தைப் போக்குகின்றன. கண் படைத்தவருக்கு கண் படைத்த பயன் அனைத்தையும் தருகின்றது உன் உருவம். இதைப்பற்றிக் கேட்ட என் மனம் வெட்கத்தை விட்டு உன்னிடம் சென்றுவிட்டது.

  1. பாகவதத்தில் சத்யபாமா

ருக்மணி கல்யாணம் போலவே சத்தியபாமாவையும் கண்ணன் திருமணம் செய்து கொள்ளும் வைபவம் ஸ்ரீமத் பாகவதத்தில் சுருக்கமாக விவரிக்கப்பட்டு இருக்கிறது, ஸ்யாமண்டகா என்ற வைரக்கல்லை திருப்பி கொடுத்தது; சட்ராஜித்தின் பெண்ணான சத்யபாமாவை திருமணம் செய்து கொண்டது; (10:56) காளிந்தி முதலான 5 இளவரசிகளை ஸ்ரீகிருஷ்ணா மணம் முடித்தது; (10:58). இது தவிர ராதா கல்யாணம் என்னும் வைபவம் மிகச்சிறந்த தெய் வத் திரு மணமாகக் கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் கண்ணனுடன் ராதையைத் தான் காணமுடியும்.

கண்ணனின் ஆத்ம சொரூபம் மற்றும் கிருஷ்ண ப்ரேமையின் மொத்த வடிவம் தான் ராதைவியாசரின் மத் பாகவதம் ‘‘ராதா’’ என்ற பெயரைக் கூட கூறவில்லை. அதேபோல ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் ராதாவைப் பற்றிக் கூறப்படவில்லை. அதற்கு பதிலாக நப்பின்னை உண்டு. (நீளா தேவியின் அம்சம்) ஆனால், ஸ்ரீமத் பாகவதம் எழுதிய வியாசர் பிரம்ம வைவர்த்த புராணம், பாத்ம புராணம் எழுதியுள்ளார். கண்ணனுக்கு பெயர் சூட்டிய கர்காச்சாரியார் கர்க சம்ஹிதை எழுதியுள்ளார். இவற்றில் ராதையைப் பற்றியும் ராதா கல்யாணம் குறித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். கண்ணனிடமிருந்து உதித்தவர்கள் கோபர்கள் (இடையர்கள்). ராதாவிடமிருந்து தோன்றியவர்கள் கோபிகைகள்.

இதே கருத்தை-
‘‘ஏக் பிராண தோ தேஹ
ராதா மாதவ ரூப’’
என்று இந்திப் பாடலொன்று குறிப்பிடுகிறது.

இன்றும் பஜனை சம்பிரதாயத்தில், ஸ்மார்த்த வைதீகர்கள் ராதா கல்யாணத்தை, அஷ்டபதி பாடல்களோடு ஆடிப்பாடி கோலாகலமாகக் கொண்டாடுவதைக் காணலாம். இது பிரேம பக்தியின் வெளிப்பாடு.

  1. ஆண்டாளின் திருக்கல்யாணம்

இவ்வளவும் சொல்லிவிட்டு ஆண்டாளின் திருக்கல்யாண வைபவத்தைச் சொல்லாமல் விட முடியுமா? ஒரு திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்கின்ற சடங்குகளின் வரிசையை தன்னுடைய வாரணமாயிரம் பதிகத்தில் வரிசையாகப் பாடியிருக்கிறாள். இன்று ஆலயங்களில் நடைபெறும் திருமண வைபவங்களிலும், இல்லங்களில் நடைபெறும் திருமண வைபவங்களிலும் பெரும்பாலும் இந்த வரிசைதான் பின்பற்றப்படுகிறது. ஆண்டாள் திரு மணத்தின் சிறப்பு என்ன என்று சொன்னால், இரண்டு நிலைகளில் நடைபெறும் அற்புதமான திருமணம். ஆண்டாள் காதலித்த பெருமாள் அர்ச்சாவதார ரூபியாய் இருக்கின்றான். நம்முடன் பேசாத பெருமாள் ஆண்டாளுடன் பேசுகிறான்.

அவள் சூடிய மாலையை தான் வாங்கி சூடிக் கொள்கிறான். ஆண்டாள் பெரியாழ்வாரின் பெண் பிள்ளையாக மனித உடல் எடுத்து அவதரித்த நிலையில், எம்பெருமானோடு அர்ச்சாவதாரத்தோடு இணைகின்ற அற்புதம் ஆண்டாள் திருமணத்தின் ஒப்பற்ற நிகழ்வு. ‘‘மனிதர்களுக்கு என்று என்னுடைய வாழ்க்கை கிடையாது. அந்தக் கண்ணனுக்கு தான் என் உடல், உயிர்’’ என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து காட்டி சாதித்தவள். திருப்பாவையின் நிறைவு நாளான போகி பண்டிகை அன்றும், சில இடங்களில் (தை முதல் நாள்) பங்குனி உத்திர நன்னாளிலும், ஆண்டாள் திருக்கல்யாண வைபோகம் விமர்சையாக நடைபெறுகிறது.

  1. பங்குனி உத்திர திருக்கல்யாணங்கள்

பங்குனி உத்திரம் பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்! ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்! முருகன், வள்ளியை மணக்கும் நாள்! சீதைக்கும் – இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்! பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்! பங்குனி உத்திரத்தில் தான் கோதா நாச்சியாருக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமான திருமணம் நடைபெறும். பெண் வீட்டில் நடைபெறும் திருமணம் இது. சீதா கல்யாணமும் ஜனகரின் திருமாளிகையில் தான் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் திருமணம் நடைபெற்ற பிறகு, அந்தத் திருக்கோயிலே நாச்சியார் திருமாளிகை (ஆண்டாள் கோயில்) ஆனது. பெரும்பாலும் எம்பெருமானுடைய மாலை தான் தாயாருக்குப் போகும். ஆனால் ஆண்டாள் திருக்கல்யாணத்தில் மட்டும் ஆண்டாள் சூடிய மாலை யைத்தான் பெருமாள் சூடிக் கொள்வார். தெய்வத் திருமணங்களுக்காகவே பங்குனி சித்திரை மாதங்கள். தெய்வத் திருமண உற்சவங்களில் நாமும் கலந்து கொண்டு பேரருள் பெற்று நலமோடு வாழ்வோம்.

எஸ்.கோகுலாச்சாரி

ஓவியங்கள்: வெங்கி

You may also like

Leave a Comment

eighteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi