விசாகப்பட்டினம்: 8 இந்தியர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு கத்தரிடம் பேச வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவரான கமான்டர் சுகுநகர் பகாலாவின் உறவினர் கல்யாண சக்கரவர்த்தி என்பவர் விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். வாழ்வாதாரத்திற்காக கத்தார் சென்ற பணியாற்றிய இந்தியர்கள் மீது உளவு பார்த்ததாக கத்தார் கூறும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு கத்தாரிடம் பேச வேண்டும் என்றும் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்களான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியவர்கள் கத்தார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு இவர்களை கைது செய்த கத்தார் அரசு தங்கள் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி பற்றிய தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக கூறி தனிமை சிறையில் அடைத்து ரகசியமாக விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இந்தியர்கள் 8 பேருக்கும் கடந்த வியாழன் அன்று கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி பரபரப்பு வழங்கியிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.