Thursday, May 9, 2024
Home » ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்

ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்

by Mahaprabhu

லக்னோ: ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி தோல்வி கண்டிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும். ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக் சிறப்பாக ஆடி வருகின்றனர். இவர்கள் லக்னோவின் பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும்.

இவர்களுடன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், துருவ் ஜூரல் ஆகியோரும் அதிரடியில் இறங்கினால் கூடுதல் வலுப்பெறும். பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த டிரென்ட் போல்ட், ஆவேஷ்கான், சந்தீப் சர்மா, சாஹல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். மும்பைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய சந்தீப் சர்மா, லக்னோவின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுப்பார். இந்த போட்டியில் லக்னோ அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதோடு, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காண்பதிலும் கவனம் செலுத்தக்கூடும். லக்னோ அணி நடப்பு சாம்பியனான சிஎஸ்கே.வை தொடர்ச்சியாக இரு போட்டிகளில் வீழ்த்திய உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி மார்கஸ் ஸ்டாய்னிஸ் விளாசிய 124 ரன்களின் உதவியால் வெற்றி கண்டிருந்தது. குயின்டன் டி காக், கே.எல்.ராகுல், ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா என பேட்டிங் பலம் உள்ளது.

வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவர், களமிறங்கும் பட்சத்தில் அணியின் பந்து வீச்சு கூடுதல் வலுப்பெறும். இதுபோல் முன்னதாக டெல்லியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹர்திக்பாண்டியா தலைமையிலான மும்பை அணி பலமான பேட்டிங் வரிசையை வைத்திருந்தாலும் 8 போட்டிகளில் ஆடி 3 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கான கனவில் நீடிக்க முடியும். எனவே இன்றைய போட்டியில் மும்பை வெற்றிக்காக வரிந்துகட்டும். அதே நேரத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி கடந்த போட்டியில் குஜராத்தை துவம்சம் செய்தது. டெல்லி 9 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்று மும்பையை வீழ்த்தி பட்டியலில் அடுத்த படிக்கு செல்ல டெல்லி முயற்சிக்கும்.

You may also like

Leave a Comment

11 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi