Monday, June 17, 2024
Home » கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-தொற்றும் மதுவும் புகையும் கண்ணுக்குப் பகை!

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-தொற்றும் மதுவும் புகையும் கண்ணுக்குப் பகை!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

மெர்சி 50 வயதான ஆசிரியை. சில மாதங்களுக்கு முன்பாக என்னிடம் காய்ச்சல், ஜலதோஷத்திற்கென சிகிச்சைக்கு வந்தார். அப்பொழுது வைரஸ் காய்ச்சல் சீசன். தினமும் இதே அறிகுறிகளுடன் பல நோயாளிகள் வந்த நேரம். மெர்சிக்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை அளித்துவிட்டு வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் திரும்பி வாருங்கள் என்று கூறியனுப்பினேன். நான்கு நாட்கள் கழித்து வந்தவர் வலது கண்ணை அசைக்கும் பொழுது லேசாக வலி இருப்பதாகவும், குறிப்பிடத் தகுந்த அளவில் பார்வையில் குறைபாடு தோன்றுவதாகவும் கூறினார். மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை.

அவரது பார்வையை பரிசோதனை செய்ததில், முன்னதாக ஸ்நெல்லன்ஸ் அட்டையில் (Snellen’s Chart) கடைசி வரி வரை கண்ணாடி இல்லாமல் படிக்கக் கூடியவரால் இப்பொழுது வலது கண்ணில் மூன்று வரிகளை மட்டுமே படிக்க முடிந்தது. முறையாகக் கண்களுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகளை மேற்கொண்டேன். டார்ச் ஒன்றின் உதவியுடன் கண்களைப் பரிசோதித்ததில் வலது கண்ணின் கண்மணி சுருங்கி விரிவதில் லேசான மாற்றம் தெரிந்தது.

நம் கண்களின் மேற்பரப்பில் டார்ச்சால் வெளிச்சத்தைப் பாய்ச்சும் பொழுது கிருஷ்ண படலத்தின் நடுவில் இருக்கும் ஓட்டை (pupil) சுருங்கி விரிவதைப் பார்த்திருப்பீர்கள். அடுத்த கட்டமாக swinging flash light என்ற இன்னொரு எளிய பரிசோதனையைச் செய்தேன். இதில் டார்ச்சால் இரண்டு கண்களிலும் மாற்றி மாற்றி வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். நான்கைந்து முறை தொடர்ந்து அவ்வாறு செய்கையில் வலது கண்ணின் கண்மணி சுருங்குவதற்குப் பதிலாக விரிவடைந்தது. இது ஒரு மிக முக்கியமான அறிகுறி.

நாம் காணும் காட்சிகளை கண்ணின் விழித்திரையிலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லக்கூடிய முக்கிய நரம்பான ஆப்டிக் நரம்பில் (optic nerve) ஏதோ ஒரு கோளாறு இருப்பதை இந்த அறிகுறி நமக்குக் காட்டுகிறது. மீண்டும் ஒரு முறை அந்த அறிகுறியை உறுதிப்படுத்திக் கொண்ட பின் விரிவான விழித்திரை பரிசோதனையில் ஈடுபட்டேன். வலது கண்ணின் ஆப்டிக் நரம்பு துவங்கும் பகுதியான optic discல் வீக்கம் காணப்பட்டது. இடது கண் நரம்பு சீராகவே இருந்தது. நரம்பியல் பகுதி உள்ளிட்ட உடலின் பிற முக்கிய பகுதிகளையும் பரிசோதித்தேன். அனைத்தும் சரியான முறையில் இருந்ததை உணர முடிந்தது. அவருக்கு ஏற்பட்டிருப்பது ஆப்டிக் நரம்பின் அழற்சி (optic neuritis) என்ற முடிவுக்கு வந்தேன்.

நம் உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் அழற்சி ஏற்படக் கூடும். இதற்கு கிருமித் தொற்று, தன்னுடல் தாக்கு நோய்கள், ஒவ்வாமைகள், சில மருந்துகள், வேதியியல் பொருட்கள் இவை காரணமாக அமையலாம். சில வகையான அழற்சிகளுக்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாது (idiopathic). மெர்சிக்கு சமீபத்தில் வந்து விட்டுப் போன வைரஸ் காய்ச்சலின் எதிர்வினையாக உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அது ஆப்டிக் நரம்பை பாதித்திருக்கிறது.

மேலை நாடுகளில் மிக அதிகமாக காணப்படும் ஒரு நோயான மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் என்ற நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாகவும் ஆப்டிக் நரம்பின் அழற்சி இருக்கக்கூடும். இந்த நோய் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இரண்டு லட்சத்தில் ஒரு நபரை பாதிக்கக்கூடிய ஒரு தீவிரமான நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டால் அதில் 15-20% பேர் தங்கள் நோயின் முதல் அறிகுறியாக ஆப்டிக் நரம்பின் அழற்சி தோன்றியதைக் கூறுவார்கள். கூடவே நீண்ட நாளாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தங்கள் ஆப்டிக் நரம்பு பாதிக்கப்பட்டதையும், சிலர் அதனால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதையும் சொல்வார்கள்.

ஒப்பீட்டளவில் நம் நாட்டில் மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் பிரச்சினை மிகக் குறைவே. அதனால் தனிப்பட்ட முறையில் ஆப்டிக் நரம்பு அழற்சி மற்றும் தோன்றினால் Neuromyelitis optica போன்ற வேறு சில நோய்கள் இருப்பதற்கான வாய்ப்பையும் பரிசீலிக்க வேண்டும்.

எந்த விதமான அழற்சி நோய்க்கும் ஸ்டீராய்டு மருந்துகளே முக்கிய சிகிச்சை முறைகளாக இருக்கின்றன. குறிப்பாக ஆப்டிக் நரம்பு அழற்சியில் உடனடியாக இவை பயன்
படுத்தப்பட்டால் வியக்கத்தக்க முன்னேற்றங்களைப் பார்க்கலாம். எனவே மெர்சிக்கு உடனடியாக ஸ்டீராய்டு மருந்துகளை ஆரம்பித்தேன். அவர் வந்தது ஒரு மாலை நேரத்தில். அதனால் அப்பொழுதும் மறுநாள் காலையிலும் ஸ்டீராய்டு மருந்துகளை செலுத்தி விட்டு நரம்பியல் நிபுணரையும் பார்க்குமாறு அறிவுறுத்தினேன்.

எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை விரிவாக செய்த பின் நரம்பியல் மருத்துவரும் அதே பிரச்சனையே உறுதி செய்தார். 15 முதல் 20 நாட்களுக்குள் அழற்சி வெகுவாகக் கட்டுப்பட்டிருந்தது. அவருடைய பார்வைத் திறன் ஸ்நெல்லன்ஸ் அட்டையில் மூன்று வரிகளைப் படிப்பதில் இருந்து ஆறு வரிகள் வரை வாசிக்க முடிவதாக முன்னேறியிருந்தது. தற்போது வரை அவர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். உடலின் வேறு பகுதிகளில் எங்கும் நரம்பியல் அழற்சி இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

லேசான காய்ச்சல், அடுத்து பார்வை குறைபாடு, அடுக்கடுக்கான பரிசோதனைகள் என்று வந்ததில் மெர்சி மிகவும் பயந்துவிட்டார். அவருக்கு நோயின் தன்மையை விளக்கி, நம் நாட்டைப் பொருத்தவரை இதே பிரச்சனை திரும்ப வருவதற்கோ அல்லது பிற நரம்புகளையும் பாதிக்கும் அளவிற்கு தீவிரமாக மாறுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு. வந்தாலும் சரி செய்து கொள்ளலாம் கவலைப்படாதீர்கள் என்று ஆசுவாசப்படுத்தினேன். கூகிளின் புண்ணியத்தால் multiple sclerosis குறித்தும் கேள்விப்பட்டிருப்பார் போலும் ‘மூளை நரம்பு எல்லாமே தேஞ்சிடும், ஆளை மொத்தமா முடக்கிப் போட்டுரும்னு சொன்னாங்களே?’ என்றார் பயம் விலகாத குரலில். சிகிச்சை துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆயிற்று இன்னும் வேறு எந்த நரம்பும் பாதிக்கப்படவில்லை.

எப்போதாவது வந்து விடுமோ என்று தினமும் கவலைப்பட வேண்டாம். இருபது வருடத்திற்கும் மேலான என்னுடைய மருத்துவ அனுபவத்தில் multiple sclerosisஆல் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்களும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தாலும் தன் முழு வாழ்நாளையும் நலமாகக் கழித்து வேறு காரணங்களால் தான் இறந்து போனார்கள் என்று கூறினேன். அதன் பின்பே அவரது முகம் சற்றே தெளிந்தது.

அழற்சி மட்டுமல்லாது ஆப்டிக் நரம்பை பிற வியாதிகளும் தாக்கக் கூடும். சிலபல காரணங்களால் ஆப்டிக் நரம்பிற்குப் போகும் ரத்த ஓட்டம் தடைபடும் நிலையை ischemic optic neuropathy என்று கூறுவோம். ‘‘கள்ளச்சாராய சாவுகள் நூறைத் தாண்டின! கண் பார்வை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்தது!” போன்ற செய்திகளை அவ்வப்போது கேட்கிறோம் அல்லவா? கள்ளச்சாராயத்தில் கலந்திருக்கும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் நம் உடலில் நுழைந்து அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் வேதிப்பொருட்களாக மாறுகின்றன.

அது முதன் முதலில் பாதிக்கக்கூடிய பகுதி கண்களின் ஆப்டிக் நரம்பு. முதலில் பார்வைக் குறைபாடு ஏற்படும், உடனடியாக சிகிச்சை அளித்து விட்டால் ஓரிரு மணி நேரங்களில் அந்தப் பிரச்சனையை சரி செய்துவிட முடியும். தாமதமாகும் மற்றும் மெத்தனாலின் அளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் உயிரிழப்பிலும் கொண்டு போய்விடலாம். இதை toxic amblyopia என்று கூறுவோம். அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கத்தாலும் பலருக்கு ஆப்டிக் நரம்பு பாதிக்கப் பட்டுள்ளது (tobacco amblyopia).

இது தவிர பல நுண்ணுயிர் தொற்றுக்கள், சில விதமான மருந்துகள், பணியிடங்களில் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்கள் இவற்றாலும் ஆப்டிக் நரம்பு பாதிக்கப்படக்கூடும். கிருமித் தொற்றுக்களைப் பொருத்தவரை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைக்கிருமிகள், ஒட்டுண்ணிகள் இப்படி பலதரப்பட்ட நுண்ணுயிரிகளின் பாதிப்பிற்குப் பின்னால் கண்ணின் ஆப்டிக் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. மருந்துகளை எடுத்துக் கொண்டால் இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டாலிஸ், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் சில, காச நோய்க்கு பயன்படுத்தும் ஓரிரு மருந்துகள் என்று அந்தப் பட்டியலும் வெகு நீளம். அரிதாக சிலருக்கு அதிகபட்ச வைட்டமின் பி12 குறைபாட்டிலும் கண்ணின் ஆப்டிக் நரம்பு பாதிக்கப்படக்கூடும்.

நான் கண் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது புதிதாகத் திருமணமான பெண் ஒருவருக்கு திடீரென்று மேலே கூறிய ஆசிரியைக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகள் தோன்றின. தொற்றுகள், மருந்துகள் உள்ளிட்ட வேற எந்த தொந்தரவும் இல்லை .உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து ஸ்டீராய்டு மருந்துகளைத் துவங்கினோம். ஓரிரு நாட்களுக்கான சிகிச்சைக்கு பின் அவருக்கு பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

காரணத்தை கண்டுபிடிப்பதற்காக பிற பரிசோதனைகளை செய்கையில் அவர் கருவுற்றிருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சில உடலியல் மாற்றங்களால் கண் நரம்பு அழற்சி நிகழ்ந்திருக்க கூடும் என்று யூகம் செய்தோம். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்ததால் குழந்தைக்கு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டிருக்கிறதா என்ற வகையில் அவரைத் தொடர்ந்து கண்காணித்தோம். சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்த பின்னும் கூட தொடர் பரிசொதனைக்காக எங்களிடம் வந்திருந்தார் அந்த இளம் தாய்!

You may also like

Leave a Comment

fourteen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi