Sunday, September 1, 2024
Home » வெல்லமாகும் 500 ஏக்கர் கரும்பு!

வெல்லமாகும் 500 ஏக்கர் கரும்பு!

by Porselvi

தென்னை, நெல், சிறுதானியம் உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களை விவசாயிகள் இப்போது மதிப்புக்கூட்டி கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்கள். ஆனால் கரும்பை மட்டும் ஏனோ பெரும்பாலான விவசாயிகள் ஆலைகளுக்கு அனுப்பி கிடைக்கும் தொகையைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருசிலர் கரும்பைப் பிழிந்து சாறாக்கி விற்பனை செய்கிறார்கள். சிலரோ வெல்லம் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் கரும்பு விளைவிக்கும் பல விவசாயிகள், அதை வெல்லமாகக் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் லெட்சுமிபுரத்தில் உள்ள வெல்லக் கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லம் பெரும்பாலும் கேரள மாநிலம் சங்கனாச்சேரி, திருமண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் தனது வயலில் கரும்பைப் பயிரிட்டு, அதனை வெல்லமாக காய்ச்சும் ஆலை நடத்தி வரும் விவசாயி பரசுராமனை சந்தித்தோம். தனது கரும்புத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள மிகப்பெரிய கிணற்றின் அருகே கரும்புத் தோகையை உலர்த்துதல், கரும்புச்சாறு பிழிதல் என பிசியாக இருந்தார்கள் தொழிலாளர்கள். மற்றொரு புறம் கரும்புச்சாற்றினை பெரிய கொப்பரையான வாணலியில் இட்டு பாகு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே நம்மிடம் பேசினார் பரசுராமன்.

“பெரியகுளம் பகுதியில் மட்டும் சுமார் 60 கரும்பு வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வெல்லம் தயாரித்த நிலை மாறி தற்போது சுமார் 500 ஏக்கருக்கும் குறைவாகவே கரும்பு விவசாயம் நடக்கிறது. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பினை வழங்குவதில்லை. நேரடியாக எங்கள் தோட்டத்திலேயே கரும்பு கிரசர் அமைத்து, கொப்பரை மூலம் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். சொந்த நிலத்தில் விளையும் கரும்பினைக் கொண்டும், விலைக்கு கரும்பு கொள்முதல் செய்தும் வெல்லம் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள். எனது தோட்டத்தில் விளையும் கரும்பினைக் கொண்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். கரும்பு சாகுபடிக்கு முதலில் கரும்பு நடவு செய்து, 90 நாட்களுக்குள் களை பறித்து, உரமிட்டு வளர்த்தால் 10 முதல் 12 மாதங்களுக்குள் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் வந்துவிடும். ஆரம்ப காலத்தில் 1036 ரக கரும்பு பயிரிட்டோம். அந்த கரும்பில் சாறு பிழிதிறன் மிகக் குறைவாக இருந்ததால் தற்போது 86032 ரக கரும்பு பயிரிட்டு வருகிறேன். இந்த ரக கரும்பில் பிழிதிறன் அதிகமாக இருக்கிறது. அதேசமயம், பழைய ரக கரும்பில் ஒரு ஏக்கருக்கு 30 டன் கரும்பு வரை வந்தது. தற்போது ஒரு ஏக்கருக்கு 20 டன் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. இதில் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. எங்கள் நிலத்தில் விளையும் கரும்பினை சாறுபிழியும் எந்திரம் மூலம் சாறு பிழிந்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் கரும்பில் இருந்து 12 ஆயிரம் படி சாறு கிடைக்கும். இதில் ஒரு கொப்பரை எனப்படும் பெரிய அளவிலான வாணலியில் 120 படி கரும்பு சாறு விட்டு நன்கு காய்ச்சினால் அதிலிருந்து வரும் பாகு மூலமாக சுமார் 85 கிலோ எடையுள்ள வெல்லம் தயாரிக்கப்படுகிறது.

இதில் 42 கிலோ எடையுள்ள மூடை ஒன்று ரூ.2 ஆயிரம் வரை விலைபோகிறது. ஆரம்ப காலத்தில் சபரிமலை ஜய்யப்பன் கோயிலில் தயாரிக்கப்படும் அரவணை பிரசாதம் தயாரிக்க லெட்சுமிபுரம் கிராமத்தில் இருந்து வெல்லம் அனுப்பப்பட்டது. தற்போது சபரிமலை கோயிலில் அரவாணை தயாரிக்க தேவையான வெல்லம் வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்வதால் இப்பகுதியில் வெல்ல விற்பனை சற்று சரிந்திருக்கிறது. இதில் வெல்லம் தயாரிக்கும் தொழிலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த பஞ்சப்பட்டி அழகுராஜா என்பவரது குடும்பத்தினர் கரும்புத் தோட்டத்திலேயே குடும்பத்துடன் தங்கியிருந்து வெல்லம் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். இதில் இடுபொருட்கள், தொழிலாளர் சம்பளம் போக வெல்லம் ஒரு குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைக்கிறது. நல்ல லாபம் கிடைத்தாலும், கரும்பு சாகுபடி செய்ய போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டதால் கரும்பு விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத நிலை இருக்கிறது. இதனால் பெரியகுளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வந்த கரும்பு விவசாயம் தற்போது 500 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி இருக்கிறது. அதேபோல, இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 60 வெல்ல ஆலைகள் இருந்தன. தற்போது 5 ஆலைகள் மட்டுமே இருக்கின்றன. தற்போதைய இளைஞர்கள் மத்தியிலும் கரும்பு விவசாய வேலை செய்வதிலும், கரும்பு வெல்லம் தயாரிப்பதிலும் ஆர்வமில்லை. வெல்லம் தயாரிக்க, கரும்புச்சாறு பிழிந்த தோகைகளைக் காயவைத்து, அதனை கொப்பரைகளில் பாகுகாய்ச்ச எரியூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. சாறுபிழியப் பயன்படும் கிரசருக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரத்தை அரசுக் கட்டணத்தில் மானியச் சலுகையுடன் அளிக்க வேண்டும்’’ என்கிறார். 

கூடுதல் லாபம்!
“எங்கள் காலத்திற்குப் பிறகு வெல்லம் உற்பத்தி செய்யும் பணிக்கு ஆட்கள் கிடைப்பது பெரிய சிரமம். இப்போதே இளைஞர்கள் வேலைக்கு வருவதில்லை. விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதனை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கரும்பை ஆலைக்கு எடுத்து சென்று விற்கும்போது கிடைக்கும் லாபத்தை விட, இதுபோல் வெல்லமாக காய்ச்சி விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பல பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க முனையும் இன்றைய இளம் தலைமுறை இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார், வெல்லம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளி பஞ்சப்பட்டி அழகுராஜா.

கரும்பு டூ வெல்லம்!
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் முக்கிய இனிப்பு வெல்லம். வெல்லம் உண்பதன் மூலம் வாதம் மற்றும் செரிமானப் பிரச்னைகள் குணமாகின்றன. மேலும் தொண்டை பிரச்னை, புழுதியால் ஏற்படும் நுரையீரல் பிரச்னைகளுக்கு வெல்லம் அருமருந்தாக செயல்படுகிறது. இத்தகைய வெல்லம் கரும்புச் சாற்றிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாற்றினை மிகப்பெரிய கொப்பரை எனப்படும் வாணலியில் திறந்த நிலையில் இட்டு, இதனை 200 டிகிரி செல்சியல் வெப்பத்தில் கொதிக்க வைக்கப்படுகிறது. அதில் உள்ள அழுக்கினை நீக்க ஹைட்ரோகுளோராக்சைடையும், கெட்டித் தன்மைக்காக சுண்ணாம்பையும் சேர்த்து சாறு பாகாக காய்ச்சப்படுகிறது. கரும்புச்சாறு கம்பி பதத்தில் காய்ச்சிய பிறகு, கொதிநிலையில் உள்ள பாகை மிகப்பெரிய மரச்சட்டத்தில் ஊற்றி, சூடு உலர்வதற்குள்ளாக அச்சு வெல்லம், மண்டை வெல்லம், மலையாள வெல்லம் என பலவகை வெல்லமாக தயாரிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi