சென்னை: தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் என்ற உயர்கல்வி உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, இளங்கலை மருத்துவம், இன்ஜினியரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனால்மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-22ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 8 ஆக இருந்த நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் இதன் எண்ணிக்கை 91 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது.
இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 806 பேரும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 711 பேரும், மீதமுள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள். பள்ளி அளவில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வறுமையின் காரணமாக பள்ளிக்கு பிறகு, உயர்கல்விக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்படும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதத்தை இந்த திட்டம் குறைக்க உதவுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.