Saturday, May 4, 2024
Home » பலாப்பழ வேட்பாளருக்கு ஆதரவாக மாயமான இலையின் பூத் ஏஜென்டுகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பலாப்பழ வேட்பாளருக்கு ஆதரவாக மாயமான இலையின் பூத் ஏஜென்டுகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘வடக்கில், கிழக்கில் கூட்டணி போட்டு சப்தம் இல்லாம வசூலை தட்டி எடுக்கும் மாநகராட்சி நகரமைப்பு பெண்மணிகள் பற்றி சொல்லுங்க..’’ என ஆவலாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில், நகரமைப்பு அலுவலர் பணியிடம் மிக முக்கியமான போஸ்ட் என்பதாலும், காசு… மணி… துட்டு…. எல்லாம் அதிகம் புரளுவதாலும் இந்த துறையில் பணிக்கு வர கடும் போட்டி எப்போதுமே நிலவும். இப்போதும் அந்த போட்டி நிலவுகிறது. நகரமைப்பு அலுவலருக்கு அடுத்த நிலையில், 5 உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருக்காங்க.. இவங்கள்ல 4 பேர் பெண்கள். இந்த 4 பெண் அலுவலர்களில் கரன்சி குவிப்பதில் யார் முதலிடத்துக்கு வருவது என்பதில்தான் கடும் போட்டி நிலவுகிறதாம்.. இந்த ரேஸில் முதலிடத்தில் இருந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட பெண் அலுவலர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டாம்.. இதன் எதிரொலியா அவர் சமீபத்தில் சோழ மண்ணுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்காரு.. ஆனாலும், அவர் போன வேகத்தில் கோவைக்கே திரும்பி வந்துவிட்டாரு.. எப்படி இது சாத்தியமானதுன்னு எல்லா அதிகாரிகளும் மூக்கின் மேல் விரல் வைத்து, ஆச்சரியப்பட்டிருக்காங்க.. உண்மை என்னவென்றால், அவர் மேலிடத்தில் 5 எல் கொடுத்து ஆர்டர் பெற்று வந்துள்ளார். வந்த வேகத்தில், உதவி கமிஷனர் ஒருவரை கைக்குள் போட்டுக்கொண்டு வசூல தட்டி எடுக்கிறாராம்.. அந்த உதவி கமிஷனரும், மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரிதான். இந்த கூட்டணி ‘வடக்கில்’ பலமாக உள்ளது. இதேபோல், ‘கிழக்கில்’ 2 பெண் அலுவலர்கள் கொண்ட கூட்டணி, சப்தம் இல்லாமல், தட்டி எடுக்குதாம்.. வடக்கு, கிழக்கு என இரு மண்டலத்தில், 4 பெண் அதிகாரிகளை மீறி எதுவும் நடப்பதில்லையாம். ‘டப்பு’ கொடுக்கலைன்னா…. பைல் டேபிளுக்கு அடியில் போய் விடுகிறதாம்.. இப்படி இந்த இரு அலுவலகத்திலும் 100க்கு மேற்பட்ட கோப்புகள் தேங்கி கிடக்குதாம்.. இதில், வரன்முறை தொடர்பான பைல்கள் அதிகம் என்கிறார்கள். அந்த 4 பேரை பகைச்சுகிட்டா எதுவும் நடக்காது என்கிற நிலைதான் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பலாப்பழ வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையில் இலைக்கட்சி பூத் ஏஜென்ட்கள் தலைமறைவாகிவிட்டதா கட்சி தலைமைக்கு புகார் போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 1,934 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்ததாம்.. இங்கு இலைக்கட்சியின் சார்பில் அக்கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் பூத் ஏஜென்ட்களாக நியமிக்கப்பட்டிருந்தாங்களாம்.. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே பூத் கமிட்டிக்குரிய செலவு பணம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் கொடுக்கப்பட்டதாம்.. ஆனால், வாக்குப்பதிவு நாளின்போது குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதி வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான இலைக்கட்சி பூத் ஏஜென்ட்கள் தலைமறைவாகிவிட்டனராம்.. வாக்குப்பதிவிற்கு முன்பாக வேட்பாளர் அறிமுகம் கூட்டம், வேட்புமனு தாக்கல், பொதுச்செயலாளர் பிரசாரம் உள்ளிட்ட காலங்களில் செலவுக் கணக்கை வேட்பாளரிடம் கறாராக வசூலித்த இலைத் தரப்பினர், வாக்குப் பதிவின்போது பலாப்பழ வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் வகையில் மவுனமாக ஒதுங்கிக் கொண்டனராம்.. இதையறிந்து அப்செட்டாகி போன வேட்பாளர் தரப்பு, கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விபத்து, ரோந்து விசாரணையை விட்டுட்டு சம்திங் வாங்குறதுல மட்டும் அக்கறை காட்டும் அதிகாரி மேல நடவடிக்கை எடுக்கணும்னு புகையுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல தேசிய நெடுஞ்சாலைய ஒட்டி, பாக்கம் என்று முடியுற காக்கிகள் நிலையம் இயங்கி வருது.. இந்த காக்கிகள் நிலையத்துல ரோந்து வாகனத்தோட சாரதியாக கடவுள் பெயரை கொண்டவரு பணிபுரிஞ்சு வர்றாராம்.. இவரு தேசிய நெடுஞ்சாலையில, ஆடு, மாடு, கோழின்னு ஏத்திக்கிட்டு போற வாகனங்களை வழிமறிச்சு சம்திங் வாங்குறாராம்.. நைட் டைம்ல மணல், வைக்கோல் போன்ற லாரிகளை மறிச்சிடுவாராம்.. ஆனா, என்எச்ல விபத்து நடந்தா, அவ்வளவு சீக்கிரத்துல போகவே மாட்டாராம்.. மத்த டீம் காக்கிகள் போயி விசாரணை முடிஞ்ச பின்னாடித்தான் இவர் ஸ்பார்ட்டுக்கு போவாராம்.. அட ரோந்து பணியையாவது சரியா செய்வாரான்னு பார்த்தா? அதையும் செய்றதில்லைன்னு புகார் சொல்றாங்க.. நல்ல நிழலான மரத்துக்கு கீழ வாகனத்தை நிறுத்திவிட்டு உறக்கத்தை போடுவாராம்.. ஆனா, வாகனத்தை வழிமறிச்சு சம்திங் வாங்குறதை மட்டும் சரியா செய்றாராம்.. உயர் அதிகாரிங்க திடீர் நைட் ரவுண்ட்ஸ் போயி, இதுபோல காக்கிகள் மேல நடவடிக்கை எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூவ முழம்போட்டு பார்த்துருக்கோம், பொய்யைக்கூட முழம் கணக்கில் அள்ளிவிடும் எம்எல்ஏவ தெரியுமா?..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகரில் வடிகால் வசதி இல்லையாம்.. இதனால் மழை காலங்களில் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகரில் உள்ள வீடுகளில் மழைநீர் உட்புகுந்து மக்கள் தத்தளிக்கும் அவலநிலை நீடித்து வருகிறதாம்.. இப்பிரச்னையை தீர்க்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழைநீர் வாய்க்கால் அமைத்துதர வேண்டும்னு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் முழம்குமார் சட்டசபையில் வலியுறுத்தி வந்திருக்காரு.. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு, முழம்குமார் எம்எல்ஏ வேளாங்கண்ணி சென்று மாதாவுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டாராம்.. இதற்கு ஒரு காரணத்தை கூறி தொகுதி மக்களை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறாரு.. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழைநீர் வடிகால் பணி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிவிட்டது. இதனால் ஆதரவாளர்களுடன் வேளாங்கண்ணி சென்று முடி காணிக்கை செய்ததாக கூறியிருக்கிறாரு.. ஆனால், எதிர்க்கட்சிகளோ செயல்படுத்தாத திட்டத்தை நிறைவேற்றிவிட்டதாக கூறி தொகுதி எம்எல்ஏ மக்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டுறாங்க.. இதற்கிடையே மற்றொரு தரப்பினர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளரான நமச்சிவாயம் வெற்றி பெற்றால், அவரது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார். அதன் பிறகு, அந்த அமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும்னு என்ற எண்ணத்தில்தான் வேளாங்கண்ணி சென்று மொட்டை போட்டு இருப்பார். இந்த ரகசியம் வெளியே கசியாமல் இருக்க, மழைநீர் வடிகால் வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றியதற்காக முடி காணிக்கை செய்தேன்னு கம்பி கட்டுற கதையெல்லாம் முழம்குமார் எம்எல்ஏ கூறுவதாக கலாய்த்து வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

eighteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi